Wednesday, March 02, 2005

முன்மொழிந்தோரை வாழ்த்தி, வழிமொழிவோம்!

இன்று தமிழர்கள் மத்தியில் ஓரு சூடான விவாதம் தோன்றியிருக்கிறது அல்லது தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இது தாய் தமிழகத்தில் மட்டுமின்றி, உலகின் மூலை முடுக்குகளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் ஓர் தாக்க அலையை ஏற்படுத்தி வருகிறது.

'தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் தமிழில்தான் வைக்கப்பட வேண்டுமா? அல்லது ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் வைப்பதற்கும் அனுமதிக்கலாமா?' தமிழ்மொழி செம்மொழி என நடுவண் அரசால் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற உணர்வுடைய தமிழர்களின் நீண்ட நாள் கனவு, ஓரளவு நிறைவேறியுள்ள நிலையில் இதுபோன்ற விவாதங்கள் எந்தத் தமிழர்களாலும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.

இவ்விவாதத்தின் இருபுறமுள்ள வாத பிரதிவாதங்களை சீர்தூக்கி, ஆய்ந்து தெளிவடைவதோடு, தெளிந்த முடிவை நடைமுறைப்படுத்த தலைப்படுவதும் தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகி நிற்கிறது. எனவே இவ்வாய்வுக்கு துணைநிற்கும் வகையில் இக்கட்டுரை புனையப்படுகிறது. திரு அக்னிப்புத்திரன் அவர்களும் பேராசிரியர் திரு சுப.வீரபாண்டியன் அவர்களும் தங்கள் கட்டுரையின் வாயிலாக பல தெளிவான விளக்கங்களை கொடுத்திருக்கிறார்கள். எனவே முழுமையும் தொடர்ச்சியும் கருதி, வாசகர்கள் அக்னிப்புத்திரனின் கட்டுரைகளான “கமலஹாசனுக்கு ஒரு வேண்டுகோள்”1 மற்றும் “தமிழ்தான் தமிழனுக்கு முகவரி”2 என்பனவற்றையும், சுப.வீரபாண்டியன் கட்டுரையான “தமிழ்ப் படம் - ஆங்கிலப் பெயர் அண்ணாவின் கொள்கையா?”3 என்ற கட்டுரையையும் முதலில் வாசித்து பின் இக்கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்.

மேற்கூறிய திரைப்பட பெயர் குறித்த விவாதத்தில் ஒரு சிறிய ஆறுதல் அளிக்கும் அம்சம் தொக்கி நிற்கிறது. ஆங்கிலப் பெயர்களை வைத்துவிட்டுத்தான் போகட்டுமே என வாதிடப் புகுவோர்கூட “பிஃஎப்” போன்ற நா கூசும் நாற்றப் பெயர்களுக்கு பல்லக்கு தூக்கவில்லை. ஒருவேளை இதை இன்று ஆதரித்தால், எதிர்வரும் காலங்களில் ஆங்கிலத்தில் உள்ள இதனினும் கீழான, கேவலமான, இழிச் சொற்களை தேடித் துருவி கண்டுபிடித்து வைத்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு காரணமாக இருக்கலாம்.


அல்லது நமது மூதாதைத் தமிழரின் பண்பாட்டு, நாகரீக, கலைக் கலாச்சாரத்தின் மீது இன்றைய தலைமுறைத் தமிழர்களுக்கு உள்ள குறைந்தபட்ச அக்கரையாகக்கூட இருக்கலாம். எவ்வாறாயினும் இதுகுறித்து அக்னிப்புத்திரன் சுட்டியுள்ளதைப் போல் நாம் சற்று ஆறுதல் பெருமூச்சு விடத்தான் வேண்டும்.

அக்னிப்புத்திரன் தன் இரண்டாம் கட்டுரையில் ஓர் நல்ல பண்பை, முன்மாதிரியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கருத்துக்களுக்கு வந்த ஆதரவு மற்றும் பாராட்டு மின்னஞ்சல்களை பட்டியலிடாது, எதிர்க்குரல்களை மட்டுமே பட்டியலிட்டு விளக்கமளித்திருக்கிறார். நமது சட்டமன்றங்களும் பாராளுமன்றங்களும் ஆழமாக சிந்நிக்கவேண்டிய பண்பு இது. திரைப்படத்தின் நல்ல தமிழப் பெயருக்கு எதிர்வாதம் புரியும் பட்டியலில் பலவும், மூல விவாதத்தின் கருவின் பொது நோக்கை திசை திருப்பி சிதைத்துவிட முயலும் உருட்டு புரட்டு வாதங்களே. சில சில்லறை விசயங்களை தூக்கிப் பிடித்து, பொதுத்தன்மையை மறைத்து, தனி மனித விமர்சனங்களை முன்வைத்து, மூலத்தைக் கெடுக்க முயலும் முயற்சியே. இவை போன்றவை இன்று நேற்றல்ல கால காலமாக தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் ஏவப்படும் முனை முறிந்தோடும் அம்புகள்தான்.

எட்டப்பன் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது சரியே என்பார் ஒருவர். காந்தி அகிம்சாவாதி என்று யார் கூறியது?, அவர் தென்னாப்பிரிக்காவில் நான்கு கரப்பான் பூச்சிகளை கொன்றார் என்பார் ஒருவர். பெரியார் ஒன்றாம் வகுப்பு படிக்கையில் என்னோடு வந்து சாமி கும்பிட்டார் என்பார் ஒருவர். அவ்வளவு ஏன்? பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொண்ட வெறுப்பில்தான் அவர்களில் ஒரு சிறுவனுக்கு பூணூலிட்டார், அந்த வகையில் ஒரு தாழ்த்தப்பட்டவனை அழித்து விட்டார்தானே? இப்படியாக அவர்களின் விவாதங்கள் இருக்கும். இவற்றில் சிற்சில, சிலகாலம் மத்தாப்பாய் மின்னினாலும் ஒருக்காலும் எவையும் அகல் விளக்காய் ஒளிர்ந்ததில்லை.

உதாரணமாக, கமல் தனது படங்களுக்கு இதுவரை தமிழில்தான் பெயர் வைத்தார். இந்தமுறை மட்டும்தான் ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார் என்று ஒரு வாதம். இதனை உணர்ந்துதான் அக்னிப்புத்திரன், சற்றும் சமுதாய கண்ணியமோ, அக்கறையோ இல்லாத சூர்யாவிற்கு வேண்டுகோளை வைக்காமல் கமலுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார். எனவே இவைபோன்ற சொத்தை வாதங்களை புறம்தள்ளி சற்றேனும் வலுவான தோற்றத்தை உருவாக்க முயலும் விவாதங்களுக்கு விடை காண விழைவது தாய்த் தமிழ் மீது நாட்டம் கொண்டோர் அனைவரின் கடமையாகும். அத்தகையவைகளைக் கீழே பட்டியலிட்டு ஒவ்வொன்றாக ஊன்றி நோக்குவோம்.

1) சினிமா வியாபாரம், அதில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?
2) தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா?
3) ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் பேச முடியுமா?
4) தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரிகம் அடைந்திருக்கிறான். இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்து கொள்ளத் தெரியாமல், கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான்.

1. திரைப்படம் வெறும் வியாபாரம் மட்டும்தானா?

திரைப்படத் துறையை வெறும் வியாபாரம் என்று கூறும் எவரும் அதை உயர்த்துவதற்கு மாறாக குறுகிய வட்டத்தில் அடைத்து இழிவுபடுத்துகிறார்கள் என்பதே உண்மை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திரைப்படத் துறையின் பன்முகத் தன்மையை உலகமே ஏற்றுக் கொண்டுதான் உள்ளது. அதில் வியாபாரம் என்பது ஒரு முக்கிய கூறு அம்மட்டே. திரைப்படத் துறையை கலை என்பாரும், சமூகவியலை விரைவாக மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகம் என்பாரும், மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சிக் கூறு என்பாரும், பல்லோருக்கு வாழ்வளிக்கும் பொருளாதார மேம்பாட்டு மையம் என்பாரும், கூறும் அனைத்து கூற்றிலும் பொருளுண்டு.


விவாதத்திற்காக வியாபாரமாகக் கொண்டாலும், வியாபாரம் என்பது விற்பவர் ஒருவரோடு முடிந்து விடும் செயலல்ல. தனக்கு பல உரிமையை வருந்திக் கோரும் விற்பனையாளர், வாங்குபவருக்கு உரிய சில கடமைகளையும் ஆற்ற வேண்டிய கடப்பாடு உடையவராகிறார். உதாரணமாக, நாம் அரிசி வாங்க கடைக்கு செல்கிறோம். கடைக்காரர் நம் கண் முன்பாக பருப்பு மூட்டையில் கற்களைக் கலக்கிறார். பருப்பு அந்த நொடியில் நமக்கு சம்மந்தமில்லாததுதான். எனினும் நாம் வெறுமனே நின்றுவிட முடியுமா? முதலில் அவரிடம் இவ்வாறு கலப்படம் செய்யாதீர்கள் என்கிறோம். அவரும் தவறுணர்ந்து திருத்திக்கொள்ளும் பொழுது அக்கணமே பிரச்சினை சுமூகமாக தீர்ந்து விடுகிறது. அவர் உணர்ந்தும் உணராதாராய் முரண்டு பிடிக்கிறார். என் செய்வது? தீர்வு அமைப்பு இருப்பின் அதனிடம் முறையிடுகிறோம். தீர்வாயமே தீரா குழப்பத்தில் உள்ளது. பிறகென்ன செய்வது? அவ்வங்காடிப் பொருளை நுகர்வோர் எவரோ அவர்களிடம் செல்கிறோம். இன்னார் கலப்படம் செய்வதால் அவர் கடைப் பொருளை வாங்காதீர்கள் என்கிறோம். இதில் ஒருவரின் உரிமை மீறல் எங்கு வருகிறது.

திரைப்படம் வெறும் வியாபாரம் மட்டுமல்ல கலையும் கூட, எனவே கலையில் மற்றவர் தலையீடு அதன் ஆக்கத்தை கெடுக்கும் என சிலர் வாதிடுகிறார்கள். இதனை வெறும் வறட்டு வாதமாக வாதிடுவோர் நீங்கி, அப்படி உண்மையாக நம்புபவர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பல தமிழ்த் திரைப்படங்கள் எத்தனையோ சமூக சீர்திருத்த கருத்துக்களை, புதிய முயற்சிகளை முன்னெடுத்து சென்றிருக்கின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அத்தகைய முயற்சிகளுக்கெல்லாம் தமிழ் மக்கள், அரசியல்வாதிகள், சமூகவாதிகள் என அனைவரும் பாராட்டி ஒத்துழைத்தார்களா? அல்லது உங்கள் அன்றாடப் பணிகளில் புகுந்து தொல்லை கொடுத்தார்களா? ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் கேலியும் கிண்டலுமாக இகழ்ந்த படங்களைக் கூட அவர்களில் பலருமே பாராட்டிய காலங்கள் உண்டா இல்லையா?

கலை என வாதிடுவோர் எது கலை என்பதில் தெளிவடைய வேண்டும்? சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் அழகிய சிலை ஒன்றை வடித்தான். மக்கள் அனைவரும் சுற்றி நின்று அவனை வெகுவாக பாரட்டினார்கள். ஒருவர் அவன் திறனை வியந்தார். மற்றவர் சிலையின் அழகை புகழ்ந்தார். பிறிதொருவர் அவன் கை உளியை போற்றிப் புகழ்ந்தார். அந்த சிற்பிக்கு தன்னியம் தலை தூக்கியது, தலையில் கனமேறியது. அவன் அந்த சிலையை தன் கையுளி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கத் தலைப்பட்டான். இன்னிலையில் சுற்றியுள்ளோர் இத்செயலை தடுக்க முயல்வதா அல்லது சிலைக்கு செந்தக்காரன்தானே எது வேண்டுவானாலும் செய்து கொள்ளட்டும் என வாழாவிருக்க வேண்டுமா? இதற்குரிய விடையில்


“கலைகள் யாவும் பொதுஉடமை” என்பதும் அதைப் படைப்பவனே கூட அதற்கு “முழு உரிமை” கொண்டாட இயலாது என்னும் கோட்பாடும் பொதிந்திருக்கிறது.

கட்டாயம் ஆங்கில பெயர்தான் வேண்டும் என்று எண்ணிய சூர்யாவின் கருத்திற்கு, குறைந்த பட்சம் அதே ஆங்கிலத்தில் கண்ணியமிக்க “குட்ஃபிரண்ட்” என்றோ, “டியர் ஃபிரண்ட்” என்றோ தோன்றாதது ஏன்? இதுதான் நீங்கள் வற்புறுத்த விழையும் கலையா? இதுதான் கலை என்றால், அந்தக் கலை தேவைதானா? இதனை விவாதித்த என் நண்பர் ஒருவர்,


மிக மிக கீழ்த்தரமான ஒரு நான்கெழுத்து ஆங்கிலச் சொல்லைக் கூறி இந்த தலைப்பில் நான் படம் எடுக்க முனைந்தாலும் நமது முதல்வரின் ஆதரவு கிடைக்குமா என உணர்ச்சியோடு வினா எழுப்பினார்.

சட்டத்தின் மீது அக்கறையைக் காட்டிய நம் முதல்வர், இப்படி கீழ்தர பெயர் சூட்ட முயலும் குண கேடர்களுக்கும், ஒர் எச்சரிக்கையோ அல்லது குறைந்த பட்சம் சிறு அறிவுரையோ வழங்கியிருப்பாரானால் அது பல நல்ல நிகழ்வுகளுக்கும் திருப்பங்களுக்கும் வழி வகுத்திருக்கும். திரைத்துறையில் உள்ள நல்ல சிந்தனையாளர்கள் எண்ணித் தெளிய வேண்டும்.

2. தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா?

நிச்சயமாக வளர்ந்து விடாதுதான். தமிழ் பாதுகாப்பு இயக்கப் பெருமக்கள் எவரேனும் திரைப்படத் துறை மட்டுமே தங்கள் இலக்கு என கூறினார்களா? இல்லையே. “ரோமாபுரி ஒரே நாளில் கட்டிமுடித்து”விடக் கூடியதல்ல. எதனில் ஒன்றிலாவது தொடங்கித்தான் ஆக வேண்டும். அந்த வகையில் சரியாக சொல்வதானால், உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டியத் துறையைத்தான் சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, பொங்கு தமிழ் வளர்ச்சி பயிலகம், தமிழ் இசை வளர்க்கும் முயற்சி என பல திட்டங்களையும் அவர்கள் கூறிய வண்ணம்தான் உள்ளார்கள். எவ்வாறாயினும் தனிப்பட்டவர்களோ அல்லது ஒரு சில அமைப்புகளோ மட்டும் நம் அன்னை தமிழ் வளர்ச்சியை முழுமைப்படுத்தி விட இயலாது. இன்று அரசு மட்டத்தில் பல்வேறு மொழி ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவைகள் மட்டுமே போதுமானது அல்ல. உலகந் தழுவிய சர்வகலாச்சாலைகள், மொழியியல் அமைப்புகள் தமிழ் ஆய்வில், வளர்ச்சியில் அக்கறைக்காட்ட ஆர்வமுடனிருக்கின்றன. நமக்கு நாமே உட்பகை வளர்க்கும் போக்கை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவைகளின் வளங்களை நம் தமிழுக்கு பயன்படுத்திக் கொள்ள இயலும். ஒன்றுக்கும் உதவாத வாதங்களில் நம் சக்திகளை இழந்து விட முனைவது புத்திசாலித்தனமாகாது. அவரவர் தமிழ் வளர்ச்சிக்கு தம்மிடம் உள்ள திட்டங்கள் எண்ணங்கள் எவையிருப்பினும் அதை பலருடன் பகிர்ந்து உதவ வேண்டுமேயன்றி இவைபோல் உதவா விவாதம் ஒரு நாளும் எவைக்கும் உதவா.

3) ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்த பட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் பேச முடியுமா?

இங்கு ஒரு தமிழன் ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா என வினா எழுப்புகிறான். ஆனால் உலகமோ இனி தமிழ் இன்றி வாழ முடியாது என முடிவெடுக்கிறது. வியப்பாக உள்ளதா? ஆனால் உண்மை. கணினி துறையில் இதுகாறும் தமிழ் எழுத்துரு(யூனிகோடு)வுக்கெனத் தனியிடம் அளிக்காத சர்வதேச தர நிர்ணய அமைப்பு இன்று அதனை வழங்கி தமிழுக்கு சிம்மாசனம் அளித்துப் போற்றுகிறது. காரணம் என்ன? ரோஜா படுக்கைகள் தானே மலரா. கணினித் துறையின் இணையத் தள உள்ளீடுகளில் ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் நம் தமிழ்தான். அடுத்த சில ஆண்டுகளிலேயே கணினித் துறையில் தமிழ் மொழியின் வளர்ச்சி மிக உன்னதமாக இருக்கும் என மொழி ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். இதிலெல்லாம் பெருமை கொள்ள வேண்டிய தமிழன் தன் பலம் அறியாதவனாய் வீண் வினா எழுப்பித் திரிகிறான்.

ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் பேச முடியுமா? இந்த மயக்க நிலை இன்று பரவலாக பலரிடம் காணப்படுகிறது. தனித் தமிழில் அல்லது தூய தமிழில் உரையாட இயலவில்லை என்பது அவரவர் சூழலையும், மொழித் திறனையும் பொறுத்தது. இது எல்லா மொழிக்கும் பொருந்தும். நம்மில் பலர் பிற மொழி கலந்து உரையாடுவது, தமிழ் மொழியில் சொற்கள் வளம் இல்லாமையால் அல்ல தங்களால் இயலாமையால்தான். இதில் இலங்கை தமிழ் சோதரர்கள் நம்மை விட பன் மடங்கு உயர்ந்து நிற்கிறார்கள் என்பது நான் கண்ட அனுபவ உண்மை. அவர்கள் அன்றாடம் புதுப் புதுச் சொற்களை உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்கள்.

அண்ணா அவர்களின் இரு மொழிக் கொள்கை அன்றைய காலத்தின் கட்டாயமாக இருந்தது. திரு வீரபாண்டியனாரின் மேற்கூறிய கட்டுரை, விளங்காதார் விளங்க ஓர் அரிய கண் திறப்பு. உறங்கிகள் இனியேனும் விழிக்கட்டும். ஒன்று நிச்சயம் இன்றும் நாம் ஆங்கில மொழிக்கு எதிரிகள் இல்லை. நம் மொழியின் வளர்ச்சிக்காக முயல்வதுவே நம் பெரு விருப்பு. மேலும் தெளிவு வேண்டுவோர், தென்செய்தி இதழில் பிரசுரமாகி உள்ள திரு ஜீவா அவர்களின் “மொழி அழிந்தால் இனம் அழியும்” என்ற கட்டுரையை4 வாசித்து தெளிய வேண்டுகிறேன்.

4) தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரிகம் அடைந்திருக்கிறான். இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்துகொள்ளத் தெரியாமல், கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான்.

போராயிரம் கண்டும் பொன்றா புகழ் மிகு தமிழை, தமிழனின் தொன்மை நாகரிகத்தை, பண்பாட்டை, தன்மானத்தை இதனிலும் கீழாய் இகழ யாராலும் இயலாது. இந்த கருத்துக்கு சொந்தகாரன் ஒன்றும் அறியா அரைவேக்காட்டாளனாய் இருக்கவேண்டும் அல்லது அக்னிப்புத்திரன் கூறியதைப் போல் “அசல்வித்தாய் இல்லாதவனாய்” இருக்க வேண்டும். இவனொத்தார்க்கு, கால எல்லை கடந்த தமிழின் இலக்கிய, இலக்கண, பண்பாட்டு, நாகரிக வரலாற்று சான்றுகளை காட்ட முனைவது வெறும் கால விரயமே. “கழுதை அறியுமோ கற்பூர வாசம்” என ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள். இவர்கள் வாதத்திற்கு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

திரு பழ. நெடுமாறன் அவர்கள் சமீபத்திய தொலைக்காட்சி ஒன்றுக்கான நேர்காணலில் ஓர் செய்தியைச் சொன்னார். ஃபிரெஞ் மொழிக் கழகம் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தித் தாளில் இரண்டு ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தியமைக்காக அச் செய்தி நிறுவனத்தை மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்ததாக கூறினார். இங்கு “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என எவன் வேண்டுமானாலும் தமிழை, தமிழனை இகழ்ந்து பேசிவிட முடியும். அதற்கும் ஆலவட்டம் போட ஓர் கூட்டம் திரியும். என்ன நிலையிது?

திரைத்துறைசார் நெறியாளர்கள் சிந்தனைக்கு..

ஒட்டு மொத்த திரைத் துறையை வெறுக்க அல்லது ஒதுக்க யாரும் முனையவுமில்லை. அது தேவையுமில்லை. இன்று தோன்றியுள்ள மோதல் நிலை தற்காலிகமாகமானதே. தமிழக திரைத் துறையின் வரலாறு அறிந்தவர்கள் இதில் தெளிவாகவே உள்ளார்கள். ஆங்கிலேயர் கால அடக்குமுறை தளமாக அன்றைய தணிக்கை வாரியம் இயங்கிய காலத்திலேயே “தியாகபூமி”, “மாத்ருபூமி” போன்ற நாட்டுப்பற்று மிக்க படங்களை எடுத்தும், சுதந்திரத்திற்குப் பின் “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பல் ஓட்டிய தமிழன்” போன்ற உயரிய காவியங்கனை படமாக்கியும் சமுதாயத்தின்பால் தனக்குள்ள அக்கரையைத் திரைத்துறை நிருபித்து காட்டியிருக்கிறது.


அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஒரு துறையின் அங்கமாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை இன்றைய திரைத்துறை இளைய சமூகத்தினர் உணர்வார்களேயானால் திரைத்துறையில் பண்பாட்டுச் சிதைவுகள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

தமிழ்மெழியின் பாதுகாப்பு விழையும் யாரும், புதுமையே கூடாது என வாதிடும் வெறும் வறட்டு பழைமைவாதிகள் அல்ல. புதுமை எனும் பெயரால் அவலங்கள் அரங்கேறக் கூடாது என்பதில்தான் அக்கறை காட்ட வேண்டியுள்ளது. பல்வேறு காரணங்களால் நலிந்து வரும் திரைத்துறை, இதன் வாயிலாக மேலும் பாதிப்புக்கு வழி வகுத்துக் கொள்ளாது, சுமூகமான தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

அன்னிய நாட்டில் வாழும் தமிழர்கள் திரைத்துறையினரை விரும்பி அழைத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்களே எதனால்? தாங்கள் வாழ்க்கை சூழுலில் தொலைத்து விட்ட தமிழர் நடை, உடை, பாவனை முதலியவற்றை உங்களின் வாயிலாக பார்த்து மகிழத்தான். நீங்கள் முழுமையாக மேலை நாகரீகத்தில் மூழ்கி விடுவீர்களானால், நாளடைவில் அவர்களிடமிருந்தும் அன்னியப்பட்டு போகும் அபாயமும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஜப்பானில் திரையிடப்பட்ட ரஜினியின் படங்களை ஆங்கிலப் பெயருக்கு மாற்றினால்தான் திரையிடுவோம் என ஜப்பான் மக்கள் ஆணையிடவில்லை. திரைத்துறை சற்று முயன்றால், சுண்டியிழுக்கும் தமிழ்ப் பெயர்கள் ஆயிரமாயிரமாய் உருவாக்கிக் கொள்ள முடியும். அப்படி உருவாக்கப்படும் சொற்றொடர்கள் இலக்கியத் தொடர்களாய் அனைவரின் பாராட்டுகளையும் தாய்த் தமிழ் நாட்டுக்கு சீதனமாய் வழங்கும் என்பதிலும் ஐய்யமில்லை.


இவ்விவாதத்தின் பின்னால் இயக்குநர் சேரன் அவர்கள் தன் படத்தின் பெயரை 'டூரிங் டாக்கீஸ்' என்பதை தமிழுக்கு மாற்றியதின் வாயிலாக பாராட்டுதலுக்குரிய சிறந்த முன்மாதிரியை செய்திருக்கிறார். இனியும் கால விரயமின்றி, பல்வேறு திரைத்துறை அமைப்புகளை சார்ந்த தமிழ் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் சுமூக தீர்வுக்கான முன்னெடுப்பை தொடங்க வேண்டும். இதுவே அனைவர்க்கும் நலம் பயக்கும் உயரிய வழியாகும்.

(தட்ஸ்தமிழ் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டது)

14 comments:

Mannai Madevan said...

திரு மூர்த்தி அவர்களே!

சரியாக சொன்னீர்கள்…

சூர்யாவின் படப்பிடிப்பில் நடந்த எதிர்ப்பு கோசங்களின் போது, உதவிக்கு
காவல்துறையை அழைத்தது மட்டுமின்றி “எல்லாம் அம்மா பாத்துப்பாங்க”
என்றும் கூறியிருக்கிறார். தட்ஸ்தமிழ் இணையத்தில் செய்தியை பாருங்கள்.

வேதனையாக உள்ளது.
என்ன சொல்வது?
தமிழர்கள் இன்னும் உணர்வு பெறவேண்டும்

உங்கள் கருத்துரைக்கு நன்றி

அன்புடன்
மன்னை மாதேவன்

HS said...

அருமையான கட்டுரை,
வாழ்த்துக்கள்!

-L-L-D-a-s-u said...

'மதுரை மீனாட்சி மிஷன்' மருத்துவமனை யாரது.. அடுத்தவன் மூக்குக்குள் பார்க்குமுன் குறைந்தபட்சம் தன் மூக்கை சுத்தம் செய்யவேண்டும் .

வன்னியன் said...

எல்.எல்.தாசு (நீங்கள் எழுதுவதற்கும் நானெழுதியதற்கும் உச்சரிப்பில் வித்தியாசமில்லையென்றே நினைக்கிறேன்.) கட்டுரைக்கு மறுப்புக்கள் தரவியலாதவிடத்து நீங்கள் இப்படித்தான் திசை திருப்புவீர்கள் என்பது தெரியும். இது இக்கட்டுரையிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. (மற்றும் படி சுத்தம் பற்றிக் கதைப்பவர் தன்மூக்கையும் சுத்தமாய் வைத்திருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பமும். ஆனால் அதற்காகவே அவர் சொல்லவருபவற்றைத் தட்டையாக மறுப்பவனல்லன்.)

Anonymous said...

வணக்கம்! மன்னை மாதேவன்..

முன்மொழிந்தோரை வாழ்த்தி, வழிமொழிவோம்!

மிகவும் அருமையான முறையில் மிகவும் சிறப்பான வகையில் கட்டுரை படைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரையைத் தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாகப் படித்துப் பயன் பெற வேண்டும். உங்கள் எழுத்து நடையும் மிகச்சிறப்பாக உள்ளது. மேலும் மேலும் சிறந்து விளங்க எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!

உணர்வலை௧ள் இணையப் பக்கத்திற்கு இனி நானும் ஒரு வாசகன்!

வாழ்க தமிழ்!

அன்புடன்
அக்னிப்புத்திரன்.

Mannai Madevan said...

அன்புமிகு அக்னிப்புத்திரன் அவர்களே!


தங்கள் வாழ்த்து கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுற்றேன். நன்றி.

தங்கள் நட்பு கிட்டியமைக்காக பெரிதும் மகிழ்கிறேன்.

தங்களின் தட்ஸ்தமிழ் இணைய தள கட்டுரை வாயிலாக நடிகர்

விஜயகாந்திற்கு கொடுத்திருக்கும் சாட்டையடி மிக நன்று.

இன்னுமொரு முறை நடிகர்களை நம்பி நம்;நாடு செல்லாது என

எண்ணுகிறேன். விஜயகாந்த் சிந்தித்து வெறும் மாயையில் இருந்து தப்பிக்கட்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

தங்களின் எழுத்துக்கு இங்கும் ஓர் நிரந்தர வாசகன்.


என்றும் அன்பில் நல்

மன்னை மாதேவன்.

-L-L-D-a-s-u said...

தமிழ் வளர்க்கும் உரிமையை திரைப்படத்துறைக்கு மட்டும் வார்த்து கொடுப்பதை என்னென்று சொல்வது? தமிழை தவிற மற்ற மொழியில் பேசினால் தான் கௌரவம் என என்னும் ஒவ்வொறு தமிழனின் மனம் தான் மாற வேண்டும் . அந்த முயற்சியில்தான் தமிழ் பாதுகாப்போர் செய்ய வேண்டுமே ஒழிய திரைப்பட பெயரை மாற்றி தமிழின் கௌரவம் காக்கப்படும் எனக் கூறுவது வெட்ககேடு .

தமிழ் வளர தமிழில் கணிணி மென்பொருள், தமிழ் OS , தமிழ் SMS செய்ய என்ன செய்வது என்று பேசினால் பாராட்டலாம். அவர்கள் என்றைக்காவது அந்த முயற்சி செய்வோரை பாராட்டியது உண்டா? முயற்சி செய்வோரின் பெயர் தெரியுமா அவர்க்ட்க்கு ?தமிழ் வளர்க்க இந்த முறை உள்ளது என்றாவது தெரியுமா?

தமிழை Theater- ல் மட்டும் தேடுவது தமிழனுக்கு வெட்கம் . ஏன் நாம் முதல்வர்களையும் , தமிழையும் Theater-ல் தேடுகிறோம்?

-L-L-D-a-s-u said...

வன்னியன் ,

ஆடு நினையுதுன்னு ஓநாய்கள் கவலைப்பட்டால் என்ன அர்த்தம் ?

ஜாதி போதையேற்றியதுகள் .. தமிழ் போதையேற்ற வருகிறார்கள் ..

உங்கள் பெயர் என்ன? ஓ.. புரிகிறது ..உங்கள் பார்வை..

Mannai Madevan said...

அன்பின் தாஸ் அவர்களே!

கட்டுரையில் தமிழ் வளர்ச்சிக்கு, திரைத் துறை மட்டுமே இலக்கல்ல என்பதை தெளிவு படுத்தியிருப்பதையும், கணினித் துறையை தொட்டிருப்பதையும் எண்ணிப் பாருங்கள். கணினித் துறை கவணிக்கப் படாமல் நிற்கிறதே எனும் உங்கள் ஆதங்கம் சரியே. நம் நாட்டு விளையாட்டுத் துறையையே எடுத்துக கொள்ளுங்கள் - சமச் சீராக வளர்கப்படுகிறதா? அல்லது வளருகிறதா?

இந்நிலையை நாம்தான் மாற்ற முயலவேண்டும். ஆதற்கு உகந்த வழிகளை சிந்திக்க வேண்டும்.

1. மற்றோர் பேற்றினாலும் போற்றாவிட்டாலும் இத்துறையின் தமிழ் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நம்மால் இயன்றதை முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

2. அவ்வாறு முயல்வோர்களை நாம் மனம் திறந்து பாராட்ட முன்வர வேண்டும். (உதாரணமாக திரு காசி, சுரதா பேன்றோர் “எழுத்துரு மாற்றி” பணி, நம் அனைவரின் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியது.)


3. பிற துறையினரின் பார்வையை நம் பால் இழுக்க பாடுபட வேண்டும். இது எளிதான காரியமில்லை. இப் பணி நீங்களல்ல நானல்ல நாம் என்ற நிலையில் மட்டுமே சாத்தியமானப் பணி.

இவையும் பிறவும் “எண்ணித் துணிவோம்”

கருத்துரைக்கு நன்றி

அன்புடன்

மன்னை மாதேவன்

வன்னியன் said...

எல்.எல்.தாசு!
என் பெயரில் என்ன பிரச்சினை? வேண்டுமானால் என் பதிவைப் போய்ப் பாரும் நான் யாரென்று. இந்த வன்னியனையும் ராமதாசையும் குழப்புவது முட்டாள்த்தனம். ஏற்கெனவே நான் இப்படி நடக்குமென்று பயந்துதான் 'பெயரை மாற்றவா' என்று ஒரு பதிவே போட்டேன். ஈழத்தில் வன்னியன் என்பதற்கு நீர் நினைப்பதைப் போல் எந்த அர்த்தமும் இல்லை.

வன்னியன் said...

பெயரைப்பாத்ததுமே சாதி பாக்கிறது எங்களுக்குப் புதுசு (சாதி பாக்கிறது இன்னும் இருந்தாலும்).

வன்னியன் said...

வன்னியன் என்பதைக் கிளிக்கினால் எனது பக்கம் வரவில்லை. 'பூராயம்' என்பது என் பக்கத்தின் பெயர்.
www.pooraayam.blogspot.com

Anonymous said...

கோயம்புத்தூர்க்காரன் மெட்ராஸ்காரன் என்பது போல ஈழத்தில் வன்னியன் அவ்வளவும் தான். ஒரு வேளை இது பிரதேசவாதம் என்ற பார்வையில் விமர்சிக்கப் படலாம். மற்றும் படி சாதிக்கு அங்கே இடமில்லை

Anonymous said...

மன்னை மாதவன்! தேடிப்பிடித்துப் பின்னூட்டமிட்டதுக்கு நன்றி.