Tuesday, February 22, 2005

தொலைந்தது கோப்பா? நிர்வாகக் கட்டுக்கோப்பா?

- மன்னை மாதேவன்

நான் இங்கு எழுத விழைவது அரசியல் விமர்சனமா? இல்லை. இன்றைய அரசியல் விமர்சனங்களே பலப்பல விமர்சனங்களுக்கு தளம் அமைத்து கொடுத்து விடுகிறது. காரணம் ஒரு அரசியல் கட்சியை சார்ந்து நின்று, பிறிதொன்றை விமர்சித்து, அதன் வழி உருவாக்கப்படும் கருத்தோட்டம், சமுதாயத்திற்கு பயன்படுவதைக் காட்டிலும், பங்காளி கட்சிகளுக்கான இலவச உதவியாக மாறிவிடுகிறது. கட்சிகள் விமர்சனங்களைக் கொண்டு தன்னை சீர்படுத்திக்கொள்ளும் காலங்கள் மலையேறிவிட்டன. விமர்சகர் தான் சார்ந்த கட்சி, இதே தவறை செய்யாது என உறுதியாய் நம்பிக்கை கொள்ள இயலாத அளவு அரசியல் தளம் தரம் தாழ்ந்து விட்டது. இந்த தத்துவங்களால் அரசியல் விமர்சனங்களே கூடாது என்பதல்ல என் முடிபு, மாறாக விமர்சிக்கும் தகுதியை விமர்சனங்களும் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். எனது இந்த விமர்சனம் மனித உணர்வுகள் சம்மந்தப்பட்டது.

தன் பிள்ளைகளை கல்விச்சாலைகளுக்கு அனுப்பிவிட்டு, நீண்ட நெடிய கனவுகளோடு உலவும் சாதாரண பெற்றோர்கள் இதயத்தில் அக்கினியை எரிமலையாய் கொட்டும் சம்பவங்கள் தமிழகத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்டது. இதனை கண்டிக்காத எழுதுகோல்
பிறவற்றை எழுதி தன் பிறவிப் பயனை அடைந்துவிட போவதில்லை என்ற வேதனையில்தான் இதனை எழுதுகிறேன்.

நம் அரசியல் இழிவின் உச்ச கட்ட அவலம் சில ஆண்டின் முன் நடந்தேரியதை நாடு மறந்திருக்காது. அதன் மிச்ச சொச்சத்தையும் மீண்டும் அரங்கேற்ற துடிக்கும் நிலை எண்ணி நெஞ்சம் கொதிக்கிறது. அன்று அரசியல், அப்பாவியாய் கல்லூரியில் பயின்றுவந்த இன்னுயிர்ச் செல்வங்கள் மூவரை உயிரோடு பேருந்தில் வைத்து கொளுத்தி தனது அகோர பசியை தீர்த்துக்கொண்டது. அவர்கள் செய்த பாவம் என்ன? அற்ப பதர்கள் வாழும் அதே பூமியில் பிறந்ததையன்றி வேறு என்ன தவறை செய்துவிட்டார்கள். இதை செய்தவர்கள் அரசியல்வாதிகளா இல்லை கேடு கெட்ட தீவிரவாதிகளா? இரண்டுமில்லை நாற்றமெடுத்த வாந்திகள். அன்றுமுதல் தாழ்ந்தே இருக்க வேண்டிய நம் அரசியல்வாதிகளில், "அந்த நாயினும் கீழோன் நானில்லை” என நெஞ்சுயர்த்தி எவர் தனக்குத்தானே கூறிக்கொள்ள முடிந்தவர்களோ அவர்களை மட்டும் உண்மை அரசியலாளர்களாக உயர்ந்த அரசியலாளர்களாக நாம் உளமாற ஏற்போமாக. சரி இது நடந்த கொடுமைக்கு நீதியாகி விடுமா? ஆகா அதற்குத்தான் வழக்கு வந்ததே!

நீதி தேவதையின் சிரசில் மற்றுமொரு கிரீடத்தை ஏற்ற இந்த வழக்கும் தேவதையின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. அன்று நம்மை ஆண்ட ஆங்கிலேயருக்கு “பிரித்தாளும் சூழ்ச்சி” இன்று நம்மை ஆள்வோருக்கு “இயன்றவரை தாமதப்படுத்து சூழ்ச்சி”. வழக்குகளின் தீர்வுக்கான காலத்தை நிர்ணயிக்க எந்த காலதேவனை அழைப்பது? வழக்குகளையே வழக்காக்கி விடும் அதி நவீன மனிதர்களல்லவா நாம். மருத்துவக் கல்வி மாணவன் நாவுக்கரசனை நினைவிருக்கிறதா? இங்கு நினைவு படுத்தியமைக்காக அந்த அமைதி பிள்ளையின் பெற்றோரின் மன்னிப்பை கோருகிறேன்.

தருமபுரியில் தீயிடப்பட்ட மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை திரு வீராசாமி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நடந்த முறைகளை பற்றியோ அல்லது ஏற்பட்ட கால தாமதம் குறித்தோ (அல்ல அல்ல ஏற்படுத்தப்பட்ட கால தாமதம் குறித்தோ) நான் எழுத எண்ணவில்லை. காரணம் இவைகளெல்லாம் வழக்குகளின் அனுமதிக்கபட்ட மரபுகளாகிவிட்டன. ஆனால் அதையும் தாண்டி இந்த வழக்கு அடிப்படையையே அசைத்து விட்டது. அரசின் பாதுகாப்பில், பொறுப்பில் இருந்த கோப்பு மாயமாய் மந்திரமாய் மறைந்தே விட்டதாம். பாவிகளே உங்கள் உண்மை நிறம்தான் என்ன? நீங்கள் கடமையே கண்ணாகிய அதிகாரிகளாக, அதிகார இமயத்தையே கையில் தாங்கிடும் அரசியல்வாதியாக, வேறு எவராகத்தான் இருந்துவிட்டு போங்களேன். அடிப்படையில் நீங்களும் மனிதரல்லவா? இந்த வழக்கின் கோப்பு தொலைந்து விட்டது என்று கூறிய அந்த ஒரு நொடியை எண்ணிப்பாருங்கள். கருகிய அந்த பிஞ்சுகளின் பெற்றாரின், உற்றார் உறவினர்களின் உயிர் துடிப்பைக்கூட உணர முடியாத இதயமற்ற இயந்திரங்களாக உங்களால் எப்படி மாறிவிட முடிகிறது?

நீங்கள் தொலைந்துவிட்டது என்று கூறியது வழக்குக்கான கோப்பையா? அல்லது மனித நாகரீகத்தின் முகவரியையே தொலைத்து விட்டடீர்களா? சற்று உங்கள் அதிகார தோலை உரித்து உதறிவிட்டு இந்த காட்சியை உங்கள் மனத்திரையில் இடுங்கள். எதிலும் தான் சம்மந்தபடாமல் மூன்றாமவராக பாவித்து காணுகின்றபொழுதுதான் பல பேருண்மைகளின் நிதர்சன தரிசனம் கிடைக்கும். கோப்பு தொலைந்தது என்று நாகூசாமல் பொய் கூறியவர்களே. உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட சாம்ராஜ்யங்கள் முழமையையும் விற்று அதில் நீங்கள் சுய ஜீவனம் செய்யும்பொழுது, அதற்கான ஆவணங்களை தெலைத்துவிட்டு அப்படி தொலைப்பதுகூட உங்கள் உரிமையாக காட்டுங்கள். கவலையில்லை. அதில் முடக்கப்படுவது வெறும் பொருளியல் தத்துவம்தான். இவைகள் ஊனோடும் உயிரோடும் உறவானவை. நீங்கள் தொலைத்துவிட்டதாக கூறிய அந்த கோப்புகளில் இருந்தது வெறும் காகிதங்கள் இல்லை துடித்துடித்து இறந்த விலைமதிக்க முடியாத அந்த மூன்று உயிர்கள்.

நான் சற்று உணர்ச்சிகளுக்கு ஓய்வு கெடுத்துவிட்டு, தார்மீக நெறிகளுக்கும் தாழிட்டு விடுகிறேன். சம்மந்தப்பட்ட நீங்கள் யாராயினும், உங்களை விரல் நீட்டியே கேட்கிறேன். இப்பொழுதேனும் கூறுங்கள் உங்கள் கூற்று சரியனதுதானா? இப்படிப்பட்ட மனித பரிமாணங்கள் தொடர்புடைய ஒரு வழக்கின் ஆவணம் தொலைந்துவிட்டது என இந்த கணினியின் யுகத்தில் கூறி, நீதிமன்றத்தின் சாடலுக்கு பின் தொலைந்த கோப்புகள் வானிலிருந்து தேவதைகளால் பூமிக்கு கொண்டுவரப்பட்டது என்று கூறுகின்றபொழுது, குடிமக்களாகிய எங்களைப்பற்றிய உங்கள் கணிப்புதான் என்ன? மன்னர்கள் நீங்கள் “வெள்ளை காக்கை” என கூறுமுன் “மல்லாக்க இரண்டு குப்புற இரண்டு” என நாங்கள் கூறினால் நல்ல குடிபடைகள் ஆவோமா? கூறுங்கள் அய்யா நாங்கள் திருத்திக்கொள்கிறோம் அல்லது திருந்திவிடுகிறோம். “நிர்வாகத்திறன்” இந்த சொல்லுக்கு உங்கள் அகராதியில் என்ன பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமாவது பாவப்பட்ட குடிபடைகள் எங்களுக்கு விளக்குவீர்களா?

இறுதியாக ஒன்றை மட்டும் உங்கள் நிரந்தர நினைவுக்கு விடுகிறேன். நீங்கள் அனுபவிக்கும் எந்த வானளாவிய கோட்டைகளும் கொத்தளங்களும் மக்களுக்காக கட்டப்பட்டவை மட்டுமல்ல, மக்களாளேயே கட்டப்பட்டது. இந்த சாம்ராஜ்யங்கள் சரியும்போது எச்சங்களாக மானுடம் மட்டுமே நிற்கின்றன. மனிதம் மட்டும்தான் நிரந்தரம் என்பதைதான் சரித்திரங்கள் பறைசாற்றி நிற்கின்றன என்பதை இனியேனும் உணரமுற்படுங்கள்.

No comments: