Friday, April 01, 2005

பெண்மை – மென்மை = பெண்ணியமா?

ஆதாம்-ஏவாள் தொடங்கி அன்னை பாத்திமா ஊடாக ஆதிபராசக்தி ஈறாய் அனைத்து மதங்களும் பெண்மையை போற்றித்தான் நிற்கின்றன. பெண்மையை போற்றாத உலக இலக்கியங்களை காண்பதே அரிதுதான். பெண்மையின் உயர் நிலையாம் தாய்மையிற் சிறந்ததோர் தகையன பிறிதொன்றுமிலை என அவைகள் அறுதியிட்டே உறுதியுடன் உரைக்கின்றன. நாட்டை “தாய்நாடு” என அழைத்து பெண்மையை போற்றுகின்றன. எளிமை, தூய்மை, மென்மை, மேன்மை, என இவற்றைத் தாங்கி நிற்கும் அஃறிணை பொருட்களை சுட்டும் பொழுது, பெண்பால் போல் உயர்திணையாய் ஏற்றி உரைப்பதுகூட பெண்மையை போற்றும் உயரிய நெறிதான். ஆனால் எதார்த்த வாழ்வில் பெண்மை எவ்வாறு உள்ளது? எவ்வாறு போற்றப் படுகிறது?

மக்கள் வாழ்வில் அறிவியலும், நாகரீக இயலும் விண்முட்ட வளர்ந்து நிற்பதாக மார்தட்டிக் கொள்ளும் இந் நாட்களிலும், மகளிர் படும் கொடுமைகளை எழுதப்புகின், அதன் அளவீட்டில் போட்டியிட இயலாமல் இமயம் கூட சற்று தாழ்ந்து விடலாம். மத, இன, மொழி வேறுபாட்டைக் கடந்து உலகம் முழுமைக்கும் பொது உரு பெற்றிருப்பவை பலவற்றிலும் இந்த “பெண்ணடிமை” அதித பங்கைப் பெற்றிருக்கிறது. எனினும், யுக யுகமாய் கேட்பாரற்று உழன்ற இப் பெண்ணடிமை, இன்று, வீழ்ச்சியுறும் கால ஒளி தோன்றத் தொடங்கிவிட்டது. “பெண்விடுதலை” மிகச் சமீப காலமாக புரட்சியும், எழுச்சியும் பெற்று வெற்றி நடைப் பயிலுகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நாம் இற்றை நாட்களில் “சர்வதேச மகளிர் தினம்” கொண்டாட தலைப்பட்டிருப்பது.

அண்மை சர்வதேச மகளிர் தினத்தன்று எழுதப்பட்ட , அன்புச் சோதரியர் அருணா ஸ்ரீனிவாசன் அவர்களின் “பெண்கள் தின வாழ்த்துக்கள்” எனும் வலைப்பூக் கட்டுரை நன்றாக மணம் பரப்புகிறது. “ஓர்ச்சார்பு நிலை" நின்று, ஒட்டுமொத்த ஆணிணமே பெண்களுக்கு எதிரானது என்ற மாயையில் மூழ்கி விடாமல், மாறி வரும் சூழலையும் வகைப் பிரித்து, பெண்களைப் உயர்வாய் போற்றும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டதோடு , மனம் மாறிய அத்தகைய ஆண்களுக்கு பாராட்டையும் வழங்கியுள்ளமை மிகவும் போற்றற்பாலது.

பெண்கள் சுதந்திரமும், சமத்துவமும், பெண்ணியத்தின் இரு கண்கள். மனித சமுதாயம் இனியும் பெண்களை அல்லது பெண்ணியத்தை புறக்கனித்துவிட்டு தன் முழு பலத்தோடு முன் நடந்துவிட இயலாது. இன்றைய இந்த நிலை பெண்களுக்கு மிக எளிதாகக் கிட்டிவிட வில்லை. அவர்களின் வியத்தகு தனி மனித சாதனைகளும் அமைப்பு ரீதியிலான போராட்டங்களுமே இந் நிலையை தோற்றுவித்திருக்கிறது. ஆனால் சமீப காலங்களில், சிலரின் பெண்ணிய சிந்தனைகள் பல தெளிவற்ற போக்கை ஏற்படுத்தி வருகிறது. பெண்ணியத்தை இவர்களெல்லாம் எங்கே இட்டுச்செல்ல விழைகிறார்கள்? என்ற மிகப் பெரிய வினாவை எழுப்பி நிற்கிறது. மிக மிக முற்போக்காக சிந்திக்கிறோம் என்ற போர்வையில் இவர்கள் பரப்பும் கருத்துக்கள், நம் வாழ்வில் இரு பாலரும் சமநிலையில் இணைந்து ஆற்ற வேண்டிய சில பல உயரிய கடமைகளில் இருந்து வழுவ, நவீன பெண்ணியம் வழி வகுத்துவிடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி நாளிதழ் இணைய தளத்தில் தாயம்மாள் அறவாணன் என்ற ஒரு சகோதரியர் “பெண்ணடிமை தீருமட்டும்” என்ற ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார். அந்த கட்டுரை ஏற்புடைக் கருத்துக்கள் ஒரு புறமும், பலமான விவாதத்திற்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள் மறு புறமும் என இரு வேறுபட்ட முனைகளைத் தொட்டு நிற் பதால், அதன் முக்கிய கருத்துக்களை இங்கு அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கட்டுரையின் ஒரு பகுதி இது.

“சில நாள்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாநகரில் உள்ள ஐ.நா. அமைப்பில் பணியாற்றும் ஓர் உயரதிகாரி இந்தியா வந்திருந்தார். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. அப்போது அவர் கேட்ட கேள்வி நெஞ்சையே குறுக்காக வெட்டிப் போடுவது போல் இருந்தது. கேள்வி இதுதான்: ‘என்ன? சுதந்திரம் வாங்கிப் பல ஆண்டுகள் ஆகியும் வெள்ளைக்கார மோகம் உங்களை விட்டுப் போகவே இல்லையே!’ என்று நிறுத்தாமல் தொடர்ந்தார். ‘இன்னும் வெள்ளை நிறப் பெண்களையே சோப்பு முதல் சீப்பு வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகிறீர்கள்! உங்களிடமிருந்து வெள்ளைக்கார அடிமைத்தனமும் போகவில்லை, பெண் அடிமைத்தனமும் போகவில்லை’ என்று சொன்ன அவர் வாயில் கல்கண்டை அள்ளிக் கொட்டலாம் போல இருந்தது”.

ஆம் இன்றும் நிலவும் இவ்விழி நிலை சுடத்தானே செய்கிறது. இதில் உள்ள உண்மையை எல்லோரும் எந்த வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்ள இயலும். அதே கட்டுரையின் பிரிதொரு கருத்தை கீழே காணுங்கள்.

“பெண்களின் அறியாமைக் கண்கள் திறக்கப்படுதல் மட்டுமன்றி அவர்கள் அடுக்களை, வீடு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு முதலான சம்பளம் இல்லா அடிமை வேலைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும். இதற்கு ஒரே வழி சிலகாலம் அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலைகளில் பெண்களை மட்டுமே அமர்த்துதல் வேண்டும். தந்தையை, கணவரை, மகனைச் சார்ந்திருக்கும் பொருளாதார அடிமைத்தளையிலிருந்து அவளுக்கு முழுச் சுதந்திரம் கிட்ட வேண்டும்.”

மேற்கண்ட குழப்பங்கள் நிறைந்த கருத்தை எங்ஙனம் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலும். இக்கருத்தில் “பெண்களின் அறியாமைக் கண்கள் திறக்கப்படுதல்” என்ற சொற்றொடரில் உள்ள நோக்கை ஏற்பதில் எந்த சிக்கலுமில்லை. அதேபோல் “தந்தையை, கணவரை, மகனைச் சார்ந்திருக்கும் பொருளாதார அடிமைத் தளையிலிருந்து முழச் சுதந்திரம் கிட்ட வேண்டும்” என்பதிலும் தவறில்லை, ஆனால் இடையே வரும் சொற்களை ஊன்றி கவணியுங்கள். “அவர்கள் அடுக்களை, வீடு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு முதலான சம்பளம் இல்லா அடிமை வேலைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும்” - இந்த கருத்து முழமையாக ஏற்கக் கூடியதுதானா?

மகளிர் மேம்பாட்டிற்காய் உழைக்கும் அமைப்புகள்கூட இக்கருத்தை முழமையாய் ஏற்குமா என்பது ஐயமே. காரணம் வீடு, குழந்தை வளர்ப்பு முதலிய செயல்கள் சம்பளமற்ற வேலையாகக்கூட கணிக்கப்படலாம் ஆனால் அவைகளை அடிமை வேலைகள் என எவ்வாறு கணிக்க இயலும். உலகமே வியந்து நோக்கும் இந்திய நாட்டின் “குடும்ப வாழ்க்கை” கட்டுக்கோப்பு அடித்தளத்தின் ஆணி வேரையே அசைக்கக் கூடியதல்லவா இக்கருத்து. இவற்றின் மூலம் பெண்களுக்கு கொடுக்கும் அறிவுரை என்ன? குழந்தைகள் பெற்றால்தானே “குழந்தை வளர்ப்பு” எனும் அடிமை தொழில் எனவே குழந்தையே இனி பெறல் வேண்டா! திருமணம் எனும் சடங்கால்தானே அடுக்களை, வீடு, விருந்தோம்பல் எனும் தொடர் அடிமை தொழில்கள் எனவே திருமணமே வேண்டுவதில்லை.
இவைகளா “பெண்கள் சுதந்திரம்” எனும் உயரிய நெறியின் செறிவு ?

இன்று “பெண்ணடிமைப் போக்கை” இரு நிலைகளில் புரிந்துகொள்ள வேண்டுமென எண்ணுகிறேன். பெண்களின் தனிப்பட்ட குடும்ப சூழலில் நிலவும் தன்மை, அவர்களின் சமூக வாழ்க்கையில் நிலவும் தன்மை.

தனிப்பட்ட குடும்ப சூழலில் நிலவும் தன்மை:

மனிதகுல வளர்ச்சியில், தனிமனிதனாய் சுற்றித்திரிந்தவன், குடும்பமாய் மாறியதும், பல குடும்பங்கள் இணைந்து ஓர் சமூகமாய் உருப் பெற்றதும் - நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பரிணாம வளர்ச்சியில் பெண்ணடிமை என்று? எவ்வாறு? வந்து ஒட்டிக்கொண்டது என்பது ஆழ்ந்த ஆய்விற்குரியது. இந்த சீர்கேட்டின் தோற்றுவாய் ஆண்களின் ஆணாதிக்க மனப்போக்கே என வாதிடுவதில் உண்மையுண்டு. ஆனால் பெண்ணடிமையை வளர்த்ததில், வளர்ப்பதில் பெண்களுக்கும் பெரும் பங்குண்டு என்பது இன்றளவும் மறுக்க இயலா உண்மைகள். திருமண வாழ்வு முறையில் நிலவும் வரதட்சினை கொடுமையில் ஆண்களின் பங்கும் பெண்களின் பங்கும் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம். ஒரே குடும்ப சூழலில் ஒரு பெண், தன் மகள்பால் ஒரு நிலையும் மருமகள்பால் நேர் எதிர் நிலையும் எடுத்து பெண்னே பெண்ணுக்கு எதிராய் செயல்படும் போக்கில் பெரிய மாற்றங்கள் எதுவும் இன்னும் ஏற்பட்டு விடவில்லை. இதில் பெண்களுக்கு விழிப்புணர்வு இன்னும் அதிகம் தேவைப் படுகிறது. பெண்களின் இந்த மனப்போக்கை மாற்ற அவர்களின் மேன்மைக்காக பாடுபடும் அமைப்புகள் இன்னும் தீவிரமாக சிந்திப்பது அவசியம்.

குடும்ப சூழலில் பெண்கள் ஆண்களால் (என்ன உறவுமுறையாயினும்) போற்றப்படுவது இன்று ஓரளவு வளர்ந்து வருகிறது. எதார்த்த நிலையில் இதனை மறுக்க இயலாது. அப்படி ஆண்களால் போற்றப்படுவது ஒன்றும் மனப்பூர்வமான ஒன்றல்ல, பெண்கள் குடும்பத்திற்குள் கொண்டுவரும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டே போற்றப்படுகிறார்கள் என்கின்ற வாதமும் இல்லாமல் இல்லை. இதனை துல்லியமாக சதவீத வகைப் பிரிக்க எடைத் தட்டுக்கள் எவையும் இல்லை. என்றாலும் உள்ளார்த்தமாக போற்றுபவர்களும் உள் அர்த்தமாக போற்றுபவர்களும் எவ்வாறேனும் பெண்களை போற்றுவதற்கு தொடங்கியமை போற்றுதலுக்கு உகந்ததே. எவ்வாறு கணிப்பினும், தனிப்பட்ட குடும்ப சூழலில் பெண்களுக்கான சுதந்திரமும், சமத்துவம் நல்ல மாற்றமும், வளர்ச்சியும் பெற்று வருகிறது என்பது உண்மை நிலையாகும்.

சமூக வாழ்க்கையில் நிலவும் தன்மை:

சமூக வாழ்க்கையில் பெண்களின் நிலை, ஏனைய மேலை நாட்டோடு ஒப்பிடுகையில் நம் இந்திய நாட்டில் மிக மோசமாகத்தான் இருக்கிறது. இதற்குரிய காரணிகளை ஆராய்ந்தால் இதில் ஆண்களின் மனப்போக்கு மிக கணிசமான பங்கு வகிக்கிறது. தங்கள் இல்லங்களில் பெண்களை மதித்து நடப்பவர்கள்கூட வெளி இடங்களில் மற்றும் அவர்கள் ஆளுகைக்குரிய பணியிடங்களில் பெண்களை கேலிக்குரிய வகையில் கண்ணியக்குறைவாக நடத்துவது தொடர்ந்து கொண்டு வருகிறது. நவீன பெண்களின் நடை உடை பாவனைகள் தங்களை இவ்வாறு நடந்துகொள்ள செய்கின்றன என்ற அவர்களின் சமாளிப்புகள் சரியான காரணமாக தெரியவில்லை. அவர்கள் சிந்தனை தெளிவின்மையையே இவைகள் காட்டுகின்றன.

பெண்களுக்கான அமைப்புகளிலும் பலவேறு தன்மைய அமைப்புகள் நிலவுகின்றன. மேல்தட்டு பெண்கள் வெறும் பொழுதுபோக்காய் பயன்படுத்தும் பெண்ணிய அமைப்புக்கள். இத்தகைய அமைப்புகளின் குறியீடுகளாய், திரு பாக்யம் ராமசாமி அவர்களின் “அப்புசாமி சீதாபாட்டி” கதைகளில் வருவதுபோல் பளபளக்கும் பட்டாடைகளும் உதட்டுச் சாயங்களும் முகத்தில் அணியும் கருப்பு கண்ணாடிகளும் காட்சியளிக்கின்றன. இவைகளால் பெரிதாக எந்த சமுதாய பயன்களையும் பெற்றுவிட இயலாது.

அடுத்து சமூகப் பணிகளில் மட்டும் முழமையாக ஈடுபடும் பெண்கள் அமைப்புகள். இத்தகைய அமைப்புக்கு மிகச்சிறந்த உதாரணம் திருமதி சின்னத்தாய் அவர்களின் அமைப்பு. அவர்கள் பெரிய கல்வியறிவு பின்புலமோ, நவ நாகரீக பாவனைகளோ அற்ற நிலையிலும் தங்களது சீரிய செயல்களின் மூலம் பலரின் புருவங்களை உயர்த்தி அமைப்பின் மதிப்பீட்டை உயர்த்தி இpருக்கிறார்கள். எனவேதான் திரு வாஜ்பாய் அவர்கள் பிரதம அமைச்சாராக இருந்தபோது பொது மேடையில் திருமதி சின்னத்தாய் அவர்களின் பாதங்களை குனிந்து வணங்கினார். அப்பொழுது அங்கு நிமிர்ந்து நின்றது நமது பண்பாடு மட்டுமல்ல பெண்களின் உயர்வும்தான். சமீபத்திய சுனாமி துயர்துடைப்பு பணிகளிலும் திருமதி சின்னத்தாய் அவர்களின் அமைப்பு ஆற்றிய பணி போற்றுதலுக்கு உரியதாகும். இத்தகைய அமைப்புகளால் பெண்கள் சுதந்திரம் உரிமை இவைகளில் பெரிதாக எதையும் பெற்றுவிட முடியாது எனினும் பெண்களின் சமூக மதீப்பீட்டை நிச்சயம் உயர்த்த முடியும்.

மூன்றாவதாக முழுமையும் பெண்களின் உரிமை சுதந்திரம் இவைகளுக்காக இயங்கும் இயக்கங்கள் சார்ந்த அமைப்புகள். இவைகள் உலகம் தழுவியும், நல்ல சட்ட பாதுகாப்புகளோடும், உரிமைகளோடும் நடைபெறுகின்றன. பெண்ணியத்தை நிறுவுவதில் இவைகளின் பணிகள் மிகவும் கடினமானதும் தொடர்தன்மை கொண்டதுமாகும். இவர்கள் வகுக்கும் நெறிமுறைகளும், உரிய முறையான போராட்டங்களுமே பெண்ணியத்திற்கான கட்டுமானங்கள்.

பெண்ணியத்திற்கான அமைப்பு வகையை சாராத மற்றுமொரு பெண்கள் சார்ந்த அமைப்பு முறை நிலவுகிறது. இவைகள் இயக்கங்களில் இணைந்து செயல்படும் பெண்கள் அமைப்பு முறைகள். இதற்கான சிறந்த உதாரணம் ஈழத்தின் விடுதலைப் புலிகளின் அமைப்புகளில் பங்குபெறும் பெண்கள் அமைப்பு. இதில் பெண்கள் ஆற்றும் சாதனை, மற்ற எல்லாத்துறைகளிலும் பெண்கள் தனியாகவும் கூட்டாகவும் ஆற்றிய சாதனையை காட்டிலும் மிகவும் வேறுபட்டதும், கடினமானதும், சிக்கலானதும், எல்லாவற்றிலும் மேலாக தன் உயிரையே பணயமாக்க கூடியதானவுமாகும். இது ஒன்றே, வேறு எந்த அளவுகோலும் தேவையற்ற வகையில் “ஆணுக்கு பெண் சமமே” என உலகம் தீர்மானிக்க போதுமானதாகும்.

இக்கட்டுரைக்கு தொடர்பு இருக்கிறதோ என்னவோ கடமையாக கருதி இதனை கூற விழைகிறேன். விடுதலை புலிகளின் அமைப்பில் பெண்கள் கண்ணியமாக நடத்தப்பெறும் பாங்கு உலகம் முழுமையும் ஒருசேர போற்ற வேண்டியதாக நான் உளமாற நம்புகிறேன். இதில் கருத்து வேறுபட காரணமிருப்பதாக உலகின் மிகப்பெரிய பொது அமைப்பான ஐக்கிய நாட்டுச் சபையே கருதுவதாயின், வல்லுனர் குழு சார்ந்த ஒரு கள ஆய்வினை செய்து முடிவுகளை உலகுக்கு கொண்டு வரலாம். அவை பெண்ணினத்திற்கு வலு சேர்ப்பதாக நிச்சயம் இருக்கும்.

இக்கட்டுரையின் விழைவு

பெண்கள் சமத்துவம், சுதந்திரம் என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாய வளர்சிக்கும் தேவையானது. அத்தகைய பெண்ணிய கருத்துருவாக்கத்தில், குறுகிய கால பயன்களை மட்டும் இலக்காக கொண்ட தெளிவற்ற சிந்தனையை தவிர்த்து, பெண்களின் தனி வாழ்விலும் சமுதாய பொது வாழ்விலும் நீண்ட கால பயன்களை உருவாக்க வல்ல கருத்துகளையே முன்னடத்திச் செல்ல வேண்டும் என்பதோடு, அவற்றை அடைவதில் அனைவரும் தெளிந்த, முறையான நெறி நின்று தன் பங்களிப்பை வழங்க வேண்டுமென்பதுமே இக்கட்டுரையின் விழைவு.

1 comment:

Anonymous said...

Sir,
I read your article , I felt interesting to read. I would like to read more from u and wishes for u

chennaivasi