ஓர் வேதனைச் செய்தி. தர்மபுரி முதன்மைச் சார்பு நீதிமன்றத் துணை நீதிபதி, அரசு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்களுடன் “மூவர் கூட்டணி” அமைத்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்ததால் “பணி இடை நீக்கம்” செய்யப்பட்டுள்ளார். தர்மபுரியில் வாழ்ந்த இவர் தர்மம் புரியாததால், தர்மம் இவருக்கு சிலவற்றைப் புரிய வைத்திருக்கிறது. புரையோடும் ஊழல் வேர்கள் புதிதாய்ப் புக எந்தத் துறைதான் இனி எஞ்சியிருக்கிறது எனும் வேதனை வினா நம் இதயத்தில் “சுனாமி” ஆகிறது. இதை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று கூற இயலவில்லை. எங்ஙனம் இயலும்? தூய்மையும், நேர்மையும் கோலோச்ச வேண்டிய நீதித்துறையில், “வேலிகள் பயிர் மேயும்” வேதனையின், தொடக்கமா இது? நிச்சயமாக இல்லை. எங்கோ எவரோ எதிலோ தொடங்கிய தொடர்காட்சியில் ஒரு அங்கம்தான் இது. இருட்டில் அரங்கேறும் இதுபோன்ற காட்சிகள் மீது இப்பொழுதுதான் சற்று வெளிச்சக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
தனிமனிதர்களை விமர்சிக்கும் போக்கை நாம் தரம்கெட்டதாகவே கொள்ளலாம், அந்த தனிமனிதர்கள் செயல் சமுதாய சீர்கேடாய்த் தலைதூக்காத வரை. நீதிகாக்க, தமிழன் இதுவரை தந்திருக்கும் விலை எத்தகையது என்பது என் எண்ணத்தில் திரையாடுவதால்தான், இக்கட்டுரையை எழுதத் துணிந்தேன். “சீசரின் மனைவி சந்தேகங்களுக்கு” அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்னும் நெறிமுறை மற்றெந்த துறையினருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நீதித்துறைக்குக் கட்டாயம் பொருந்தியாக வேண்டும்.
இந்திய நாட்டின் அரசியல் சாசனக் கோட்பாட்டின்படி, நீதித்துறை நாட்டைத் தாங்கி நிற்கிற நான்கு தூண்களில் தலையாயது. ஏனைய தூண்களான சட்டமியற்றுத்துறை, நிர்வாகத்துறை, பத்திரிக்கைத்துறை முதலிய துறைகளில் நிலவும் தூய்மை பற்றி நாம் நன்கறிவோம். இந்தத் துறைகளில் அவ்வப்போது ஏற்படும், நாட்டையும் மக்களையும் பாதிக்கும் நிகழ்வுகளுக்குத் தீர்வுகாண நாம் தட்டுகின்ற கதவுகள் நீதித்துறையின் கதவுகள்தான். நாடு சில வேளைகளில் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகளில் சிக்கித் தவிக்கும்போது, சிக்கல் நீங்க நாம் முழுதும் நம்பியிருப்பது நீதித்துறையை மட்டுமே. பணமும், பலமும் படைத்த கழுகுகளின் பிடியிலிருந்து வறியோரையும், எளியோரையும் காக்கும் கடமை இந் நீதித்துறையையே சார்ந்து நிற்கிறது.
இந்நிலையில் நீதித்துறையிலும் புரையோடத் துவங்கும் இத்தகைய புண்களுக்கு, வெறும் புனுகு தடவித் தன்னிறைவு அடையப் போகிறோமா அல்லது இதன் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி எறியும் வேலையைச் செய்ய முயலப் போகிறோமா? இந்த வினாவிற்கு விரைவாக விடையிறுப்பதற்கு முன்பாக தமிழர்களின் பண்டைய வாழ்வியலோடும், கலை, கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும் இரண்டறக் கலந்து நின்ற நீதியின்பால் சற்று கண்ணோட்டம் செலுத்துவது, சிதிலமடையத் தொடங்கும் சீர்க்கேட்டின் பரிமாணத்தை நன்குணர வாய்ப்பாகும் என எண்ணுகிறேன்.
தமிழனும் நீதியும்
தனது ஒரே மகன் வீதிவிடங்கன் வீதி உலா சென்றபோது, துள்ளி விளையாடிய பசுங்கன்றொன்றைப் பிழையாக தேர்க்காலிலிட, கன்றிழந்த தாய்ப் பசு, ஆராய்ச்சி மணி கொட்டி முறையிட, தமிழ் மன்னன் மனுநீதி அளித்த மனு நீதியின் விலை? தன் அரசின் ஒரே வாரிசான மகனின் உயிர். வேடன் ஒருவன் வேந்தனிடம் விண்ணப்பித்தான், அந்தப் புறா தன் தொழில்முறை உரிமை என்று. வேந்தனுக்கோ புறாவிற்கு அபயமும், வேடனுக்கு நீதியும் ஒருசேர வழங்கவேண்டிய நிலை. அதற்காக அவன் கொடுத்த விலை? அப்புறாவின் எடைக்கு ஈடான தன் தொடை ஊன். சிபி மன்னனின் இச்செயலைக் கருணையாய் பார்ப்போரும், அறமாய் பார்ப்போரும் உண்டு. அதனையே நீதியாய் பார்த்தலும் நன்று.
கருமான் கூற்றொற்றி, பிழைபடக் கொலையுண்ட கோவலனுக்காக வழக்குரைத்த கண்ணகிக்கு பாண்டியனின் நீதிமன்றில் கிடைத்த பரிசு? பாண்டியனின் உயிரோடு, “ஈருடல் ஓருயிராய்” விளங்கிய அவன் பத்தினியின் உயிரும். நீதியுரை வழங்குகையில் தனது இள அகவை ஓர் தடையாய் இருக்கலாகாதே என்ற ஏக்கத்தில் முதியோனாய் வேடமிட்டு நீதிகாத்த கரிகால் பெருவளத்தான் நீதி- தமிழ் நீதி. இந்த நீதி உரைக்கும் முத்தொள்ளாயிரத்தை முன்னூறு முறை கற்றாலும் கல்லாதார் தமிழுலகில் நில்லாத நாள் எந்நாள்? இவை மட்டுமா தமிழனின் நீதி. அவன் நீதி நீள்கடலில் இவையெல்லாம் ஒருசில நீர்த்துளிகள் மட்டுமே.
உலகில் உள்ள ஏனைய இனங்கள் எவற்றிற்கேனும், தமிழனைப்போல் மறத்திலும் அறம் வளர்த்து நீதி காத்த பெருமை உண்டா என்பது ஆழ்ந்த ஆய்வுக்குரிய வினா. தமிழ் மன்னர்களுக்கிடையில், பலகாலும் நீள்பகை நிலவியதுண்டு, எனினும் போர் முன்பாய், பிறநாட்டின் தூதுவனாய் வந்தோனை ஓர் துரும்பும் துன்புறுத்தா நீதி எவன் கற்றுத்தந்த நீதி? போரில் புறமுதுகிட்டோனை தாக்கா தகுநெறி, கைவாள் இழந்தவன் தனக்கு வாள் ஒன்றீந்து பின் அவனோடு பொருதும் மாண்பு. இந்தச் சரித்திரம் வேண்டுமானால் தமிழறியாத் தகைமையற்றோருக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் நம் சொந்த மண்ணில் வாழும் தமிழருக்கு அதிலும் நீதியின் நெறிநிற்க வேண்டியோருக்கு புரியாமல் போவதில் பெருமை என்ன கொள்ள முடியும்.
புதியதோர் நீதி செய்வோம்!
நீதி தேவதையின் கண்கள் கருந்துணியால் கட்டப்பட்டிருப்பது, அவள் வழக்காடுவோரின் நிலை நோக்காது, யாவர்க்கும் சமநீதி வழங்கவேண்டும் என்பதற்காகத்தான். இது தாங்கள் அணி அமைத்து, நீதி அழித்து, நிதி குவித்துக்கொள்ளும் வசதிக்காகத்தான் என்று எண்ணுவோர், சட்டத்தின் பிடியிலிருந்து வேண்டுமானால் சிலகாலம் தப்பிக்கலாம், தர்மத்தின் பிடியிலிருந்து ஒருநாளும் தப்பிக்க இயலாது.
நண்பர் ஒருவருடன் மேற்கூறிய செய்தியை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் கூறினார் இது ஊழலுக்கு மூன்றாம் தலைமுறையென்று. ஊழலுக்கும் தலைமுறையா? விளங்கவில்லையே என்றபோது அவர் விவரித்தார். ஊழல் என்றால் என்னவென்றே அறியாதார் முதலாம் தலைமுறை. வாதி அல்லது பிரதிவாதியிடம் பெறவேண்டியதை பெற்றுக் கொண்டு அப்படி பெறப்பட்டவர்க்கு சார்பாவது இரண்டாம் தலைமுறை. இருவரிடமுமே இயன்றதை கறந்து, இறுதியில் ஓர்புறம் சாய்தல் இது மூன்றாம் தலைமுறை என்றார். உங்கள் கூற்றுப்படியாயின் இது நான்காம் தலைமுறை என்றேன். ஆம் வாதி பிரதிவாதி இருவருடன் நில்லாது தொடர்புடைய அனைவரும் கூட்டணி அமைத்துக் கொண்டு நீதி பரிபாலனத்தையே ஏதோ நகைச்சுவை நாடகம் போல் கேலிக்குரியதாக்கி அரங்கேற்றும் அவலம் நான்காம் தரமன்றி வேறென்ன? இந்த நான்காம் தலைமுறை பரிணமித்து வருவது ஏதோ ஒரு சில துறைகளில் மட்டுமல்ல. இந்தப் புற்றுநோய் எல்லா துறைகளையும் இலக்காக்கி வரும் இந்தத் தருணத்தில், விழிப்புடன் செயல்படுவது நம் அனைவரின் தலையாய கடமையாகும்.
இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை ஆய்வுக்காக எடுத்துக்கொன்டால், இந்தத் தீர்ப்புக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று சட்ட முகம். இதில் சட்ட வாயிலாக வழங்கப்பட்டுள்ள “பணி இடை நீக்கம்” மிகக் குறைவானதாகவே கொள்ளப்படவேண்டும். இன்னும் என்னவெல்லாம் வழங்கி இருக்கலாம் என்பது குறித்து நண்பர் வேடிக்கையாகக் கூறியவை கீழே கெடுக்கப்பட்டிருக்கிறது. சட்ட தண்டனை பெற்றவர்கள், “ஊசிமுனை நுழையும் ஒட்டகமாய்” சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து ஒருவேளை தப்பித்துக்கொள்ளலாம், ஆனால் தீர்ப்பின் இரண்டாவது முகமான “சமூக தீர்ப்பு” என்ற வலுவான தீர்ப்பின் பிடியிலிருந்து தப்பிக்க எந்தக் கொம்பனாலும் இயலாது. இந்த சமுக தீர்ப்பை வழங்கியது யார்? வேறு யார்? வாழ்வு நெறி வழங்கிய வள்ளுவனன்றி வேறு யார்?
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின் - 116
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு - 467
ஊழல் புரிபவர்கள், வள்ளுவனின் நல்வாழ்வு நெறிக்காண இவ்விரு பாடல்களையும் உள்ளம் கொள்ளாது, உதட்டளவில் உச்சரித்ததின் பயன்தான் சமுதாயம் அவர்களுக்கு வழங்கும் இந்தச் சமுதாய தீர்ப்பு.
அந்தக் கால அரசர்கள் வருகைக்குமுன் காவலர்கள் கூறும் கட்டியம்போல், “ஊழல் புரிந்து தண்டனை பெற்றாரே அவரே இவர்” என, ஊழலுக்காக (சட்ட) தண்டனை பெற்றவர்கள் செல்லுமிடமெல்லாம், ஏளனமும், எள்ளிநகையாடலும் புரியும் சமூகத்தின் சுட்டிலிருந்தும், குட்டிலிருந்தும் இவர்களால் எப்படி தப்பிக்க இயலும்? ஊரை அடித்து தம் உலையில் போடுவோரால், ஊர் வாயையெல்லாம் ஒருசேர மூடி உரையிட முடியாதே! இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சமுதாய தண்டனை கால, இட அளவுகளுக்கு அப்பாற்பட்டது. தலைமுறை தண்டனையிது. இது சில வேளைகளில் சற்று கடுமையானதாகவே அமைந்துவிடுவதும் உண்டு. சில புல்லுருவிகள் செய்யும் தவறுக்கு, ஒருபாவமும் அறியாத அவர்தம் மனைவிää மக்கள்ää உற்றார், உறவினர்களும் விலையைக் கொடுக்கும்படி அமைந்துவிடும் பொழுது, இந்தத் தண்டனை சற்று கடுமையாக தெரிந்தாலும், பின்விளைவுகளைப் பற்றிச் சிறிதும் அச்சமின்றிச் செயல்படும் இத்தகைய ஊழலர்களுக்கு இது மிகக் தேவையான ஒன்றாகத்தான் ஏற்கவேண்டியுள்ளது.
இவர்கள் சமுதாயத்தைக் குறைகூறுவதை விடுத்து, இந்நிலையை வருவித்துகொண்டது எதனால் என தமக்குத்தாமே எண்ணுவார்களானால் ஒருவேளை தெளிவு பிறக்க வாய்ப்புண்டு. மேற்கூறிய தனிச் செய்தி குறித்து நம் வேதனையை இத்துடன் நிறுத்தி, நீதித்துறையில் ஊழலின் பொதுத்தன்மை குறித்து சற்றே சிந்தனை செலுத்துவோம்.
நீதித்துறையில் ஊழலென்பது சில காலங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தலைநகர் டில்லியில் ஓர் கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை நடத்தியோர் “அனைத்துலக தெள்ளத்தெளிவு- இந்தியா” (Transparency International - India ) என்ற அமைப்பினர். இக்கூட்டத்தின் ஆய்வுத் தலைப்பே “இந்திய நீதி முறைமையில் நிலவும் தாமதமும் முறைகேடுகளும் அதற்கான தீர்வுகளும்”. இக்கூட்டத்தை தலைமை ஏற்றவர் முன்னால் தலைமை நீதிபதியும் அன்னாள் தேசிய மனித உரிமை கழகத்தின் தலைவருமான திரு ஜே.எஸ்.வர்மா அவர்கள், பங்கேற்றவர்களில் முக்கியமானவர்கள் திரு பி.பி.ஜீவன்ரெட்டி(சட்ட ஆணைக்குழு தலைவர்), திரு சோளி ஜே. சோராப்ஜீ (தலைமைச் சட்ட அதிகாரி) மற்றும் பல மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள்.
இக்கூட்டத்தில் நீதிதுறையில் ஏற்படும் தாமதம் மற்றும் முறைகேடுகளுக்கான காரணங்கள் நன்கு ஆராயப்பட்டு அவைகளை களைவதற்கான பல்வேறு தீர்வுகளும் ஆலோசனைகளாக வழங்கப்பட்டது. முறைகேடுகளின் தோற்றுவாய் என அறியப்பட்டவைகளில் சில முக்கியமானவற்றின் பட்டியலை காண்போம்.
1. அரசியல் மற்றும் அதிகார தலையீடு.
2. நீதித்துறை நேரடியாகவோ மறைபொருளாகவோ மக்களுக்கு விடையளிக்க வேண்டாத நிலை (Non Accountability).
3. “நீதிமன்ற அவமதிப்பு” என்ற அதிகாரம் வாயிலாக கிடைக்கும் அபரிமித பாதுகாப்பு.
4. நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவு.
5. வழக்கறிஞர்களின் ஒழுங்கீனம் மற்றும் ஒத்துழைப்பின்மை.
6. வழக்கு முடிந்தும் தீர்ப்பு நீண்ட நாள் ஒத்திவைப்பு.
7. நீதிபதிகளிடம் சட்ட நுணுக்க வல்லாண்மை குறைவு.
8. புலனாய்வில் காவல்துறை குறைபாடுகள்.
9. மக்களின் பழக்க வழக்கங்கள் அறியாத மாநிலங்களுக்கு நீதிபதிகளின் திடீர் மாற்றல்கள்.
10. நீதிபதிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நிலவும் சிக்கல்கள்.
முக்கிய தீர்வு ஆலோசனைகள்:
1. நீதிபதிகளின் தேர்வு முழுமையும் நீதித்துறையாலேயே நிறைவு செய்வது.
2. நீதிபதிகளின் ஊதியமும் பதவி உயர்வையும் அதிகமாக்கி, முறைகேட்டு ஆசையை (Temtation) குறைப்பது. (ஆகா… எத்தனை புத்தர்கள் வேண்டுவதோ…இவர்களின் ஆசைக்கு வேலியிட..)
3. மிகுந்த தகுதியின் அடிப்படையில் மட்டுமே நீதிபதிகளின் தேர்வு.
4. வழக்குகளுக்கான கால நிர்ணயம்.
5. நீதிபதிகளுக்கான பணி ஒழுங்குமுறை (Code of Conduct) வடிவமைப்பு.
6. பணி ஓய்வின் பின் எந்த அரசு அலுவலும் ஏற்க தடை. (ஆகா…வசதி வாய்ப்புகளை அவ்வளவு எளிதில் உதறிவிட முடியுமா என்ன?...)
இவை அனைத்தும் நீதிபதிகள் அடங்கிய குழுவால் மறுஆய்வு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக பாராளுமன்றம், நீதித்துறை, வழக்கறிஞர் மன்றம் (Bar Council) மற்றும் பொது மக்கள் மன்றம் முதலியவற்றில் அளிக்கப்படும் என அறிவித்தார்கள். அவ்வாறு அளிக்கப்பட்டு, உரியவர்களால் உரிய நடவடிக்கைகள் எவையேனும் உரிய தருணத்தில் எடுக்கப்பட்டிருக்குமானால் மேற்கூறிய சம்பவங்கள் நடைபெற வாய்ப்பில்லை அல்லவா?
ஊழலின் தன்மைகள் பற்றியும், அவற்றால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள் குறித்தும், மலையளவாய் பேசியும் எழுதியும் வருகிறோம். விளைந்த பயன் கடுகளவேனும் தேறுமா என்பது ஐயமே! எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனது “ஓரிரு எண்ணங்கள்” பகுதியில் ஒன்றைக் கூறினார். “பலர் தாங்கள் ‘கையூட்டு கொடுக்காதார் சங்கம்’ தொடங்கி நடத்திக்கொண்டு வருவதாக என்னிடம் வந்து கூறினார்கள். நான் நினைத்துக்கொண்டேன், இதனால் மட்டும் என்ன பெரிய பலன் கிடைத்துவிடபோகிறது மாறாக ‘கையூட்டு பெறாதார் சங்கம்’ தொடங்கப்பட்டால் அல்லவா ஊழல் குறைய வகையேற்படும் என்று”. இக்கூற்று முற்றிலும் உண்மையல்லவா?
எனவே நாட்டின்கண் நாட்டமுடைய அனைவரும் ஒன்றாய் சிந்தித்து இந்த ஊழலை களைவதர்க்கான வழிவகைகளில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதொன்றே இச்சிறு கட்டுரையின் நோக்காக விழைகிறேன்.
குறிப்பு:
மேற்கண்ட கட்டுரையின் எல்லை இத்துடன் முடிவுற்றது. ஊழலை ஒழிப்பதற்கான இலவச ஆலோசனையாக எனது நண்பர் கூறிய கருத்துக்கள் கீழே கொடுக்கப்படுகிறது. நகையணியில் நாட்டமுடையோர் முன்னேறுக. மேலும் நீங்களும் நீதி அரசர்களாகி விரும்பிய தண்டனை வழங்கி மகிழ்வதிலும் எந்த தடையுமில்லை.
1. தேச விடுதலைக்காகää வ.உ.சி சிறையில் இழுத்த செக்கை இவர்களைக் கொண்டு இழுக்க வைக்கலாம் என்றவர். உடனே எண்ணத்தை மாற்றிக்கொண்டுää அந்தப் புனிதர் கைபட்ட செக்கின் புனிதம் கெட வேண்டாம். அதைவிட கடினமான வேறு செக்கைக் கொடுத்து இழுக்க வைக்கலாம் என்றார்.
2. “நான் கையூட்டு பெற்றதற்காக தண்டிக்க பட்ட ஆசாமி” என்ற பெயர் பலகையைää அவர்களின் மீதமுள்ள பணிக்காலம் முழுமையும், கழுத்தில் தொங்கவிட்டுக;காண்டே பணியாற்ற வேண்டும் என பணிக்கலாம்.
3. ஊழல் புரியும் அதிகாரிகளை அழைத்து வந்து “ரமணா” திரைப்படத்தை நூறுமுறை கட்டாயமாக பார்க்க வைக்கலாம்.
4. “லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” திரைப்படத்தைப்போல்ää ஊழலால் பாதிக்கப் பட்டவர்கள் வீட்டிற்கு ஊழல் புரிந்தவர் சென்றுää அவர்கள் வீட்டு திண்ணையில் உறங்கிää அவர்களால் வெறுக்கப்படும் வேலையாளாகப் பணியாற்ற தீர்ப்பளிக்கலாம்.
5. அவரவர் செய்த ஊழலை, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்குத் தெரிவித்து, ஏற்ற தண்டனையை ஆலோசனையாக வழுங்குவோருக்குப் பரிசு திட்டம் அறிவிக்கலாம்.
6. இறுதியாக நண்பர், பழைய காலங்களில் “கழுவாய் ஏற்றுவது” என்பார்களே, அப்படி என்றால் என்ன? என்ற வினாவோடு முடித்துக்கொண்டார்.
1 comment:
நன்றி சகோதரரே!
உங்கள் புத்தகக் கடையை பார்வையிட்டபின்
மீண்டும் உங்களை தொடர்புகொள்கிறேன்.
அன்பில் நல்
மன்னை மாதேவன்.
Post a Comment