Saturday, March 12, 2005

தாழ்மையானதோர் வேண்டுகோள்!

அன்புமிகு வலைப்பூ சோதர சோதரிகளே!

அண்மையில் வலைப்பூ வாயிலாக நாம் எவற்றையெல்லாம் அடையலாம் என்ற வினாவுடன் கூடிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதன் தொடர்ச்சியாக ஒரு நீண்ட கட்டுரையை எழுதி வலைப்பூவில் உள்ளிட வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் நான் சற்றும் எண்ணிப்பாராத வகையில் இப்படி ஒரு உள்ளீட்டை எழுத வேண்டி வரும் என எதிர்பார்க்கவில்லை. வலைப்பூக்களின் பயன் இதுவென நாம் எண்ணியிருந்தவைகளின் எண்ணிக்கையில் ஒன்றை உயர்த்திக்கொள்ளவும், அதனுடன் சேர்த்து நம் உள்ளத்தையும் சற்று உயர்த்திக்கொள்ளவும் இவ் உள்ளீட்டை இட விழைகிறேன்.

18-03-2005 குங்குமம் வார இதழில் மெகா ஜனங்களே என்ற விவேக் அவர்கள் எழுதியிருக்கும் தொடரைப் படித்தேன். அதைப் படித்தவுடன் என் இதயத்தில் வேதனைச் சுழி மையமிட்டு விட்டது. பார் போற்றும் புலவன் பாரதி தொடங்கி, புலமைப்பித்தன் இடைநின்று, சமீபத்தில் சாலை விபத்தில் திடீரென மரணமெய்திய சு.சமுத்திரம் ஈறாக இலக்கியவாதிகளின் வாழ்வில் ஏற்பட்ட துயர்மிகு நிலையை படிக்கின்ற போது விவேக் அவர்களின் வேதனையில் சாரமிருக்கிறது என உணர முடிந்தது. சம காலத்தில் வாழும் புலவர்களை, சிந்தனைவாதிகளை, இலக்கியவாதிகளை போற்றுவதிலும் அவர்கள் துயருறும் காலத்தில் உதவிக் கரம் நீட்டுவதிலும் நாம் சற்று குறைபாட்டோடுதான் நடந்து கொள்கிறோம். ஆனால் அப்படிப்பட்டவர்களின் மறைவுக்கு பின்னால் அவர்களை வானளாவ போற்றுவதில் மட்டும் எந்த குறையும் வைப்பதில்லை. தமிழர்களாகிய நம்மைப் பற்றிய இந்த உண்மை சற்று சுடத்தான் செய்கிறது. இந்த கறையை சற்றேனும் கழுவ முனைவதில் நாம் அனைவரும் சற்று மேம்பட்டு நிற்க விரும்பியே உங்களிடத்தில் என் பணிவான அன்புநிறை இவ் வேண்டுகோளை வைக்கிறேன். இது பிழை என எண்ணுவோர் உளமாற என்னை மன்னிக்கவும்.

“வார்த்தை சித்தர்” என்று எல்லோராலும் போற்றப்பட்ட வலம்புரிஜான் இன்று உடல் நோயால் மட்டுமின்றி பொருளாதார குறைபாடு எனும் பெரு நோயாலும் தாக்குண்டுத் தவிக்கிறார். கவிஞர் திரு வைரமுத்து அவர்களும் விவேக் அவர்களும் தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். இன்னும் சிலரும் உதவியிருக்கலாம், வெளி உலகுக்கு தெரிய வரவில்லை. வலம்புரியாரின் அரசியல் வாழ்விலும் மற்ற பிறவிலும் முரண்பாடு காண்போர்கூட அவரது அறிவுசார்ந்த ஆற்றலை, அவர் ஆற்றிய உரைகளின் இலக்கியச் செறிவை மறுக்க மாட்டார்கள். அவர் அரசியல் வாழ்வு பிழைப்பட்டது என முழுதாய் முடிவுக்கு வரவும் தயக்கமாக உள்ளது. அப்படி முழுதும் பிழையெனில் இன்று பொருளாதாரத் துயரில் ஏன் அவர் உழலவேண்டும்? ஒருவேளை இற்றை நாள் அரசியல் வாதிகளின் ஒரே திறமையான அரசியலின் வாயிலாக மிகுந்த பொருளை ஈட்டி தன்னை வளமாக்கிக் கொள்ளும் அந்த திறமையில் அவர் குறைப்பட்டுத்தான் இருந்தாரோ? அவ்வாறாயின் அதுவே அவரது நிறையாகி விடும். எதுவாயினும் விவாதத்திற்கு இது பொழுதல்ல


அவருக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவென அந்த குங்கும் இதழ் விவேக் தொடரில் ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று(12-03-2005) அதில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவரது மருமகன் அவர்கள் அவரது தற்போதைய நிலையை கூறினார்கள். அது இன்னும் துயரமாக இருந்தது. அவர்களிடமிருந்து கீழ்கண்ட முகவரியைப் பெற்றேன். எனவே அன்பர்களே! இயன்றோர் கீழ்கண்ட விபரங்களை பயன்படுத்தி, இயன்ற சிறிய அளவிலேனும் அவரது “இடுக்கண் கலைய” முயல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, அத்தகைய நல்லோர் அனைவர்க்கும் தமிழ் சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தொலைபேசி எண்: 0091-044-26494234
முகவரி:
வலம்புரிஜான்
12 விஜிஎன் அவன்யூ
குமணன் சாவடி
சென்னை – 600 056

4 comments:

சுந்தரவடிவேல் said...

வருத்தமாயிருக்கிறது. நிச்சயமாக வலைப்பதிவர்கள் சார்பாக ஏதேனும் செய்ய வேண்டும். எப்படிச் செய்வதென்று அனைவரது கருத்துக்களையும் எதிர் பார்ப்போம். ஒவ்வொரு நாட்டிலுமிருப்பவர்கள் ஒருங்கிணைந்து செய்தால் சுலபமாக இருக்கும்.

Mannai Madevan said...

திருமிகு சுந்தரவடிவேல் அவர்களே!
கால தாமதத்தை தவிர்க்க, தங்களால் இயன்றதை பணவிடையாக
“வலம்புரிஜான்” என்ற பெயருக்கு எடுத்து கட்டுரையில் கண்ட
முகவரிக்கு அனுப்புவது நலமாக இருக்குமோ என எண்ணுகிறேன்.

தங்கள் உணர்வுக்கு நன்றி.
அன்புடன்
மன்னை மாதேவன்.

சுந்தரவடிவேல் said...

இது தொடர்பான எனது பதிவு:
http://sundaravadivel.blogspot.com/2005/03/blog-post_13.html

ஜோ/Joe said...

தகவலுக்கு நன்றி..நம்மால் முடிந்ததை செய்வோம்.