Friday, February 11, 2005

எழுதுகோல்!

- மன்னை மாதேவன்

அமுதம் சொரியும் எழுதுகோல்.
அழுக்கை நிறைக்கும் எழுதுகோல்.
அள்ளிக் கொடுக்கும் எழுதுகோல்.
அனைத்தும் பறிக்கும் எழுதுகோல்.

இன்பம் பயக்கும் எழுதுகோல்.
இதயம் கிழிக்கும் எழுதுகோல்.
உணர்வை உமிழும் எழுதுகோல்.
உண்மை மறைக்கும் எழுதுகோல்.

உதிரம் வடிக்கும் எழுதுகோல்.
உயிரைக் குடிக்கும் எழுதுகோல்.
உழைப்பை உயர்த்தும் எழுதுகோல்.
உழையா நெறிக்கும் எழுதுகோல்.

எண்ணம் தூண்டும் எழுதுகோல்.
எழுத்தை சிதைக்கும் எழுதுகோல்.
ஏழ்மை அகற்றும் எழுதுகோல்.
எதற்கும் உதவா எழுதுகோல்.

கல்லில் வடிக்கும் எழுதுகோல்.
கனவாய் மறையும் எழுதுகோல்.
காவியம் படைக்கும் எழுதுகோல்.
காகிதம் நிறைக்கும் எழுதுகோல்.

துள்ளி குதிக்கும் எழுதுகோல்.
துவண்டு மருளும் எழுதுகோல்.
நாவாய் சுழலும் எழுதுகோல்.
நாயாய் குரைக்கும் எழுதுகோல்.

எழுதும் மக்காள்! வாருங்கள்
எதுதான் வேண்டும் கூறுங்கள்!

உம்மிட மிருப்பது இதிலெதுவோ?
உணர்வாய் ஆய்ந்து தெளியுங்கள்.
பயனாய் எழுதா எழுதுகோலை
பைய தூர கடத்துங்கள்.

உலக உருண்டை பொதுமைக்கும்;
உயர்வை அளிக்கும் கோலெதுவோ!
உவப்பாய் அதனைக் கைகொண்டு,

புதிய எண்ணம், எழுச்சியுடன்
புனித பயணம் தொடருங்கள்.

No comments: