Sunday, March 27, 2005

வலைஞர்களே! பயனமெங்கே?

வல்லான்மை மிக்க வலைப்பதிவு வலைஞர்களே!

உங்கள் இதயங்களை சற்று நேரம் எனக்கு கடனாகத் தாருங்கள். நம் எழுத்துக்களால் இந்த உலகையே மாற்ற விரும்பும் நாம் நம்மைப் பற்றியும் சிறது சிந்திக்க உங்கள் இதமான இதயங்கள் எனக்கு இன்று அவசியமாக தேவைப்படுகிறது. நம்புங்கள், சற்றைக்கெல்லாம் அவைகளை மீண்டும் உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன்.

வலைஞர்களான நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று பலப்பல எண்ண மலர்கள் வண்ண மலர்களாய், வாச மலர்களாய் மலர்ந்திருக்கின்றன. நாளும் நாளும் புதிது புதிதாய் மலர்ந்தும் வருகின்றன. தொகை தொகையாய் பவனி வரும் அந்த எழுத்து மலர்கள் ஒவ்வொன்றையும் வகைப் பிரித்தால், அதில்தான் எத்துனை எழுச்சிக் கருத்துக்கள், புரட்சிக் கருவூலங்கள், கால காலமாக மனத்தில் எழுதப்பட்டிருக்கும் மறுக்களை, ஒருநொடியில் மாற்றிவிட முடிந்த சிந்தனைச் சிதறல்கள்? இதுகாறும் நமக்கு எட்டா கனியாய் நின்ற எத்துனைச் செய்திகள்,
மறைக்கப்பட்ட வரலாறுகள், மறுதளிக்கப்பட்ட தீர்ப்புகள், இன்று ஆதாரப்பூர்வ ஆவணங்களாய், அறிவார்ந்த களஞ்சியங்களாய் நம் கரங்களில் தவழ்கின்றன. இந்தக் கனிகளை மந்திரத்தில் பறித்தவர் எவர். உழைப்பில்லா ஊதியங்களா இவைகள்? எப்படி சாத்தியமானது இது?

வலைத்தளம், கருத்துகளுக்கு கட்டுகளை இடும் கயவர்கள் இல்லாத வானவெளி. சுத்தமான காற்றை சுவாசிக்க நமக்கு கிடைத்த ஓசோன் படராத பூமி. இந்த எல்லையில்லா பரந்த வெளியில், எவர் துணையுமின்றி, நாம் “எண்ணிய எண்ணியாங்கு” இயம்பிட இயலும். இங்கு மட்டுமே சுதந்திரம் நம் பிறப்புரிமை. ஆனால் போராடி பெறாத எந்த சுதந்திரத்தின் மதிப்பும் எளிதில் உணரப்படுவதில்லை என்பார்கள். நாமும் வலைத்தளம் நமக்கு அளிக்கின்ற இந்த சுதந்திரத்தின் முழு புரிதலுமின்றி நம் பயணத்தை தொடங்கி விடுவோமோ என ஐயம் எழுகிறது. ஏகாந்த நேரத்தில் ஏன் இந்தக் கவலை என்றுதானே கேட்கிறீர்கள்?

வலைத் தளத்திலும் சில வல்லூறுகள் வட்டமிட தொடங்குகின்றன. வலைத்தளத் தோட்டத்தில் மலர்களுக்கு நடுவில் களைகளும் காலூன்ற துடிக்கின்றன. அவைகள் எந்த உருவில் வர துடிக்கின்றன என்பதற்கு உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் கூறுகிறேன். அவைகள் இங்கும் எழுத்துக்களுக்கு சாதி நிறம் பூசத் துடிக்கின்றன. நல்ல வேளை இது ஒரு தொடக்கம்தான். இதுவே சரியான சமயம். இன்று நாமே சிந்தித்து நம்மில் நிலவும் சிலபல குறைகளை நீக்கிக்கொள்ள தலைப்படாவிடில், நாளை காலம் கடந்த ஞானம் வெறும் கண்துடைப்பாய் மாறிவிடும்.

வலைபதிவாளர் என ஓரினமாய் நிற்கும் நம்மில் இவர் இன்னார் என இனம் பிரிக்க தலைப்பட்டு விட்டால் இறுதியில் என்ன மிஞ்சும். வெறும் குப்பை கூலங்கள்தான் மிஞ்சும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. இவை குறித்து இந்த தருணத்தில் கருத்தொருமித்த முடிவுகள் எடுக்கப்படவில்லையானால் எதிர் வரும் காலத்தில், வலைத்தளம் என்பது ஒர் இயக்கம் என்ற உயரிய நிலை மாறி வெற்றோசை கூட்டம் என்ற நிலை தோன்றிவிடும். நாம் இயக்கமாக ஏன் மாற வேண்டும் கூட்டமாகவே இன்னும் சுதந்திரத்துடன் இருந்துவிட்டு போவோமே என எண்ணுவோர் சற்று சிந்திக்க வேண்டும்.
இயக்கம் என்பது பல மூலகங்கள் சேர்ந்தாலும், அவை இரசாயன மாற்றம் அடைந்து, ஒவ்வொன்றும் தன் தனித்தன்மை மறைந்து ஒரு கூட்டுப்பொருளாய்(COMPOUND) உருவாவதை பேன்றது, வலுவானது, எளிதில் பிரிக்க இயலாதது, பயன்மிக்கது. மாறாக கூட்டமென்பது பல பொருள்களின் கலவை(MIXTURE) மட்டுமே. என்னதான் சேர்ந்திருந்தாலும் ‘தாமரை இலை தண்ணீர்’ போல் ஒட்டுதலற்ற நெறி சார்ந்தது. இதில் எதை நாம் விரும்புவது? எதை தேர்வு செய்வது?

உலகில் தோன்றிய இயக்கங்கள்தான் சாதனை களங்கள். முற்போக்கு சிந்தனையும், அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் தரத்தக்க தொடர் முயற்சியும் கூடிய தளங்கள். அங்கு ஒருவித போராட்டம் என்றும் இருந்துகொண்டே இருக்கும். அதன் எல்லாப் பணிகளும் ஒரு நோக்கம் சார்ந்த நகர்வாய் இருக்கும். சரி இயக்கமாக மாற வேண்டும் என்றால் எல்லாவற்றிலும், எல்லாவற்றுக்கும் ஒத்து போதல் என்பதா பொருள்? அல்ல அது தெளிவற்ற போலி.

கருத்துக்களுடான மோதல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அது தடுக்க தேவையில்லாத ஒன்றும் கூட. மோதல் என்பதுதான் இயங்கிக் கொண்டிருப்பதற்கான உயிரோட்ட சான்று. எனவே சில தர்க்க வாதங்களில் பின்னூட்ட போர்கள் அனல் பறக்கும் போர்க்களமாக மாறி விடுவதில் தவறில்லை. அப்பொழுதுதான் வாசகர்களிடம் ஒரு எரிமலையை தோற்றுவிக்க முடியும். எழுத்தில் ஒரு தட்டை தன்மைகள் மாறி உயிரோட்டம் நிலவும்.

இந்த மோதல் எங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது? எங்கு கருத்து மோதல் தனி மனித மோதலாய் மாறுகிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. எங்கு அடிப்படைப் பண்பாடுகளும் நாகரீகங்களும் காற்றில் பறக்கவிடப் படுகிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. எங்கு பிறர் சுதந்திரத்திற்கு விலங்கிட முயல்கிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. என் சுதந்திரம் என்பது ‘என் கைவீச்சு பிறர் மூக்கை உரசாதவரை’ என்ற தெளிவு பிறந்துவிட்டால் எந்த மாச்சர்யங்களுக்கும் இடமில்லை.

நவீன இயற்பியலின் நாயகர்களாக திகைபவர்களில் ஒருவரான விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் அவர்கள், முப்பது வருடங்களுக்கு முன் அறிவியல் முரண்பாடு நிறைந்த கருப்புவளை (BLACK-HOLE) குறித்த ஆய்வறிக்கையை உலகுக்கு வழங்கினார். அவர் இன்று தன்னால் முன்மொழியப்பட்ட கருத்துகள் தவறானது என முப்பது வருடங்களுக்கு பின் ஏற்று புதிய கருத்துக்களை உலகுக்கு வழங்குகிறார். கருத்து மாற்றங்கள் விஞ்ஞானத்தில் சாத்தியமாவதுபோல் மெய்ஞானத்திலும் சாத்தியமானதே.

இந்த தெளிவைப் நாம் பெற்றால் நம்மிடையே நடைபெறும் கருத்து மோதல்கள் குறிபிட்ட அந்த கருத்தோட்டத்தில் ஒரு தெளிவு பிறப்பதற்கான வழி முறைகளாக மாறிவிடும். அப்பொழுது இது பிறரால் போற்றப்படுவதோடு மட்டுமல்லாமல் சமுதாய பயன்மிக்கதாயும் மாறிவிடும். இன்னும் சில விவாதங்கள் உண்டு. அவைகள் கோழியா முட்டையா போன்ற விவாதங்கள். அவைகள் என்றும் நிலைத்திருப்பன. ஏதோ இன்றே அவை அனைத்திற்கான தீர்வையும் நாம் கண்டுவிட இயலும் என்பதைப் போன்ற மாயையில் சிக்கி கால விரயம் நட்பு விரயத்திற்கு இடமளிக்காமல், இவற்றில் நாம் விரும்பும் கருத்துக்கு வலுவுட்டத்தக்க செய்தியை மட்டும் பதிவு செய்துவிட்டு நாசுக்காக விலகிவிடுவதே நலமானது. இது தப்பித்தலா? தெளிவா? நாம் இதில் சற்று விவாதித்து தெளிவோமே!.

இதன் தொடர் சிந்தனையை நாளை தொடர்வோமா?

Monday, March 21, 2005

வாருங்கள் மருமகனே!

வாருங்கள் மருமகனே! வாழ்த்தி வரவேற்கிறேன்!

ஈழத்தின் சுழற்பந்து எம் வீட்டு மதிமலரை மணந்தது. முரளியாரே! இனி நீர், ஆடு களத்தில் மட்டும் பந்தை வீசிக் கொண்டிருக்க மட்டீர்கள். கிடைத்திருப்பது மலர் அல்லவா? அதிலும் வெறும் மலரா? மதி நிறைந்த மலரல்லவா? வாழ்க்கை களத்தில் நறுமணமும் வீசிக் கொண்டிருப்பீர்கள்.

வாழிய நலனே!

தமது குடும்ப நண்பர்கள் என்பதால் இணைத்து வைத்த சகோதரர் சந்திரசேகர் (திரைப்பட நடிகர்) சிறந்த செயல் புரிந்துள்ளார். எம் பாராட்டுகளும் நன்றிகளும். பாராட்டு சரி நன்றி எதற்கு? அவர் இணைத்து வைத்துள்ளது இரண்டு குடும்பங்களாக மட்டும் நான் காண வில்லை. உறவால், உணர்வால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றிய எம் இரு நாட்டை இணைத்துள்ளார். ஈழநாடு, தமிழ்நாடு. எனவேதான் நன்றிகள்.

தமிழர்தம் உயர்வுக்கு பாரதியும், அவன் தாசன் பா தாசன் - பாரதிதாசனும் கண்ட கனவுகளின் மிச்சத்தையும் சொச்சத்தையும் இன்று நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம். என்ன கனவு அது? உலகெலாம் பரவி நிற்கும் தமிழர்தம் தொப்புள் கொடி உறவுகள் மீண்டும் மீண்டும் இரண்டறக் கலந்து நாட்டு கொடியோடு போட்டியிட்டுப் பறக்க வேண்டும்.

தமிழன் தனியாளாய் எந்த தளத்திலும் நிற்கா நிலை வேண்டும்.

இத்தருணத்தில் ஒரு சிறு கேள்வியும் ஏனோ என் சிந்தையை தொலைக்கிறதே ஏன்?

நம் நாட்டில் நடந்த இத்திருமணத்தில் நமது இந்திய வீரர்கள் கலந்துகொள்ள வில்லையே ஏன்? சீப்புகள் ஒழிந்துவிடுவதால் திருமணங்கள் நிற்பதில்லைதான். இருப்பினும் கலந்துகொள்ளா காரணம் என்ன?

எனக்கு விடை பிடி படவில்லை. தெரிந்த வகையில் சமாதானம் செய்து கொள்கிறேன். போட்டிகள் நடப்பதால் அவகாசம் கிடைக்கவில்லையோ?

காரணம் எதுவெனினும் முக்கிய சிலரேனும் கலந்து கொண்டிருப்பின் அது நம்மை போற்றியதாகவும் ஆகும். நம் வீரர்களும் சமுதாய குடிமக்களே என்பதை நிறுவியதாகவும் ஆகும். எனக்கு என்னவோ அவர்கள் வானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. எதிர் வரும் காலங்களிலாவது அவர்கள் பூமியிலும் வாழ பழகட்டும்.

நண்பர்களே! இது தனியான என்னுடைய வாழ்த்தல்ல, நம் அனைவரின் வாழ்த்துக்கள்தானே!


அன்புடன்
மன்னை மாதேவன்

Thursday, March 17, 2005

அள்ளித் தெளித்த கோலங்கள்..

யார் கூறியது ஒட்டகங்கள் சகாராவை தாண்டாதென? கவிஞர் நா.காமராசன் அவர்களின் ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பு “சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்”. நாங்கள் சகாராவை தாண்டிய ஒட்டகங்கள். வெளி நாட்டு வேலையால் பெரும் பொருள் என்ற கானல் நீருக்காக அலையும் எம் போன்றோரை காலம் தன் ஓடத்தில் கட்டாயமாக ஏற்றி (ஒட்டகங்களாக) கடல்களுக்கு அப்பால் கடத்தித் தானே விடுகிறது.

நாங்கள் எங்கள் உணவை அசை போடுவதைவிட உணர்வை அசை போட்டுத்தானே வாழ்ந்து கொண்டு வருகிறோம். சரி சரி பை நிறைகிறதல்லவா? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. கேட்டுவிட்டு போங்கள். அது உங்கள் உரிமை. நாங்களும் தற்காப்புக்காக “இக்கரைக்கு அக்கரைப் பச்சை” என கூறலாம்தான். ஆனாலும் முடிய வில்லையே. எங்களில் பலருக்கு அக்கரை என்பதாக ஒன்று இருப்பதாகவே தெரிய வில்லையே! என்ன செய்ய? இன்னும் ஓரிரு வருடம்தான் அப்புறம் ஓடி வந்து நம் மண்ணில் விழுந்துவிட மாட்டேனா? இந்த வினா-விடை விளையாட்டு எங்களின் சுயம்புகள். எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள நாங்களே விதைத்து, வளர்த்து, அறுவடைச் செய்துகொள்வது. ஆனால் கண்டுமுதல் மட்டும் காவிரி போல் என்றும் வறட்சிதான்.

நல்லவேளை ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என எம்மை வாழ்த்திய எம் தாத்தாக்கள் காலத்தில் செயற்கைக்கோள்களும் அவற்றின் வாயிலாக சென்றடைய முடிந்த இயற்கைக் கோள்களும் இல்லாமல் போய் விட்டது!...இருந்திருக்கும் பட்சத்தில் “திங்கள் பறந்து திரவியம் தேடு”, “செவ்வாய் செலவில் செல்வம் சேர்”, “புதனைத் தோண்டி புதையலை நாடு” என்று அடுக்குத் தொடரில் அவர்கள் பாட்டுக்கு (பாட்டுக்கும்!) சொல்லிவிட்டு சென்றிருப்பார்கள். இந்நேரம் அங்கிருந்தும் எங்கள் உயிர்க் காற்று புலம்பலாய், புயலாய், ஏன் பூகம்பமாய் கூட வந்து கொண்டிருக்கும்.

வீட்டில் வாழா விட்டில்களின் ஆதங்கங்கள் கூட ஆடம்பர மாகத்தான் இருக்கும். “என்று தணியும்” எங்கள் தாய் மண்ணின் தாகம்? இது வீட்டுப் பற்றால் விளையும் நாட்டுப் பற்று. போதும் போதும். விடை கிடைக்கா வினாக்களில் இருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்! விசயத்துக்கு வருகிறேன்.

இலவச பூமியின் இதமான காலைப் பொழுது. நண்பர் தில்லை முகத்தில் வடியும் வியர்வையோடு அலுவலகத்தில் நுழைகிறார். பரபரப்பு அவர் நடையிலேயே நடனமிடுகிறது. தில்லை என்பது அவர் இயற் பெயரல்ல. அவர் அவதரித்த அம்பதியே அவருக்காய் அவதானித்த பெயர். பொதுவாக வெளிநாட்டில் (கூட்டில்) வாழும் பறவைகளுக்கு, தவிர்க்க இயலா காரணங்களால்கூட அலுவலகம் சற்று தாமதமாய் வருவது மறுக்கப்பட்ட கனிகள்தான்.

உள்ளுர் சந்தையில் விலை போகாத எங்கள் கல்வி மாடுகள், இங்கு நல்ல விலை பெற்று, எங்கள் வயிற்றை மட்டுமல்ல கூடவே மதிப்பையும் மரியாதையையும் சேர்த்தே நிரப்பி வருகிறது. எங்கள் திறமை, அலுவலகத்தில் முக்கியத்துவம் என்ற தூண்டிலை எங்கள்மீது ஆரம்பத்தில் போடும். மாட்டியவர்களின் முதுகுகள் முறிவுகளாகி சில நேரம் அதுவே முடிவுகளாகவும் ஆகிவிடும். இந்த தொடர் ஓட்டத்தை நிறுத்த, வயிற்றை இழக்கவா? இல்லை வாழ்வையே இழக்கவா? இதில் எதை இழக்க?

அன்று அவர் ஆற்ற வேண்டிய மலையளவு பணிகள் குவிந்து கிடக்கிறது. எனவேதான் இந்தப் பரபரப்பு. நண்பரின் பரபரப்புக்கு காரணம் கேட்டேன். சென்னையில் வசிக்கும் தன் செல்வப் புதல்வன் பள்ளி இறுதி வகுப்புக்கான தேர்வுகள் எழுதி வரும் இந்த நாளில் அன்றாடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவனுக்கு ஊக்கமளித்து வருவதாகவும், இன்று அப்படி தொலைபேசியில் தொடர்பு கொள்கையில் அவரது துணைவியார் “ஆற்றாது விட்ட கண்ணீர்” அவரை அக்கினியில் இடுவதாயும் கூறினார்.

நேரடியாக அவர் துணைவியார் கண்ணீருக்கான காரணம் கேட்பது பண்பாகாது என்றக் காரணத்தால், காரணம் அறிய சுற்றி வளைத்தேன்.

‘ஏன் நீங்கள் உங்கள் மகனிடம் பேச வில்லையா?’ - இது நான்.

‘அவன் வீட்டில் இருந்தால் அல்லவா அவனிடம் பேச - இது அவர்

‘தேர்வு நேரத்தில் கூட வீட்டில் இல்லாமல் அப்படி எங்கே சென்றான் அவன்?...நான்.

அவர் கூறியவை இவைதான். பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறும் இந்த நாட்களிலேயே..அரசு மற்றும் சில தனியார்; கல்வி நிறுவனத்திற்கான நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கப்படுவதால் - (நிர்வாக ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் வழங்குவது அது ஒரு துணைக் கதை) - அவற்றை பெறுவதற்கும் அவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவே அவன் சென்றிருப்பதாகவும் கூறிய அவரது துணைவியார் தேர்வு நாட்களில் அவன் கவனம் இப்படி சிதறுவதற்காகவே கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.

“இதுக்குபோயி அலட்டிக்கலாமா” என்று நான் கூட பாடியிருப்பேன் தான், அவர் இந்தச் சிங்காரச் சிறைதனில் சிறகடிக்கும் காரணம் அறியாமல் இருந்திருந்தால். ஏதோ சென்னைக் கோட்டை சல்லிசாய் விற்பனைக்கு வருகையில், எப்படியாவது அதை வளைத்து போட்டுவிட அடங்காத ஆசைகொண்டு இந்த புண்ணிய பூமியின் புதையலுக்காய் வந்தவரல்ல அவர். (ஒருவேளை அப்படி விலைக்கு வந்தால் நம் அரசியல் வா(ந்)திகளுக்கு மிஞ்சியல்லவா தானமும் தர்மமும்.) எங்கோ தொலைத்த வாழ்க்கையின் எச்ச சொச்சங்களாவது மிச்ச நாட்களில் நிற்காதா என்ற ஏக்க பயணமே அவருடையது.

அவர்களது வானத்தில் மின்னும் ஒரே நட்சத்திரமும், கண்ணுக்கு தெரியாத கலங்கரை விளக்கும் - “யாதுமாகி நின்றாய் என் அப்பனே” என்று அவர்களுக்கு யாதுமாகி நிற்பதும் அந்த ஒன்றுதான். எல்லாமே அவர்களது ஒரே செல்வப் புதல்வன் தான். அவன் கல்விதான் அவர்களது வண்ணக் கனவு. எனவேதான் இம்மாத அவர் வரவின் பெரும் பகுதியைத் தொலைபேசித் துறைக்கு வரவு வைத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூறுங்கள்ää அவர்கள் கண்ணீர் கதை கூறுமா இல்லையா?

எனக்கு பொறி தட்டியது. தேர்வு நடைபெறும் இப்பொழுதே இவற்றையெல்லாம் வழங்க வேண்டிய அவ்வளவு அவசரமென்ன? மாணவர்களின் நலனில் அக்கரையின்மையா? அரசும் அதிகாரிகளும் திட்டமிடலில் உள்ள குழறுபடிகளா? அல்லது கால அவகாச மின்மையா? உண்மையில் கால அவகாச மின்மை என்றால் எந்த அளவு கால அவகாசமின்மை? தேர்வு முடிந்த மறுநாளேகூட வழங்க முடியாத அளவுக்கு இந்த இரண்டொரு நாட்கள் அவ்வளவு முக்கியமானவைகளா?

சென்ற ஆண்டு பொறியியல் கல்வி தொடங்க தனியார், அரசு என மாறி மாறி அறிக்கை யுத்தமும் நீதிமன்ற யுத்தமும் செய்து ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு மேல் மாணவர்களின் நாட்களை வாயில் போட்டு விழுங்கியவர்களுக்கு இந்த இரண்டொரு நாட்களா இயலாத ஒன்று? சரி இந்த ஆண்டு மட்டும் இந்த தனியார், அரசு கல்லூரி கண்ணாமூச்சு விளையாட்டு இருக்காதா என்ன? ஏற்கனவே தொடங்கி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அண்மையில் பொதிகை தொலைக்காட்சியில் மாணவர்க்கான தேர்வு குறித்த கலந்துரையாடலை சகோதரியர் பாரதி பாஸ்கர் அவர்கள் நிகழ்த்தினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக வருகை புரிந்திருந்த மனோதத்துவ மருத்துவர் மற்றும் மாணவர் தேர்வு முறை குறித்த நூல் ஒன்றை எழுதியுள்ள சிந்தனையாளர் ஆகியவர்கள் வழங்கியச் செய்திகள் நம் கல்வி முறையில் நிலவும் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தேர்வு காலங்களில் மாணவர்களின் மன அழுத்தத்தைப் பற்றி விரிவாக விளக்கினார் மருத்துவர். மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்கும் நம் தேர்வு முறைக்கே அதற்கான தகுதி யின்மையை விளக்கினார் சிந்தனைவாதி. அவர் பார்வையில் “தேர்வு” என்ற சொல்லும் அதன் வர்க்க வார்த்தையான “தோல்வி” என்ற சொல்லும் குறைப் பிரசவங்கள் என நிறுவினார்.

கல்வி கற்கும் மாணவர்களின் தகுதியை நிர்ணயிப்பதில் அவர்களின் ஆண்டு முழுமைக்கான அறிவுசால் ஆய்வு இல்லாமல், நம் தேர்வு முறைகள், ஆண்டின் இறுதி நாட்களைச் வெறுமனே சார்ந்து நிற்கின்றன. உதாரணமாக நல்ல திறனுள்ள ஒரு மாணவன் தேர்வு காலத்தில் உடல் நலக்குறைவில் தேர்வு எழுதும் வாய்ப்பை இழக்கிறான். அவனை எப்படி தோல்வி மாணவன் என கணக்கிடுவது? மாறாக, கல்வியில் மிக மிக பின் தங்கிய மாணவன் ஒருவன் குறுட்டான் போக்கான வாய்ப்புகளில் (அதிர்ஷ்ட வசமாக அவன் படித்திருந்த மிகக் குறுகிய பாடப் பகுதிகளிலிருந்து தேர்வு வினாக்கள் வந்தமையால்) பெரும் வெற்றி பெறுகிறான். அவனது உண்மைத் தகுதியை அவன் பெற்ற மதிப்பெண் வெற்றி உறுதி செய்யுமா?

திறனை நிறுவுகின்ற முறையான்மை சார்ந்த ஒன்றில் அதை எடைபோடும் எடைத்தட்டிலேயே உள்ள இவைபோன்ற ஊனங்கள் ஏற்புடையதுதானா? கல்வித் துறைசார் ஆன்றோர்கள் சிந்தனைக்கும் ஆக்கத்திற்கும் உரிய இதனை அவர்களின் ஆய்விற்கே விட்டு விடுகிறேன். தகுதியை உறுதி செய்கின்ற சிறந்த மாற்று வழிகள் உருவாக்கப் படுமானால் அவைகள், “வரப்புயர” என்பதற்கொப்ப நேரடியாக மாணவர் தொடங்கி நாடு வரை பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அதிகாரிகளுக்கு எனது இதமான வேண்டுகோள் இதுதான். தேர்வு நேரத்தில் மாணவர்களின் கவணம் திசை திரும்பவும், மாணவர்களின் மற்றும் அவர்கள் பெற்றோர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க கூடியதுமான இந்த கால குளறுபடிகளை நீங்கள் நினைத்தால் தவிர்க்கலாம் அல்லவா? அது ஒன்றே உங்கள் சமுதாயப் பார்வைக்கு சான்றாகும் அல்லவா? இனியேனும் இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?

Saturday, March 12, 2005

தாழ்மையானதோர் வேண்டுகோள்!

அன்புமிகு வலைப்பூ சோதர சோதரிகளே!

அண்மையில் வலைப்பூ வாயிலாக நாம் எவற்றையெல்லாம் அடையலாம் என்ற வினாவுடன் கூடிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதன் தொடர்ச்சியாக ஒரு நீண்ட கட்டுரையை எழுதி வலைப்பூவில் உள்ளிட வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் நான் சற்றும் எண்ணிப்பாராத வகையில் இப்படி ஒரு உள்ளீட்டை எழுத வேண்டி வரும் என எதிர்பார்க்கவில்லை. வலைப்பூக்களின் பயன் இதுவென நாம் எண்ணியிருந்தவைகளின் எண்ணிக்கையில் ஒன்றை உயர்த்திக்கொள்ளவும், அதனுடன் சேர்த்து நம் உள்ளத்தையும் சற்று உயர்த்திக்கொள்ளவும் இவ் உள்ளீட்டை இட விழைகிறேன்.

18-03-2005 குங்குமம் வார இதழில் மெகா ஜனங்களே என்ற விவேக் அவர்கள் எழுதியிருக்கும் தொடரைப் படித்தேன். அதைப் படித்தவுடன் என் இதயத்தில் வேதனைச் சுழி மையமிட்டு விட்டது. பார் போற்றும் புலவன் பாரதி தொடங்கி, புலமைப்பித்தன் இடைநின்று, சமீபத்தில் சாலை விபத்தில் திடீரென மரணமெய்திய சு.சமுத்திரம் ஈறாக இலக்கியவாதிகளின் வாழ்வில் ஏற்பட்ட துயர்மிகு நிலையை படிக்கின்ற போது விவேக் அவர்களின் வேதனையில் சாரமிருக்கிறது என உணர முடிந்தது. சம காலத்தில் வாழும் புலவர்களை, சிந்தனைவாதிகளை, இலக்கியவாதிகளை போற்றுவதிலும் அவர்கள் துயருறும் காலத்தில் உதவிக் கரம் நீட்டுவதிலும் நாம் சற்று குறைபாட்டோடுதான் நடந்து கொள்கிறோம். ஆனால் அப்படிப்பட்டவர்களின் மறைவுக்கு பின்னால் அவர்களை வானளாவ போற்றுவதில் மட்டும் எந்த குறையும் வைப்பதில்லை. தமிழர்களாகிய நம்மைப் பற்றிய இந்த உண்மை சற்று சுடத்தான் செய்கிறது. இந்த கறையை சற்றேனும் கழுவ முனைவதில் நாம் அனைவரும் சற்று மேம்பட்டு நிற்க விரும்பியே உங்களிடத்தில் என் பணிவான அன்புநிறை இவ் வேண்டுகோளை வைக்கிறேன். இது பிழை என எண்ணுவோர் உளமாற என்னை மன்னிக்கவும்.

“வார்த்தை சித்தர்” என்று எல்லோராலும் போற்றப்பட்ட வலம்புரிஜான் இன்று உடல் நோயால் மட்டுமின்றி பொருளாதார குறைபாடு எனும் பெரு நோயாலும் தாக்குண்டுத் தவிக்கிறார். கவிஞர் திரு வைரமுத்து அவர்களும் விவேக் அவர்களும் தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். இன்னும் சிலரும் உதவியிருக்கலாம், வெளி உலகுக்கு தெரிய வரவில்லை. வலம்புரியாரின் அரசியல் வாழ்விலும் மற்ற பிறவிலும் முரண்பாடு காண்போர்கூட அவரது அறிவுசார்ந்த ஆற்றலை, அவர் ஆற்றிய உரைகளின் இலக்கியச் செறிவை மறுக்க மாட்டார்கள். அவர் அரசியல் வாழ்வு பிழைப்பட்டது என முழுதாய் முடிவுக்கு வரவும் தயக்கமாக உள்ளது. அப்படி முழுதும் பிழையெனில் இன்று பொருளாதாரத் துயரில் ஏன் அவர் உழலவேண்டும்? ஒருவேளை இற்றை நாள் அரசியல் வாதிகளின் ஒரே திறமையான அரசியலின் வாயிலாக மிகுந்த பொருளை ஈட்டி தன்னை வளமாக்கிக் கொள்ளும் அந்த திறமையில் அவர் குறைப்பட்டுத்தான் இருந்தாரோ? அவ்வாறாயின் அதுவே அவரது நிறையாகி விடும். எதுவாயினும் விவாதத்திற்கு இது பொழுதல்ல


அவருக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவென அந்த குங்கும் இதழ் விவேக் தொடரில் ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று(12-03-2005) அதில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவரது மருமகன் அவர்கள் அவரது தற்போதைய நிலையை கூறினார்கள். அது இன்னும் துயரமாக இருந்தது. அவர்களிடமிருந்து கீழ்கண்ட முகவரியைப் பெற்றேன். எனவே அன்பர்களே! இயன்றோர் கீழ்கண்ட விபரங்களை பயன்படுத்தி, இயன்ற சிறிய அளவிலேனும் அவரது “இடுக்கண் கலைய” முயல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, அத்தகைய நல்லோர் அனைவர்க்கும் தமிழ் சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தொலைபேசி எண்: 0091-044-26494234
முகவரி:
வலம்புரிஜான்
12 விஜிஎன் அவன்யூ
குமணன் சாவடி
சென்னை – 600 056

Monday, March 07, 2005

உயர்நெறிப் பணியிதை..

இந்நாடன்றி எந்நாட் டிடையும் உலவும் ஓர்கதை,
“வாழ்வு என்பது மீழா துயர்யாழ் மீட்டிடும் இசை”.
வாளாதிருக்க வகைபுரி இம்மொழி - வீண்மொழி - விடமொழி.
மனிதா! மனிதா! எப்படி சிக்கினாய் இப்பெரு வலையில்?

“சுழலும் உலக நாடக மேடையில் -
அனைவரும் நாமோர் நாடகப் பாத்திரம்”,
இன்பமும் துன்பமும் வாழ்க்கைக் காட்சிகள்.
“இயக்குதல் விதியே” என்பர் மதியிலர்.

இன்பம் ஓர்முறை இதமாய்ச் சிரிக்கும்,
துயரப் பெரும்புயல் சுழன்றே அடிக்கும் – எனினும்!
பயனுறு வாழ்வு மனிதனின் கரங்களில் - இனிமுதலேனும்
“வாழ்வே மாயம்” தத்துவம் துறப்போம்.

ரோஜா படுக்கைகள் தானே மலரா!
பயண இலக்கை படைப்பவன் மனிதனே!
நாம்தான் பெற்றோம் நாமே ஆளுவோம் - என்பதே இன்று
வீரம் விரவிய வினோத விளையாட்டு.

இயற்கையின் சீற்றம் இசைத்திடும் இசையில்
திசையெலாம் இன்று அச்சமும் திகிலுமே!
மனிதன் பாதையை மறைத்திடும் தடைமலை
தகர்த்திட இன்று தனித்தோள் பயன்படா.

புரையுடை கண்கள், ஒழுகிடும் மூக்கு, ஒலியிடும் மார்பு, உணரா நாசி.
ஆகா! ஆகா!! மாய வியாதிகள் மலை மலை போலும்.
இயற்கையை மனிதன் இலேசாய் சீண்ட,
ஓசோன் படல ஓட்டைகள் நீண்டது.. விளைவு?

சண்டமாருதம், மண்பதைச்சரிவு, குமுறும் எரிமலை, கொன்றிடும் நீள்கடல்.
விண், மண், நீர், நிலம் அடங்கலும் விபத்தாய்! – போதுமோ இவை?
நெஞ்ச வஞ்சமும் நீண்டிடும் போரும் .. வதைக்கவோ மானுடம்?
வெண்புறாவே நீ எங்கே பறந்தாய்! இன்றேன் மறைந்தாய்!!

இலையிலா மரங்கள்; மரமிலா காடுகள்;
நீரிலா ஆறுகள்; நிலத்திடை நிறைந்தன.
நீல வானமும் - கரும்புகை பகைவனால் – கறுத்தது.
பறவைகள் படுதுயர்.. பதைப்போர் எவருளர்?

அவலங்கள் அனைத்தினை அகற்றிடும் ஒளடதம் -
அறிவுத் தீச்சுடர், திறவுகோல் கல்வியே!
உலக அமைதியா? உள்ளத் தமைதியா?
அமுத ஊற்றென அளிப்பது கல்வியே!

உனக்காய் நானும், எனக்காய் நீயும்,
உழைப்போம் எனுமோர் உயர்நிலை வாழ்வை
அள்ளித் தருவது அமுத நற் கல்வியே!
போதிப்போரே!.. போதிப்போரே!! புரைதீர் நல்லீர்!


ஆசிரியப் பணி ஆற்றிடும் பெரியீர்!
உயர்வகை சிலைதமை செதுக்கிடல் உம்பணி!
உள்ளத் தமைத்திதை உதவிட வாரீர்!
உயர்நெறிப் பணியிதை புரிந்திட வாரீர்!!

( இச்சிறு கவிதை - ஆசிரியப் பணி ஆற்றிடும் அனைவர்க்கும் சமர்ப்பணம் )

ஆங்கில ஆக்கம் : தஸ்னீம் மு. அகமது
தமிழாக்கம் : மன்னை மாதேவன்

Wednesday, March 02, 2005

முன்மொழிந்தோரை வாழ்த்தி, வழிமொழிவோம்!

இன்று தமிழர்கள் மத்தியில் ஓரு சூடான விவாதம் தோன்றியிருக்கிறது அல்லது தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இது தாய் தமிழகத்தில் மட்டுமின்றி, உலகின் மூலை முடுக்குகளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் ஓர் தாக்க அலையை ஏற்படுத்தி வருகிறது.

'தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் தமிழில்தான் வைக்கப்பட வேண்டுமா? அல்லது ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் வைப்பதற்கும் அனுமதிக்கலாமா?' தமிழ்மொழி செம்மொழி என நடுவண் அரசால் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற உணர்வுடைய தமிழர்களின் நீண்ட நாள் கனவு, ஓரளவு நிறைவேறியுள்ள நிலையில் இதுபோன்ற விவாதங்கள் எந்தத் தமிழர்களாலும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.

இவ்விவாதத்தின் இருபுறமுள்ள வாத பிரதிவாதங்களை சீர்தூக்கி, ஆய்ந்து தெளிவடைவதோடு, தெளிந்த முடிவை நடைமுறைப்படுத்த தலைப்படுவதும் தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகி நிற்கிறது. எனவே இவ்வாய்வுக்கு துணைநிற்கும் வகையில் இக்கட்டுரை புனையப்படுகிறது. திரு அக்னிப்புத்திரன் அவர்களும் பேராசிரியர் திரு சுப.வீரபாண்டியன் அவர்களும் தங்கள் கட்டுரையின் வாயிலாக பல தெளிவான விளக்கங்களை கொடுத்திருக்கிறார்கள். எனவே முழுமையும் தொடர்ச்சியும் கருதி, வாசகர்கள் அக்னிப்புத்திரனின் கட்டுரைகளான “கமலஹாசனுக்கு ஒரு வேண்டுகோள்”1 மற்றும் “தமிழ்தான் தமிழனுக்கு முகவரி”2 என்பனவற்றையும், சுப.வீரபாண்டியன் கட்டுரையான “தமிழ்ப் படம் - ஆங்கிலப் பெயர் அண்ணாவின் கொள்கையா?”3 என்ற கட்டுரையையும் முதலில் வாசித்து பின் இக்கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்.

மேற்கூறிய திரைப்பட பெயர் குறித்த விவாதத்தில் ஒரு சிறிய ஆறுதல் அளிக்கும் அம்சம் தொக்கி நிற்கிறது. ஆங்கிலப் பெயர்களை வைத்துவிட்டுத்தான் போகட்டுமே என வாதிடப் புகுவோர்கூட “பிஃஎப்” போன்ற நா கூசும் நாற்றப் பெயர்களுக்கு பல்லக்கு தூக்கவில்லை. ஒருவேளை இதை இன்று ஆதரித்தால், எதிர்வரும் காலங்களில் ஆங்கிலத்தில் உள்ள இதனினும் கீழான, கேவலமான, இழிச் சொற்களை தேடித் துருவி கண்டுபிடித்து வைத்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு காரணமாக இருக்கலாம்.


அல்லது நமது மூதாதைத் தமிழரின் பண்பாட்டு, நாகரீக, கலைக் கலாச்சாரத்தின் மீது இன்றைய தலைமுறைத் தமிழர்களுக்கு உள்ள குறைந்தபட்ச அக்கரையாகக்கூட இருக்கலாம். எவ்வாறாயினும் இதுகுறித்து அக்னிப்புத்திரன் சுட்டியுள்ளதைப் போல் நாம் சற்று ஆறுதல் பெருமூச்சு விடத்தான் வேண்டும்.

அக்னிப்புத்திரன் தன் இரண்டாம் கட்டுரையில் ஓர் நல்ல பண்பை, முன்மாதிரியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கருத்துக்களுக்கு வந்த ஆதரவு மற்றும் பாராட்டு மின்னஞ்சல்களை பட்டியலிடாது, எதிர்க்குரல்களை மட்டுமே பட்டியலிட்டு விளக்கமளித்திருக்கிறார். நமது சட்டமன்றங்களும் பாராளுமன்றங்களும் ஆழமாக சிந்நிக்கவேண்டிய பண்பு இது. திரைப்படத்தின் நல்ல தமிழப் பெயருக்கு எதிர்வாதம் புரியும் பட்டியலில் பலவும், மூல விவாதத்தின் கருவின் பொது நோக்கை திசை திருப்பி சிதைத்துவிட முயலும் உருட்டு புரட்டு வாதங்களே. சில சில்லறை விசயங்களை தூக்கிப் பிடித்து, பொதுத்தன்மையை மறைத்து, தனி மனித விமர்சனங்களை முன்வைத்து, மூலத்தைக் கெடுக்க முயலும் முயற்சியே. இவை போன்றவை இன்று நேற்றல்ல கால காலமாக தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் ஏவப்படும் முனை முறிந்தோடும் அம்புகள்தான்.

எட்டப்பன் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது சரியே என்பார் ஒருவர். காந்தி அகிம்சாவாதி என்று யார் கூறியது?, அவர் தென்னாப்பிரிக்காவில் நான்கு கரப்பான் பூச்சிகளை கொன்றார் என்பார் ஒருவர். பெரியார் ஒன்றாம் வகுப்பு படிக்கையில் என்னோடு வந்து சாமி கும்பிட்டார் என்பார் ஒருவர். அவ்வளவு ஏன்? பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொண்ட வெறுப்பில்தான் அவர்களில் ஒரு சிறுவனுக்கு பூணூலிட்டார், அந்த வகையில் ஒரு தாழ்த்தப்பட்டவனை அழித்து விட்டார்தானே? இப்படியாக அவர்களின் விவாதங்கள் இருக்கும். இவற்றில் சிற்சில, சிலகாலம் மத்தாப்பாய் மின்னினாலும் ஒருக்காலும் எவையும் அகல் விளக்காய் ஒளிர்ந்ததில்லை.

உதாரணமாக, கமல் தனது படங்களுக்கு இதுவரை தமிழில்தான் பெயர் வைத்தார். இந்தமுறை மட்டும்தான் ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார் என்று ஒரு வாதம். இதனை உணர்ந்துதான் அக்னிப்புத்திரன், சற்றும் சமுதாய கண்ணியமோ, அக்கறையோ இல்லாத சூர்யாவிற்கு வேண்டுகோளை வைக்காமல் கமலுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார். எனவே இவைபோன்ற சொத்தை வாதங்களை புறம்தள்ளி சற்றேனும் வலுவான தோற்றத்தை உருவாக்க முயலும் விவாதங்களுக்கு விடை காண விழைவது தாய்த் தமிழ் மீது நாட்டம் கொண்டோர் அனைவரின் கடமையாகும். அத்தகையவைகளைக் கீழே பட்டியலிட்டு ஒவ்வொன்றாக ஊன்றி நோக்குவோம்.

1) சினிமா வியாபாரம், அதில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?
2) தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா?
3) ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் பேச முடியுமா?
4) தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரிகம் அடைந்திருக்கிறான். இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்து கொள்ளத் தெரியாமல், கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான்.

1. திரைப்படம் வெறும் வியாபாரம் மட்டும்தானா?

திரைப்படத் துறையை வெறும் வியாபாரம் என்று கூறும் எவரும் அதை உயர்த்துவதற்கு மாறாக குறுகிய வட்டத்தில் அடைத்து இழிவுபடுத்துகிறார்கள் என்பதே உண்மை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திரைப்படத் துறையின் பன்முகத் தன்மையை உலகமே ஏற்றுக் கொண்டுதான் உள்ளது. அதில் வியாபாரம் என்பது ஒரு முக்கிய கூறு அம்மட்டே. திரைப்படத் துறையை கலை என்பாரும், சமூகவியலை விரைவாக மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகம் என்பாரும், மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சிக் கூறு என்பாரும், பல்லோருக்கு வாழ்வளிக்கும் பொருளாதார மேம்பாட்டு மையம் என்பாரும், கூறும் அனைத்து கூற்றிலும் பொருளுண்டு.


விவாதத்திற்காக வியாபாரமாகக் கொண்டாலும், வியாபாரம் என்பது விற்பவர் ஒருவரோடு முடிந்து விடும் செயலல்ல. தனக்கு பல உரிமையை வருந்திக் கோரும் விற்பனையாளர், வாங்குபவருக்கு உரிய சில கடமைகளையும் ஆற்ற வேண்டிய கடப்பாடு உடையவராகிறார். உதாரணமாக, நாம் அரிசி வாங்க கடைக்கு செல்கிறோம். கடைக்காரர் நம் கண் முன்பாக பருப்பு மூட்டையில் கற்களைக் கலக்கிறார். பருப்பு அந்த நொடியில் நமக்கு சம்மந்தமில்லாததுதான். எனினும் நாம் வெறுமனே நின்றுவிட முடியுமா? முதலில் அவரிடம் இவ்வாறு கலப்படம் செய்யாதீர்கள் என்கிறோம். அவரும் தவறுணர்ந்து திருத்திக்கொள்ளும் பொழுது அக்கணமே பிரச்சினை சுமூகமாக தீர்ந்து விடுகிறது. அவர் உணர்ந்தும் உணராதாராய் முரண்டு பிடிக்கிறார். என் செய்வது? தீர்வு அமைப்பு இருப்பின் அதனிடம் முறையிடுகிறோம். தீர்வாயமே தீரா குழப்பத்தில் உள்ளது. பிறகென்ன செய்வது? அவ்வங்காடிப் பொருளை நுகர்வோர் எவரோ அவர்களிடம் செல்கிறோம். இன்னார் கலப்படம் செய்வதால் அவர் கடைப் பொருளை வாங்காதீர்கள் என்கிறோம். இதில் ஒருவரின் உரிமை மீறல் எங்கு வருகிறது.

திரைப்படம் வெறும் வியாபாரம் மட்டுமல்ல கலையும் கூட, எனவே கலையில் மற்றவர் தலையீடு அதன் ஆக்கத்தை கெடுக்கும் என சிலர் வாதிடுகிறார்கள். இதனை வெறும் வறட்டு வாதமாக வாதிடுவோர் நீங்கி, அப்படி உண்மையாக நம்புபவர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பல தமிழ்த் திரைப்படங்கள் எத்தனையோ சமூக சீர்திருத்த கருத்துக்களை, புதிய முயற்சிகளை முன்னெடுத்து சென்றிருக்கின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அத்தகைய முயற்சிகளுக்கெல்லாம் தமிழ் மக்கள், அரசியல்வாதிகள், சமூகவாதிகள் என அனைவரும் பாராட்டி ஒத்துழைத்தார்களா? அல்லது உங்கள் அன்றாடப் பணிகளில் புகுந்து தொல்லை கொடுத்தார்களா? ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் கேலியும் கிண்டலுமாக இகழ்ந்த படங்களைக் கூட அவர்களில் பலருமே பாராட்டிய காலங்கள் உண்டா இல்லையா?

கலை என வாதிடுவோர் எது கலை என்பதில் தெளிவடைய வேண்டும்? சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் அழகிய சிலை ஒன்றை வடித்தான். மக்கள் அனைவரும் சுற்றி நின்று அவனை வெகுவாக பாரட்டினார்கள். ஒருவர் அவன் திறனை வியந்தார். மற்றவர் சிலையின் அழகை புகழ்ந்தார். பிறிதொருவர் அவன் கை உளியை போற்றிப் புகழ்ந்தார். அந்த சிற்பிக்கு தன்னியம் தலை தூக்கியது, தலையில் கனமேறியது. அவன் அந்த சிலையை தன் கையுளி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கத் தலைப்பட்டான். இன்னிலையில் சுற்றியுள்ளோர் இத்செயலை தடுக்க முயல்வதா அல்லது சிலைக்கு செந்தக்காரன்தானே எது வேண்டுவானாலும் செய்து கொள்ளட்டும் என வாழாவிருக்க வேண்டுமா? இதற்குரிய விடையில்


“கலைகள் யாவும் பொதுஉடமை” என்பதும் அதைப் படைப்பவனே கூட அதற்கு “முழு உரிமை” கொண்டாட இயலாது என்னும் கோட்பாடும் பொதிந்திருக்கிறது.

கட்டாயம் ஆங்கில பெயர்தான் வேண்டும் என்று எண்ணிய சூர்யாவின் கருத்திற்கு, குறைந்த பட்சம் அதே ஆங்கிலத்தில் கண்ணியமிக்க “குட்ஃபிரண்ட்” என்றோ, “டியர் ஃபிரண்ட்” என்றோ தோன்றாதது ஏன்? இதுதான் நீங்கள் வற்புறுத்த விழையும் கலையா? இதுதான் கலை என்றால், அந்தக் கலை தேவைதானா? இதனை விவாதித்த என் நண்பர் ஒருவர்,


மிக மிக கீழ்த்தரமான ஒரு நான்கெழுத்து ஆங்கிலச் சொல்லைக் கூறி இந்த தலைப்பில் நான் படம் எடுக்க முனைந்தாலும் நமது முதல்வரின் ஆதரவு கிடைக்குமா என உணர்ச்சியோடு வினா எழுப்பினார்.

சட்டத்தின் மீது அக்கறையைக் காட்டிய நம் முதல்வர், இப்படி கீழ்தர பெயர் சூட்ட முயலும் குண கேடர்களுக்கும், ஒர் எச்சரிக்கையோ அல்லது குறைந்த பட்சம் சிறு அறிவுரையோ வழங்கியிருப்பாரானால் அது பல நல்ல நிகழ்வுகளுக்கும் திருப்பங்களுக்கும் வழி வகுத்திருக்கும். திரைத்துறையில் உள்ள நல்ல சிந்தனையாளர்கள் எண்ணித் தெளிய வேண்டும்.

2. தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா?

நிச்சயமாக வளர்ந்து விடாதுதான். தமிழ் பாதுகாப்பு இயக்கப் பெருமக்கள் எவரேனும் திரைப்படத் துறை மட்டுமே தங்கள் இலக்கு என கூறினார்களா? இல்லையே. “ரோமாபுரி ஒரே நாளில் கட்டிமுடித்து”விடக் கூடியதல்ல. எதனில் ஒன்றிலாவது தொடங்கித்தான் ஆக வேண்டும். அந்த வகையில் சரியாக சொல்வதானால், உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டியத் துறையைத்தான் சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, பொங்கு தமிழ் வளர்ச்சி பயிலகம், தமிழ் இசை வளர்க்கும் முயற்சி என பல திட்டங்களையும் அவர்கள் கூறிய வண்ணம்தான் உள்ளார்கள். எவ்வாறாயினும் தனிப்பட்டவர்களோ அல்லது ஒரு சில அமைப்புகளோ மட்டும் நம் அன்னை தமிழ் வளர்ச்சியை முழுமைப்படுத்தி விட இயலாது. இன்று அரசு மட்டத்தில் பல்வேறு மொழி ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவைகள் மட்டுமே போதுமானது அல்ல. உலகந் தழுவிய சர்வகலாச்சாலைகள், மொழியியல் அமைப்புகள் தமிழ் ஆய்வில், வளர்ச்சியில் அக்கறைக்காட்ட ஆர்வமுடனிருக்கின்றன. நமக்கு நாமே உட்பகை வளர்க்கும் போக்கை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவைகளின் வளங்களை நம் தமிழுக்கு பயன்படுத்திக் கொள்ள இயலும். ஒன்றுக்கும் உதவாத வாதங்களில் நம் சக்திகளை இழந்து விட முனைவது புத்திசாலித்தனமாகாது. அவரவர் தமிழ் வளர்ச்சிக்கு தம்மிடம் உள்ள திட்டங்கள் எண்ணங்கள் எவையிருப்பினும் அதை பலருடன் பகிர்ந்து உதவ வேண்டுமேயன்றி இவைபோல் உதவா விவாதம் ஒரு நாளும் எவைக்கும் உதவா.

3) ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்த பட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் பேச முடியுமா?

இங்கு ஒரு தமிழன் ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா என வினா எழுப்புகிறான். ஆனால் உலகமோ இனி தமிழ் இன்றி வாழ முடியாது என முடிவெடுக்கிறது. வியப்பாக உள்ளதா? ஆனால் உண்மை. கணினி துறையில் இதுகாறும் தமிழ் எழுத்துரு(யூனிகோடு)வுக்கெனத் தனியிடம் அளிக்காத சர்வதேச தர நிர்ணய அமைப்பு இன்று அதனை வழங்கி தமிழுக்கு சிம்மாசனம் அளித்துப் போற்றுகிறது. காரணம் என்ன? ரோஜா படுக்கைகள் தானே மலரா. கணினித் துறையின் இணையத் தள உள்ளீடுகளில் ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் நம் தமிழ்தான். அடுத்த சில ஆண்டுகளிலேயே கணினித் துறையில் தமிழ் மொழியின் வளர்ச்சி மிக உன்னதமாக இருக்கும் என மொழி ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். இதிலெல்லாம் பெருமை கொள்ள வேண்டிய தமிழன் தன் பலம் அறியாதவனாய் வீண் வினா எழுப்பித் திரிகிறான்.

ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் பேச முடியுமா? இந்த மயக்க நிலை இன்று பரவலாக பலரிடம் காணப்படுகிறது. தனித் தமிழில் அல்லது தூய தமிழில் உரையாட இயலவில்லை என்பது அவரவர் சூழலையும், மொழித் திறனையும் பொறுத்தது. இது எல்லா மொழிக்கும் பொருந்தும். நம்மில் பலர் பிற மொழி கலந்து உரையாடுவது, தமிழ் மொழியில் சொற்கள் வளம் இல்லாமையால் அல்ல தங்களால் இயலாமையால்தான். இதில் இலங்கை தமிழ் சோதரர்கள் நம்மை விட பன் மடங்கு உயர்ந்து நிற்கிறார்கள் என்பது நான் கண்ட அனுபவ உண்மை. அவர்கள் அன்றாடம் புதுப் புதுச் சொற்களை உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்கள்.

அண்ணா அவர்களின் இரு மொழிக் கொள்கை அன்றைய காலத்தின் கட்டாயமாக இருந்தது. திரு வீரபாண்டியனாரின் மேற்கூறிய கட்டுரை, விளங்காதார் விளங்க ஓர் அரிய கண் திறப்பு. உறங்கிகள் இனியேனும் விழிக்கட்டும். ஒன்று நிச்சயம் இன்றும் நாம் ஆங்கில மொழிக்கு எதிரிகள் இல்லை. நம் மொழியின் வளர்ச்சிக்காக முயல்வதுவே நம் பெரு விருப்பு. மேலும் தெளிவு வேண்டுவோர், தென்செய்தி இதழில் பிரசுரமாகி உள்ள திரு ஜீவா அவர்களின் “மொழி அழிந்தால் இனம் அழியும்” என்ற கட்டுரையை4 வாசித்து தெளிய வேண்டுகிறேன்.

4) தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரிகம் அடைந்திருக்கிறான். இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்துகொள்ளத் தெரியாமல், கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான்.

போராயிரம் கண்டும் பொன்றா புகழ் மிகு தமிழை, தமிழனின் தொன்மை நாகரிகத்தை, பண்பாட்டை, தன்மானத்தை இதனிலும் கீழாய் இகழ யாராலும் இயலாது. இந்த கருத்துக்கு சொந்தகாரன் ஒன்றும் அறியா அரைவேக்காட்டாளனாய் இருக்கவேண்டும் அல்லது அக்னிப்புத்திரன் கூறியதைப் போல் “அசல்வித்தாய் இல்லாதவனாய்” இருக்க வேண்டும். இவனொத்தார்க்கு, கால எல்லை கடந்த தமிழின் இலக்கிய, இலக்கண, பண்பாட்டு, நாகரிக வரலாற்று சான்றுகளை காட்ட முனைவது வெறும் கால விரயமே. “கழுதை அறியுமோ கற்பூர வாசம்” என ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள். இவர்கள் வாதத்திற்கு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

திரு பழ. நெடுமாறன் அவர்கள் சமீபத்திய தொலைக்காட்சி ஒன்றுக்கான நேர்காணலில் ஓர் செய்தியைச் சொன்னார். ஃபிரெஞ் மொழிக் கழகம் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தித் தாளில் இரண்டு ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தியமைக்காக அச் செய்தி நிறுவனத்தை மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்ததாக கூறினார். இங்கு “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என எவன் வேண்டுமானாலும் தமிழை, தமிழனை இகழ்ந்து பேசிவிட முடியும். அதற்கும் ஆலவட்டம் போட ஓர் கூட்டம் திரியும். என்ன நிலையிது?

திரைத்துறைசார் நெறியாளர்கள் சிந்தனைக்கு..

ஒட்டு மொத்த திரைத் துறையை வெறுக்க அல்லது ஒதுக்க யாரும் முனையவுமில்லை. அது தேவையுமில்லை. இன்று தோன்றியுள்ள மோதல் நிலை தற்காலிகமாகமானதே. தமிழக திரைத் துறையின் வரலாறு அறிந்தவர்கள் இதில் தெளிவாகவே உள்ளார்கள். ஆங்கிலேயர் கால அடக்குமுறை தளமாக அன்றைய தணிக்கை வாரியம் இயங்கிய காலத்திலேயே “தியாகபூமி”, “மாத்ருபூமி” போன்ற நாட்டுப்பற்று மிக்க படங்களை எடுத்தும், சுதந்திரத்திற்குப் பின் “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பல் ஓட்டிய தமிழன்” போன்ற உயரிய காவியங்கனை படமாக்கியும் சமுதாயத்தின்பால் தனக்குள்ள அக்கரையைத் திரைத்துறை நிருபித்து காட்டியிருக்கிறது.


அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஒரு துறையின் அங்கமாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை இன்றைய திரைத்துறை இளைய சமூகத்தினர் உணர்வார்களேயானால் திரைத்துறையில் பண்பாட்டுச் சிதைவுகள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

தமிழ்மெழியின் பாதுகாப்பு விழையும் யாரும், புதுமையே கூடாது என வாதிடும் வெறும் வறட்டு பழைமைவாதிகள் அல்ல. புதுமை எனும் பெயரால் அவலங்கள் அரங்கேறக் கூடாது என்பதில்தான் அக்கறை காட்ட வேண்டியுள்ளது. பல்வேறு காரணங்களால் நலிந்து வரும் திரைத்துறை, இதன் வாயிலாக மேலும் பாதிப்புக்கு வழி வகுத்துக் கொள்ளாது, சுமூகமான தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

அன்னிய நாட்டில் வாழும் தமிழர்கள் திரைத்துறையினரை விரும்பி அழைத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்களே எதனால்? தாங்கள் வாழ்க்கை சூழுலில் தொலைத்து விட்ட தமிழர் நடை, உடை, பாவனை முதலியவற்றை உங்களின் வாயிலாக பார்த்து மகிழத்தான். நீங்கள் முழுமையாக மேலை நாகரீகத்தில் மூழ்கி விடுவீர்களானால், நாளடைவில் அவர்களிடமிருந்தும் அன்னியப்பட்டு போகும் அபாயமும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஜப்பானில் திரையிடப்பட்ட ரஜினியின் படங்களை ஆங்கிலப் பெயருக்கு மாற்றினால்தான் திரையிடுவோம் என ஜப்பான் மக்கள் ஆணையிடவில்லை. திரைத்துறை சற்று முயன்றால், சுண்டியிழுக்கும் தமிழ்ப் பெயர்கள் ஆயிரமாயிரமாய் உருவாக்கிக் கொள்ள முடியும். அப்படி உருவாக்கப்படும் சொற்றொடர்கள் இலக்கியத் தொடர்களாய் அனைவரின் பாராட்டுகளையும் தாய்த் தமிழ் நாட்டுக்கு சீதனமாய் வழங்கும் என்பதிலும் ஐய்யமில்லை.


இவ்விவாதத்தின் பின்னால் இயக்குநர் சேரன் அவர்கள் தன் படத்தின் பெயரை 'டூரிங் டாக்கீஸ்' என்பதை தமிழுக்கு மாற்றியதின் வாயிலாக பாராட்டுதலுக்குரிய சிறந்த முன்மாதிரியை செய்திருக்கிறார். இனியும் கால விரயமின்றி, பல்வேறு திரைத்துறை அமைப்புகளை சார்ந்த தமிழ் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் சுமூக தீர்வுக்கான முன்னெடுப்பை தொடங்க வேண்டும். இதுவே அனைவர்க்கும் நலம் பயக்கும் உயரிய வழியாகும்.

(தட்ஸ்தமிழ் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டது)