Saturday, February 19, 2005

திருவாளர் சோ அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் !

- மன்னை மாதேவன்

“தட்ஸ்தமிழ்.காம்” இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது

திரு சோ அவர்களே!
தாங்கள் தமிழக மக்களுக்கு முதலில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமானீர்கள். அன்றைய நாட்களில் உங்கள் நடிப்பு வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கும்படியான நல்ல நகைச்சுவை நல்கியது என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. உங்கள் அந்த திறமைக்கு பெரிதும் உதவியது உங்களது அசாதரணமான கண்கள் என்றால் அது மிகையாகாது. அதன்பின் நாடகத்துறையில் நுழைந்தீர்கள். உங்கள் நாடகங்கள், வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே என வரையறுத்து ஒதுக்கிவிட இயலாதவாறு தீவிர அரசியல் விமர்சன “புரட்சி நாடகங்கள்” என்னும் நலைக்கு உயர்ந்து, அத்துறையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அத்தகைய தாங்கள் நடிப்புத்துறையிலேயே நிலைகொண்டிருந்தால் இன்று அத்துறையில் இமாலய சாதனை படைத்திருப்பீர்கள் என்பதும் ஓரளவு அனுமானிக்க கூடியதே.

கலைத்துறை செய்த பாவமோ அல்லது தமிழக மக்களாகிய நாங்கள் செய்த பாவமோ தாங்கள் பத்திரிக்கை துறையில் கால் பதிக்க முடிவெடுத்து திடிரென நுழைந்தே நுழைந்து விட்டீர்கள். அதிலும் எப்படி நுழைந்தீர்கள்? புத்திரிக்கை தொடங்குவதற்கான ஆசையை அல்லது தேவையை வெளிப்படுத்தி இத்துறையில் எவ்வாறு வளரப்போகிறோமோ எனும் ஒரு மெல்லிய அச்ச உணர்வோடு பத்திரிக்கையை வாங்குவதற்கான பணிவான வேண்டுதல்கலோடு இப்படி ஏனைய சாதராணமானவர்கள் வழிமுறைகளில் தாங்கள் நுழையவில்லை. அனுமன் மலையை ஒரு கரத்தில் அனாயாசமாக சுமந்துகொண்டு பெருங்கடலை துட்சமாக தாண்டும் காட்சிபோல் மிகப் பெரிய உருவகத்தை உருவாக்கிக்கொண்டே தடாலடியாக நுழைந்தீர்கள். தங்கள் பத்திரிக்கை, அதுவரை தமிழக மக்களுக்கு அவ்வளவாக பரிச்சயப்படாத “புலனாய்வு இதழியல்” என்ற வகையிலும் இன்னும் ஓர் படி மேலே சென்றும், அதுவரை பல்லாண்டுகள் உழைத்து பத்திரிக்கை “ஜாம்பவான்கள்” என்று இடம் பிடித்திருந்தவர்கள் மத்தியில் உங்களை அமரவைத்ததோடு, அவர்களில் சிலரை அதிரவும் வைத்தது.

அன்று அனைத்து தமிழகத்தின் பத்திரிக்கையாளர்களும் தாங்கள் எந்த தளத்திலிருந்து அல்லது எதன் சார்பாக தங்கள் எழுத்துக்களை தருகிறோம் என நேரடியாகவோ அல்லது சற்று இலைமறை காயாகவோ தெளிவுபடுத்தியே தங்கள் பத்திரிக்கை பணியினை செய்தார்கள். ஆனால் தாங்களோ, ஏனைய பத்திரிக்கையாளர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டுள்ளதாகவும், தங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உள்ளதாகவும், தாங்கள் எந்த சார்புநிலைக்கும் உட்படாததால், எவரையும் எதையும் துணிந்து விமர்சிக்கும் நோக்கும், போக்கும் உள்ளவராகவும் விளம்பரப்படுத்திக் கொண்டீர்கள். ஆரம்பநாட்களில் இந்த உங்கள் விளம்பரத்திற்கு சற்று வலுவும், பொருளும் இருக்கத்தான் செய்தது. எனவே நடுவு நிலைச் செய்திகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த பலரும் உங்களை உச்சாணிக் கொம்பில் கொண்டு நிறுத்தினர். உங்கள் எண்ணத் தராசு வள்ளுவன் கூறியபடி “சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல்” அமைந்து அதன் வாயிலாக நீதிதேவதை தமிழகத்தின் தெருக்களில் தாண்டவமாடுவாள் என எதிர்பார்த்தனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

உங்கள் திறமையால் - (நன்றாக நினைவில் கொள்ளவும் நேர்மையால் அல்ல திறமையால்) – அவர்கள் எதிர்பார்ப்புகளை லாவகமாக கையாண்டு உங்கள் பத்திரிக்கை விற்பனையை கணிசமாக்கிக் கொண்டீர்கள். இந்திய அரசியல் சாசனம் எழுத்து சுதந்திரத்தை எல்லோர்க்கும் அடிப்படை உரிமையாக மிக தெளிவாக வழங்கி மகிழ்கிறது. அதன்பின்னும் உங்களைப் போன்றோர் ஏன் வீண் முகமூடி அணிந்து “உள்ளொன்று வைத்து புறம் ஒன்று” எழுத வேண்டும் என்பதுதான் புரியாத புதிராகவுள்ளது.

பாரதி போன்ற உயர்ந்தவர்களால் போற்றப்பட்ட பல சமுதாய பார்வைகளிலாகட்டும் (உம். “பெண்ணியம்”) அல்லது சமகால அரசியல் விமர்சனங்களிலாகட்டும் உங்கள் எழுத்துக்களில் மிளிர்வது உங்கள் விவாதத்திறமையும் அறிவு மேதமையுமே தவிர உண்மையான நேர்மை கிஞ்சித்துமில்லை. மற்ற சார்புநிலை எழுத்தர்கள் இத் திருப்பணியை செய்தால், அது அவர்களுக்கு உரிய கைக்கட்டு அல்லது இக்கட்டு என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் தாங்கள் மிகப் பெரிய நடுநிலையாளர் என்றும் பத்திரிக்கா தர்மத்தை காப்பாற்றவே அவதாரமெடுத்த அவதார புருஷர் என்றும் ஒரு மாயை தோற்றுவிக்கபடுவதால்தான் உங்களை இந்த அளவுக்கு விமர்சிக்க வேண்டியதாகிறது.

இன்று தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் காஞ்சி சங்கரமட விவகாரத்தை எடுத்துக்கொண்டாலே தங்கள் எழுதுகோலின் நடுவுநிலை எத்துனை கேலிக்கூத்து என்பது புலனாகும். நான் மடத்தின் உள் விவகாரங்களில் செல்ல விரும்பவில்லை. எவையெவை உண்மையென்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். ஆனால், இந்து மதத்தினுடைய ஏகபோக தத்துவ, ஆன்மீக மற்றும் அதிகார மையமாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் ஒரு மிகப்பெரிய மடம், இன்று இந்து மதத்தினுடைய ஆரம்ப அடிப்படை ஒழுக்க நெறியிலேயே ஓரளவுக்காவது பிறண்டுதான் செயல்பட்டிருக்க வேண்டும் என்று, விருப்பு வெறுப்பற்ற சாதரண மக்கள் எறத்தாழ முடிவுக்கே வந்துவிடும் அளவுக்கு மடத்தின் செயல்பாடுகள் அமைந்திருந்திருக்கிறதே! இது என்ன ஒரே ஒரு இரவிலா நடந்துவிட்டது?

இத்தகைய ஒரு மிகப்பெரிய ஸ்தாபனத்தினுடைய செயல்பாடுகளில் சிறு சறுக்கல் தெடங்கிய உடனேயே, அதனுடன் சற்றேனும் நெருக்கமுள்ள தங்களைப் போன்ற பத்திரிக்கையாளருடைய தார்மீக கடமை என்ன? இதுவரை இதுபற்றி எழுத உங்கள் எழுதகோல் தவறியதின் காரணம் என்ன? எனது கவனத்திற்கு வரவில்லை என கூற முற்படுவீர்களானால் - (தாங்கள் சார்ந்துள்ள அதே பத்திரிக்கைத் துறை சார்ந்த திருமதி அனுராதாரமணன் இம்மடத்தின்மீது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தான் குற்றம் சுமத்தியிருப்பதாக கூறுவதையும் கருத்தில்கொள்ளவேண்டும்) – தாங்கள் பத்திரிக்கை நடத்துவதற்கான அடிப்படை தகுதியையே இழந்தவராவீர்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்துள்ள பலர் நிச்சயமாக இந்த கூற்றை ஏற்கவும் மாட்டார்கள். எனவே எஞ்சியிறுப்பது “தெரிந்தும் எழுதவில்லை” அல்லது “எழுத விரும்பவில்லை” என்பதுதான். அவ்வாறானால் அதற்குரிய காரணத்தை விளக்கவேண்டிய பொறுப்பு உங்களை சார்ந்ததாகிறது.

வேறு எந்த அமைப்பிலும் தவறு ஏற்பட்டாலோ அல்லது ஏற்பட வாய்ப்பிருந்தாலோ தங்கள் எழுதுகோல் எந்த அளவுக்கு, அந்த அமைப்பின் மீது கேலிச் சித்திரமாக, கட்டுரையாக குறைந்தபட்சம் ஒரு கேள்வி-பதிலாக பாய்ந்திருக்கும் என்பதை உணர்ந்தவர்கள், உங்கள் இந்த நீண்ட கால இருட்டடிப்பில் உள்ள உங்கள் சார்புநிலையை எண்ணி வேதனைப்படாமல் அல்லது விமர்சிக்காமல் இருக்கவேண்டும் என தாங்களே எதிர்பார்க்க மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். எனவே தங்களுக்கு எனது வேண்டுகோள் ஒன்றுதான்.

தாங்கள் உடனடியாக நீங்கள் விரும்புகின்ற அடிப்படை தளத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தி அதன் சார்பாகத்தான் எழுதப்போவதாக அறிவித்துவிடுங்கள். அரசியல் கட்சிகளுக்காகவும், இயக்கங்களுக்காகவும் அவ்வளவேன்? இன அமைப்புகளுக்காககூட பத்திரிக்கைகள் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு மட்டும் அந்த உரிமையை யாரும் மறுத்துவிட போவதில்லை. அவ்வாறின்றி இன்னும் உங்களை நடுநிலையாளராகவே காட்டிக்கொள்ள விரும்புவீர்களானால், சற்று வாதத்திறமையை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆத்மார்த்தமாக உங்களை நீங்களே ஒரு “சுய சத்தியப்பரிசோதனைக்கு” உட்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சுய ஆய்வு ஒருவேளை இனியேனும் உண்மையான நடுநிலையாளராக செயல்பட துணைபுரியலாம். மேலும் “பலர் என்னை என் எழுத்துக்காக மட்டும் விமர்சிக்காமல் இன அடிப்படையிலேயே விமர்சிக்கிறார்கள்” என்ற தங்களின் மனக்குறை நீங்கவும் இச்சுய ஆய்வு பயன்படலாம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.


2 comments:

Thangamani said...

நல்ல பதிவு, எம்ஜியார் கருணாநிதியிடம் கணக்குக் கேட்டதை வைத்து ஆயிரம் ஜோக்குகள் எழுதினார். ஆனால் சங்கரமட கணக்குப் புத்தகம் திருத்தப்பட்டதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிர்வினையே இல்லையே!
http://ntmani.blogspot.com/2005/02/blog-post_21.html

Mannai Madevan said...

அன்புமிக்க திரு தங்கமணி அவர்களே!

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.
நான் வலைதளத்திற்கு, ஏன் எழுத்துலகுக்கே புதியவன்.
ஆவல்கள் அதிகமுள்ளன. செலவிட நேரம் ஒதுக்க முயல்கிறேன்.
தங்களின் வலைதளமும் எழுத்துக்களும் மிக நன்றாக உள்ளது.

என் வலைதளத்தில் உங்கள் வலைதளத்தை இட்டுள்ளேன்.

நன்றி.

மன்னை மாதேவன்