வல்லான்மை மிக்க வலைப்பதிவு வலைஞர்களே!
உங்கள் இதயங்களை சற்று நேரம் எனக்கு கடனாகத் தாருங்கள். நம் எழுத்துக்களால் இந்த உலகையே மாற்ற விரும்பும் நாம் நம்மைப் பற்றியும் சிறது சிந்திக்க உங்கள் இதமான இதயங்கள் எனக்கு இன்று அவசியமாக தேவைப்படுகிறது. நம்புங்கள், சற்றைக்கெல்லாம் அவைகளை மீண்டும் உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன்.
வலைஞர்களான நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று பலப்பல எண்ண மலர்கள் வண்ண மலர்களாய், வாச மலர்களாய் மலர்ந்திருக்கின்றன. நாளும் நாளும் புதிது புதிதாய் மலர்ந்தும் வருகின்றன. தொகை தொகையாய் பவனி வரும் அந்த எழுத்து மலர்கள் ஒவ்வொன்றையும் வகைப் பிரித்தால், அதில்தான் எத்துனை எழுச்சிக் கருத்துக்கள், புரட்சிக் கருவூலங்கள், கால காலமாக மனத்தில் எழுதப்பட்டிருக்கும் மறுக்களை, ஒருநொடியில் மாற்றிவிட முடிந்த சிந்தனைச் சிதறல்கள்? இதுகாறும் நமக்கு எட்டா கனியாய் நின்ற எத்துனைச் செய்திகள்,
மறைக்கப்பட்ட வரலாறுகள், மறுதளிக்கப்பட்ட தீர்ப்புகள், இன்று ஆதாரப்பூர்வ ஆவணங்களாய், அறிவார்ந்த களஞ்சியங்களாய் நம் கரங்களில் தவழ்கின்றன. இந்தக் கனிகளை மந்திரத்தில் பறித்தவர் எவர். உழைப்பில்லா ஊதியங்களா இவைகள்? எப்படி சாத்தியமானது இது?
வலைத்தளம், கருத்துகளுக்கு கட்டுகளை இடும் கயவர்கள் இல்லாத வானவெளி. சுத்தமான காற்றை சுவாசிக்க நமக்கு கிடைத்த ஓசோன் படராத பூமி. இந்த எல்லையில்லா பரந்த வெளியில், எவர் துணையுமின்றி, நாம் “எண்ணிய எண்ணியாங்கு” இயம்பிட இயலும். இங்கு மட்டுமே சுதந்திரம் நம் பிறப்புரிமை. ஆனால் போராடி பெறாத எந்த சுதந்திரத்தின் மதிப்பும் எளிதில் உணரப்படுவதில்லை என்பார்கள். நாமும் வலைத்தளம் நமக்கு அளிக்கின்ற இந்த சுதந்திரத்தின் முழு புரிதலுமின்றி நம் பயணத்தை தொடங்கி விடுவோமோ என ஐயம் எழுகிறது. ஏகாந்த நேரத்தில் ஏன் இந்தக் கவலை என்றுதானே கேட்கிறீர்கள்?
வலைத் தளத்திலும் சில வல்லூறுகள் வட்டமிட தொடங்குகின்றன. வலைத்தளத் தோட்டத்தில் மலர்களுக்கு நடுவில் களைகளும் காலூன்ற துடிக்கின்றன. அவைகள் எந்த உருவில் வர துடிக்கின்றன என்பதற்கு உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் கூறுகிறேன். அவைகள் இங்கும் எழுத்துக்களுக்கு சாதி நிறம் பூசத் துடிக்கின்றன. நல்ல வேளை இது ஒரு தொடக்கம்தான். இதுவே சரியான சமயம். இன்று நாமே சிந்தித்து நம்மில் நிலவும் சிலபல குறைகளை நீக்கிக்கொள்ள தலைப்படாவிடில், நாளை காலம் கடந்த ஞானம் வெறும் கண்துடைப்பாய் மாறிவிடும்.
வலைபதிவாளர் என ஓரினமாய் நிற்கும் நம்மில் இவர் இன்னார் என இனம் பிரிக்க தலைப்பட்டு விட்டால் இறுதியில் என்ன மிஞ்சும். வெறும் குப்பை கூலங்கள்தான் மிஞ்சும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. இவை குறித்து இந்த தருணத்தில் கருத்தொருமித்த முடிவுகள் எடுக்கப்படவில்லையானால் எதிர் வரும் காலத்தில், வலைத்தளம் என்பது ஒர் இயக்கம் என்ற உயரிய நிலை மாறி வெற்றோசை கூட்டம் என்ற நிலை தோன்றிவிடும். நாம் இயக்கமாக ஏன் மாற வேண்டும் கூட்டமாகவே இன்னும் சுதந்திரத்துடன் இருந்துவிட்டு போவோமே என எண்ணுவோர் சற்று சிந்திக்க வேண்டும்.
இயக்கம் என்பது பல மூலகங்கள் சேர்ந்தாலும், அவை இரசாயன மாற்றம் அடைந்து, ஒவ்வொன்றும் தன் தனித்தன்மை மறைந்து ஒரு கூட்டுப்பொருளாய்(COMPOUND) உருவாவதை பேன்றது, வலுவானது, எளிதில் பிரிக்க இயலாதது, பயன்மிக்கது. மாறாக கூட்டமென்பது பல பொருள்களின் கலவை(MIXTURE) மட்டுமே. என்னதான் சேர்ந்திருந்தாலும் ‘தாமரை இலை தண்ணீர்’ போல் ஒட்டுதலற்ற நெறி சார்ந்தது. இதில் எதை நாம் விரும்புவது? எதை தேர்வு செய்வது?
உலகில் தோன்றிய இயக்கங்கள்தான் சாதனை களங்கள். முற்போக்கு சிந்தனையும், அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் தரத்தக்க தொடர் முயற்சியும் கூடிய தளங்கள். அங்கு ஒருவித போராட்டம் என்றும் இருந்துகொண்டே இருக்கும். அதன் எல்லாப் பணிகளும் ஒரு நோக்கம் சார்ந்த நகர்வாய் இருக்கும். சரி இயக்கமாக மாற வேண்டும் என்றால் எல்லாவற்றிலும், எல்லாவற்றுக்கும் ஒத்து போதல் என்பதா பொருள்? அல்ல அது தெளிவற்ற போலி.
கருத்துக்களுடான மோதல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அது தடுக்க தேவையில்லாத ஒன்றும் கூட. மோதல் என்பதுதான் இயங்கிக் கொண்டிருப்பதற்கான உயிரோட்ட சான்று. எனவே சில தர்க்க வாதங்களில் பின்னூட்ட போர்கள் அனல் பறக்கும் போர்க்களமாக மாறி விடுவதில் தவறில்லை. அப்பொழுதுதான் வாசகர்களிடம் ஒரு எரிமலையை தோற்றுவிக்க முடியும். எழுத்தில் ஒரு தட்டை தன்மைகள் மாறி உயிரோட்டம் நிலவும்.
இந்த மோதல் எங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது? எங்கு கருத்து மோதல் தனி மனித மோதலாய் மாறுகிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. எங்கு அடிப்படைப் பண்பாடுகளும் நாகரீகங்களும் காற்றில் பறக்கவிடப் படுகிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. எங்கு பிறர் சுதந்திரத்திற்கு விலங்கிட முயல்கிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. என் சுதந்திரம் என்பது ‘என் கைவீச்சு பிறர் மூக்கை உரசாதவரை’ என்ற தெளிவு பிறந்துவிட்டால் எந்த மாச்சர்யங்களுக்கும் இடமில்லை.
நவீன இயற்பியலின் நாயகர்களாக திகைபவர்களில் ஒருவரான விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் அவர்கள், முப்பது வருடங்களுக்கு முன் அறிவியல் முரண்பாடு நிறைந்த கருப்புவளை (BLACK-HOLE) குறித்த ஆய்வறிக்கையை உலகுக்கு வழங்கினார். அவர் இன்று தன்னால் முன்மொழியப்பட்ட கருத்துகள் தவறானது என முப்பது வருடங்களுக்கு பின் ஏற்று புதிய கருத்துக்களை உலகுக்கு வழங்குகிறார். கருத்து மாற்றங்கள் விஞ்ஞானத்தில் சாத்தியமாவதுபோல் மெய்ஞானத்திலும் சாத்தியமானதே.
இந்த தெளிவைப் நாம் பெற்றால் நம்மிடையே நடைபெறும் கருத்து மோதல்கள் குறிபிட்ட அந்த கருத்தோட்டத்தில் ஒரு தெளிவு பிறப்பதற்கான வழி முறைகளாக மாறிவிடும். அப்பொழுது இது பிறரால் போற்றப்படுவதோடு மட்டுமல்லாமல் சமுதாய பயன்மிக்கதாயும் மாறிவிடும். இன்னும் சில விவாதங்கள் உண்டு. அவைகள் கோழியா முட்டையா போன்ற விவாதங்கள். அவைகள் என்றும் நிலைத்திருப்பன. ஏதோ இன்றே அவை அனைத்திற்கான தீர்வையும் நாம் கண்டுவிட இயலும் என்பதைப் போன்ற மாயையில் சிக்கி கால விரயம் நட்பு விரயத்திற்கு இடமளிக்காமல், இவற்றில் நாம் விரும்பும் கருத்துக்கு வலுவுட்டத்தக்க செய்தியை மட்டும் பதிவு செய்துவிட்டு நாசுக்காக விலகிவிடுவதே நலமானது. இது தப்பித்தலா? தெளிவா? நாம் இதில் சற்று விவாதித்து தெளிவோமே!.
இதன் தொடர் சிந்தனையை நாளை தொடர்வோமா?
3 comments:
தெளிவான அணுகுமுறையுடன், பிரச்சனையின் தீவிரத்தை விளையும் சமயத்திலேயே எடுத்துச்சொல்லி இருப்பது நிறைவத்தருகிறது.
இதுவரை என்னுடைய அணுகுமுறை - மோதல் உருவாக்கும் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாகவே இருந்தது.
பல முறை, மிகவும் உசுப்பிவிடும் எழுத்துக்களைப் பார்த்தும் பின்னூட்டம விடாமல் அமைதி காத்திருக்கிறேன். வேறொறு சமயம் இதைப்பற்றி, பலமான சான்றுகளும், தீர்வுகளும் கிடைக்கும் பட்சத்தில் எழுதலாம் என்று.
பல சமயம் மற்றவர்களின் கருத்துப்பார்வையிலிருந்து பார்த்தால், மோதல்களைத் தவிர்க்கலாம். மற்றவர்களின் பார்வையை புரிந்துகொண்டு சுமூகமான தீர்வை எட்டலாம்.
மற்றவர்களுடன் சுமூகமாக எதற்காகப்போக வேண்டும்?, மற்றவர்கள் இல்லாமல், நானும் என் தரப்பினர் மட்டும் போதுமே என்ற எண்ணமும் இந்த பொறுபற்ற எழுத்துக்களுக்கு காரணமாகும்.
சுமூகம் எதற்குத் தேவை என்பதையும் நீங்கள் விளக்கிவிட்டீர்கள்.
நன்றி.
Madev sir,
Unaga katturaiya padiththen, romba arumaiya yezhuthi irrukeenga.. hat of to you
udayan
Post a Comment