Friday, April 01, 2005

பெண்மை – மென்மை = பெண்ணியமா?

ஆதாம்-ஏவாள் தொடங்கி அன்னை பாத்திமா ஊடாக ஆதிபராசக்தி ஈறாய் அனைத்து மதங்களும் பெண்மையை போற்றித்தான் நிற்கின்றன. பெண்மையை போற்றாத உலக இலக்கியங்களை காண்பதே அரிதுதான். பெண்மையின் உயர் நிலையாம் தாய்மையிற் சிறந்ததோர் தகையன பிறிதொன்றுமிலை என அவைகள் அறுதியிட்டே உறுதியுடன் உரைக்கின்றன. நாட்டை “தாய்நாடு” என அழைத்து பெண்மையை போற்றுகின்றன. எளிமை, தூய்மை, மென்மை, மேன்மை, என இவற்றைத் தாங்கி நிற்கும் அஃறிணை பொருட்களை சுட்டும் பொழுது, பெண்பால் போல் உயர்திணையாய் ஏற்றி உரைப்பதுகூட பெண்மையை போற்றும் உயரிய நெறிதான். ஆனால் எதார்த்த வாழ்வில் பெண்மை எவ்வாறு உள்ளது? எவ்வாறு போற்றப் படுகிறது?

மக்கள் வாழ்வில் அறிவியலும், நாகரீக இயலும் விண்முட்ட வளர்ந்து நிற்பதாக மார்தட்டிக் கொள்ளும் இந் நாட்களிலும், மகளிர் படும் கொடுமைகளை எழுதப்புகின், அதன் அளவீட்டில் போட்டியிட இயலாமல் இமயம் கூட சற்று தாழ்ந்து விடலாம். மத, இன, மொழி வேறுபாட்டைக் கடந்து உலகம் முழுமைக்கும் பொது உரு பெற்றிருப்பவை பலவற்றிலும் இந்த “பெண்ணடிமை” அதித பங்கைப் பெற்றிருக்கிறது. எனினும், யுக யுகமாய் கேட்பாரற்று உழன்ற இப் பெண்ணடிமை, இன்று, வீழ்ச்சியுறும் கால ஒளி தோன்றத் தொடங்கிவிட்டது. “பெண்விடுதலை” மிகச் சமீப காலமாக புரட்சியும், எழுச்சியும் பெற்று வெற்றி நடைப் பயிலுகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நாம் இற்றை நாட்களில் “சர்வதேச மகளிர் தினம்” கொண்டாட தலைப்பட்டிருப்பது.

அண்மை சர்வதேச மகளிர் தினத்தன்று எழுதப்பட்ட , அன்புச் சோதரியர் அருணா ஸ்ரீனிவாசன் அவர்களின் “பெண்கள் தின வாழ்த்துக்கள்” எனும் வலைப்பூக் கட்டுரை நன்றாக மணம் பரப்புகிறது. “ஓர்ச்சார்பு நிலை" நின்று, ஒட்டுமொத்த ஆணிணமே பெண்களுக்கு எதிரானது என்ற மாயையில் மூழ்கி விடாமல், மாறி வரும் சூழலையும் வகைப் பிரித்து, பெண்களைப் உயர்வாய் போற்றும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டதோடு , மனம் மாறிய அத்தகைய ஆண்களுக்கு பாராட்டையும் வழங்கியுள்ளமை மிகவும் போற்றற்பாலது.

பெண்கள் சுதந்திரமும், சமத்துவமும், பெண்ணியத்தின் இரு கண்கள். மனித சமுதாயம் இனியும் பெண்களை அல்லது பெண்ணியத்தை புறக்கனித்துவிட்டு தன் முழு பலத்தோடு முன் நடந்துவிட இயலாது. இன்றைய இந்த நிலை பெண்களுக்கு மிக எளிதாகக் கிட்டிவிட வில்லை. அவர்களின் வியத்தகு தனி மனித சாதனைகளும் அமைப்பு ரீதியிலான போராட்டங்களுமே இந் நிலையை தோற்றுவித்திருக்கிறது. ஆனால் சமீப காலங்களில், சிலரின் பெண்ணிய சிந்தனைகள் பல தெளிவற்ற போக்கை ஏற்படுத்தி வருகிறது. பெண்ணியத்தை இவர்களெல்லாம் எங்கே இட்டுச்செல்ல விழைகிறார்கள்? என்ற மிகப் பெரிய வினாவை எழுப்பி நிற்கிறது. மிக மிக முற்போக்காக சிந்திக்கிறோம் என்ற போர்வையில் இவர்கள் பரப்பும் கருத்துக்கள், நம் வாழ்வில் இரு பாலரும் சமநிலையில் இணைந்து ஆற்ற வேண்டிய சில பல உயரிய கடமைகளில் இருந்து வழுவ, நவீன பெண்ணியம் வழி வகுத்துவிடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி நாளிதழ் இணைய தளத்தில் தாயம்மாள் அறவாணன் என்ற ஒரு சகோதரியர் “பெண்ணடிமை தீருமட்டும்” என்ற ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார். அந்த கட்டுரை ஏற்புடைக் கருத்துக்கள் ஒரு புறமும், பலமான விவாதத்திற்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள் மறு புறமும் என இரு வேறுபட்ட முனைகளைத் தொட்டு நிற் பதால், அதன் முக்கிய கருத்துக்களை இங்கு அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கட்டுரையின் ஒரு பகுதி இது.

“சில நாள்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாநகரில் உள்ள ஐ.நா. அமைப்பில் பணியாற்றும் ஓர் உயரதிகாரி இந்தியா வந்திருந்தார். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. அப்போது அவர் கேட்ட கேள்வி நெஞ்சையே குறுக்காக வெட்டிப் போடுவது போல் இருந்தது. கேள்வி இதுதான்: ‘என்ன? சுதந்திரம் வாங்கிப் பல ஆண்டுகள் ஆகியும் வெள்ளைக்கார மோகம் உங்களை விட்டுப் போகவே இல்லையே!’ என்று நிறுத்தாமல் தொடர்ந்தார். ‘இன்னும் வெள்ளை நிறப் பெண்களையே சோப்பு முதல் சீப்பு வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகிறீர்கள்! உங்களிடமிருந்து வெள்ளைக்கார அடிமைத்தனமும் போகவில்லை, பெண் அடிமைத்தனமும் போகவில்லை’ என்று சொன்ன அவர் வாயில் கல்கண்டை அள்ளிக் கொட்டலாம் போல இருந்தது”.

ஆம் இன்றும் நிலவும் இவ்விழி நிலை சுடத்தானே செய்கிறது. இதில் உள்ள உண்மையை எல்லோரும் எந்த வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்ள இயலும். அதே கட்டுரையின் பிரிதொரு கருத்தை கீழே காணுங்கள்.

“பெண்களின் அறியாமைக் கண்கள் திறக்கப்படுதல் மட்டுமன்றி அவர்கள் அடுக்களை, வீடு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு முதலான சம்பளம் இல்லா அடிமை வேலைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும். இதற்கு ஒரே வழி சிலகாலம் அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலைகளில் பெண்களை மட்டுமே அமர்த்துதல் வேண்டும். தந்தையை, கணவரை, மகனைச் சார்ந்திருக்கும் பொருளாதார அடிமைத்தளையிலிருந்து அவளுக்கு முழுச் சுதந்திரம் கிட்ட வேண்டும்.”

மேற்கண்ட குழப்பங்கள் நிறைந்த கருத்தை எங்ஙனம் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலும். இக்கருத்தில் “பெண்களின் அறியாமைக் கண்கள் திறக்கப்படுதல்” என்ற சொற்றொடரில் உள்ள நோக்கை ஏற்பதில் எந்த சிக்கலுமில்லை. அதேபோல் “தந்தையை, கணவரை, மகனைச் சார்ந்திருக்கும் பொருளாதார அடிமைத் தளையிலிருந்து முழச் சுதந்திரம் கிட்ட வேண்டும்” என்பதிலும் தவறில்லை, ஆனால் இடையே வரும் சொற்களை ஊன்றி கவணியுங்கள். “அவர்கள் அடுக்களை, வீடு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு முதலான சம்பளம் இல்லா அடிமை வேலைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும்” - இந்த கருத்து முழமையாக ஏற்கக் கூடியதுதானா?

மகளிர் மேம்பாட்டிற்காய் உழைக்கும் அமைப்புகள்கூட இக்கருத்தை முழமையாய் ஏற்குமா என்பது ஐயமே. காரணம் வீடு, குழந்தை வளர்ப்பு முதலிய செயல்கள் சம்பளமற்ற வேலையாகக்கூட கணிக்கப்படலாம் ஆனால் அவைகளை அடிமை வேலைகள் என எவ்வாறு கணிக்க இயலும். உலகமே வியந்து நோக்கும் இந்திய நாட்டின் “குடும்ப வாழ்க்கை” கட்டுக்கோப்பு அடித்தளத்தின் ஆணி வேரையே அசைக்கக் கூடியதல்லவா இக்கருத்து. இவற்றின் மூலம் பெண்களுக்கு கொடுக்கும் அறிவுரை என்ன? குழந்தைகள் பெற்றால்தானே “குழந்தை வளர்ப்பு” எனும் அடிமை தொழில் எனவே குழந்தையே இனி பெறல் வேண்டா! திருமணம் எனும் சடங்கால்தானே அடுக்களை, வீடு, விருந்தோம்பல் எனும் தொடர் அடிமை தொழில்கள் எனவே திருமணமே வேண்டுவதில்லை.
இவைகளா “பெண்கள் சுதந்திரம்” எனும் உயரிய நெறியின் செறிவு ?

இன்று “பெண்ணடிமைப் போக்கை” இரு நிலைகளில் புரிந்துகொள்ள வேண்டுமென எண்ணுகிறேன். பெண்களின் தனிப்பட்ட குடும்ப சூழலில் நிலவும் தன்மை, அவர்களின் சமூக வாழ்க்கையில் நிலவும் தன்மை.

தனிப்பட்ட குடும்ப சூழலில் நிலவும் தன்மை:

மனிதகுல வளர்ச்சியில், தனிமனிதனாய் சுற்றித்திரிந்தவன், குடும்பமாய் மாறியதும், பல குடும்பங்கள் இணைந்து ஓர் சமூகமாய் உருப் பெற்றதும் - நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பரிணாம வளர்ச்சியில் பெண்ணடிமை என்று? எவ்வாறு? வந்து ஒட்டிக்கொண்டது என்பது ஆழ்ந்த ஆய்விற்குரியது. இந்த சீர்கேட்டின் தோற்றுவாய் ஆண்களின் ஆணாதிக்க மனப்போக்கே என வாதிடுவதில் உண்மையுண்டு. ஆனால் பெண்ணடிமையை வளர்த்ததில், வளர்ப்பதில் பெண்களுக்கும் பெரும் பங்குண்டு என்பது இன்றளவும் மறுக்க இயலா உண்மைகள். திருமண வாழ்வு முறையில் நிலவும் வரதட்சினை கொடுமையில் ஆண்களின் பங்கும் பெண்களின் பங்கும் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம். ஒரே குடும்ப சூழலில் ஒரு பெண், தன் மகள்பால் ஒரு நிலையும் மருமகள்பால் நேர் எதிர் நிலையும் எடுத்து பெண்னே பெண்ணுக்கு எதிராய் செயல்படும் போக்கில் பெரிய மாற்றங்கள் எதுவும் இன்னும் ஏற்பட்டு விடவில்லை. இதில் பெண்களுக்கு விழிப்புணர்வு இன்னும் அதிகம் தேவைப் படுகிறது. பெண்களின் இந்த மனப்போக்கை மாற்ற அவர்களின் மேன்மைக்காக பாடுபடும் அமைப்புகள் இன்னும் தீவிரமாக சிந்திப்பது அவசியம்.

குடும்ப சூழலில் பெண்கள் ஆண்களால் (என்ன உறவுமுறையாயினும்) போற்றப்படுவது இன்று ஓரளவு வளர்ந்து வருகிறது. எதார்த்த நிலையில் இதனை மறுக்க இயலாது. அப்படி ஆண்களால் போற்றப்படுவது ஒன்றும் மனப்பூர்வமான ஒன்றல்ல, பெண்கள் குடும்பத்திற்குள் கொண்டுவரும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டே போற்றப்படுகிறார்கள் என்கின்ற வாதமும் இல்லாமல் இல்லை. இதனை துல்லியமாக சதவீத வகைப் பிரிக்க எடைத் தட்டுக்கள் எவையும் இல்லை. என்றாலும் உள்ளார்த்தமாக போற்றுபவர்களும் உள் அர்த்தமாக போற்றுபவர்களும் எவ்வாறேனும் பெண்களை போற்றுவதற்கு தொடங்கியமை போற்றுதலுக்கு உகந்ததே. எவ்வாறு கணிப்பினும், தனிப்பட்ட குடும்ப சூழலில் பெண்களுக்கான சுதந்திரமும், சமத்துவம் நல்ல மாற்றமும், வளர்ச்சியும் பெற்று வருகிறது என்பது உண்மை நிலையாகும்.

சமூக வாழ்க்கையில் நிலவும் தன்மை:

சமூக வாழ்க்கையில் பெண்களின் நிலை, ஏனைய மேலை நாட்டோடு ஒப்பிடுகையில் நம் இந்திய நாட்டில் மிக மோசமாகத்தான் இருக்கிறது. இதற்குரிய காரணிகளை ஆராய்ந்தால் இதில் ஆண்களின் மனப்போக்கு மிக கணிசமான பங்கு வகிக்கிறது. தங்கள் இல்லங்களில் பெண்களை மதித்து நடப்பவர்கள்கூட வெளி இடங்களில் மற்றும் அவர்கள் ஆளுகைக்குரிய பணியிடங்களில் பெண்களை கேலிக்குரிய வகையில் கண்ணியக்குறைவாக நடத்துவது தொடர்ந்து கொண்டு வருகிறது. நவீன பெண்களின் நடை உடை பாவனைகள் தங்களை இவ்வாறு நடந்துகொள்ள செய்கின்றன என்ற அவர்களின் சமாளிப்புகள் சரியான காரணமாக தெரியவில்லை. அவர்கள் சிந்தனை தெளிவின்மையையே இவைகள் காட்டுகின்றன.

பெண்களுக்கான அமைப்புகளிலும் பலவேறு தன்மைய அமைப்புகள் நிலவுகின்றன. மேல்தட்டு பெண்கள் வெறும் பொழுதுபோக்காய் பயன்படுத்தும் பெண்ணிய அமைப்புக்கள். இத்தகைய அமைப்புகளின் குறியீடுகளாய், திரு பாக்யம் ராமசாமி அவர்களின் “அப்புசாமி சீதாபாட்டி” கதைகளில் வருவதுபோல் பளபளக்கும் பட்டாடைகளும் உதட்டுச் சாயங்களும் முகத்தில் அணியும் கருப்பு கண்ணாடிகளும் காட்சியளிக்கின்றன. இவைகளால் பெரிதாக எந்த சமுதாய பயன்களையும் பெற்றுவிட இயலாது.

அடுத்து சமூகப் பணிகளில் மட்டும் முழமையாக ஈடுபடும் பெண்கள் அமைப்புகள். இத்தகைய அமைப்புக்கு மிகச்சிறந்த உதாரணம் திருமதி சின்னத்தாய் அவர்களின் அமைப்பு. அவர்கள் பெரிய கல்வியறிவு பின்புலமோ, நவ நாகரீக பாவனைகளோ அற்ற நிலையிலும் தங்களது சீரிய செயல்களின் மூலம் பலரின் புருவங்களை உயர்த்தி அமைப்பின் மதிப்பீட்டை உயர்த்தி இpருக்கிறார்கள். எனவேதான் திரு வாஜ்பாய் அவர்கள் பிரதம அமைச்சாராக இருந்தபோது பொது மேடையில் திருமதி சின்னத்தாய் அவர்களின் பாதங்களை குனிந்து வணங்கினார். அப்பொழுது அங்கு நிமிர்ந்து நின்றது நமது பண்பாடு மட்டுமல்ல பெண்களின் உயர்வும்தான். சமீபத்திய சுனாமி துயர்துடைப்பு பணிகளிலும் திருமதி சின்னத்தாய் அவர்களின் அமைப்பு ஆற்றிய பணி போற்றுதலுக்கு உரியதாகும். இத்தகைய அமைப்புகளால் பெண்கள் சுதந்திரம் உரிமை இவைகளில் பெரிதாக எதையும் பெற்றுவிட முடியாது எனினும் பெண்களின் சமூக மதீப்பீட்டை நிச்சயம் உயர்த்த முடியும்.

மூன்றாவதாக முழுமையும் பெண்களின் உரிமை சுதந்திரம் இவைகளுக்காக இயங்கும் இயக்கங்கள் சார்ந்த அமைப்புகள். இவைகள் உலகம் தழுவியும், நல்ல சட்ட பாதுகாப்புகளோடும், உரிமைகளோடும் நடைபெறுகின்றன. பெண்ணியத்தை நிறுவுவதில் இவைகளின் பணிகள் மிகவும் கடினமானதும் தொடர்தன்மை கொண்டதுமாகும். இவர்கள் வகுக்கும் நெறிமுறைகளும், உரிய முறையான போராட்டங்களுமே பெண்ணியத்திற்கான கட்டுமானங்கள்.

பெண்ணியத்திற்கான அமைப்பு வகையை சாராத மற்றுமொரு பெண்கள் சார்ந்த அமைப்பு முறை நிலவுகிறது. இவைகள் இயக்கங்களில் இணைந்து செயல்படும் பெண்கள் அமைப்பு முறைகள். இதற்கான சிறந்த உதாரணம் ஈழத்தின் விடுதலைப் புலிகளின் அமைப்புகளில் பங்குபெறும் பெண்கள் அமைப்பு. இதில் பெண்கள் ஆற்றும் சாதனை, மற்ற எல்லாத்துறைகளிலும் பெண்கள் தனியாகவும் கூட்டாகவும் ஆற்றிய சாதனையை காட்டிலும் மிகவும் வேறுபட்டதும், கடினமானதும், சிக்கலானதும், எல்லாவற்றிலும் மேலாக தன் உயிரையே பணயமாக்க கூடியதானவுமாகும். இது ஒன்றே, வேறு எந்த அளவுகோலும் தேவையற்ற வகையில் “ஆணுக்கு பெண் சமமே” என உலகம் தீர்மானிக்க போதுமானதாகும்.

இக்கட்டுரைக்கு தொடர்பு இருக்கிறதோ என்னவோ கடமையாக கருதி இதனை கூற விழைகிறேன். விடுதலை புலிகளின் அமைப்பில் பெண்கள் கண்ணியமாக நடத்தப்பெறும் பாங்கு உலகம் முழுமையும் ஒருசேர போற்ற வேண்டியதாக நான் உளமாற நம்புகிறேன். இதில் கருத்து வேறுபட காரணமிருப்பதாக உலகின் மிகப்பெரிய பொது அமைப்பான ஐக்கிய நாட்டுச் சபையே கருதுவதாயின், வல்லுனர் குழு சார்ந்த ஒரு கள ஆய்வினை செய்து முடிவுகளை உலகுக்கு கொண்டு வரலாம். அவை பெண்ணினத்திற்கு வலு சேர்ப்பதாக நிச்சயம் இருக்கும்.

இக்கட்டுரையின் விழைவு

பெண்கள் சமத்துவம், சுதந்திரம் என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாய வளர்சிக்கும் தேவையானது. அத்தகைய பெண்ணிய கருத்துருவாக்கத்தில், குறுகிய கால பயன்களை மட்டும் இலக்காக கொண்ட தெளிவற்ற சிந்தனையை தவிர்த்து, பெண்களின் தனி வாழ்விலும் சமுதாய பொது வாழ்விலும் நீண்ட கால பயன்களை உருவாக்க வல்ல கருத்துகளையே முன்னடத்திச் செல்ல வேண்டும் என்பதோடு, அவற்றை அடைவதில் அனைவரும் தெளிந்த, முறையான நெறி நின்று தன் பங்களிப்பை வழங்க வேண்டுமென்பதுமே இக்கட்டுரையின் விழைவு.

Sunday, March 27, 2005

வலைஞர்களே! பயனமெங்கே?

வல்லான்மை மிக்க வலைப்பதிவு வலைஞர்களே!

உங்கள் இதயங்களை சற்று நேரம் எனக்கு கடனாகத் தாருங்கள். நம் எழுத்துக்களால் இந்த உலகையே மாற்ற விரும்பும் நாம் நம்மைப் பற்றியும் சிறது சிந்திக்க உங்கள் இதமான இதயங்கள் எனக்கு இன்று அவசியமாக தேவைப்படுகிறது. நம்புங்கள், சற்றைக்கெல்லாம் அவைகளை மீண்டும் உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன்.

வலைஞர்களான நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று பலப்பல எண்ண மலர்கள் வண்ண மலர்களாய், வாச மலர்களாய் மலர்ந்திருக்கின்றன. நாளும் நாளும் புதிது புதிதாய் மலர்ந்தும் வருகின்றன. தொகை தொகையாய் பவனி வரும் அந்த எழுத்து மலர்கள் ஒவ்வொன்றையும் வகைப் பிரித்தால், அதில்தான் எத்துனை எழுச்சிக் கருத்துக்கள், புரட்சிக் கருவூலங்கள், கால காலமாக மனத்தில் எழுதப்பட்டிருக்கும் மறுக்களை, ஒருநொடியில் மாற்றிவிட முடிந்த சிந்தனைச் சிதறல்கள்? இதுகாறும் நமக்கு எட்டா கனியாய் நின்ற எத்துனைச் செய்திகள்,
மறைக்கப்பட்ட வரலாறுகள், மறுதளிக்கப்பட்ட தீர்ப்புகள், இன்று ஆதாரப்பூர்வ ஆவணங்களாய், அறிவார்ந்த களஞ்சியங்களாய் நம் கரங்களில் தவழ்கின்றன. இந்தக் கனிகளை மந்திரத்தில் பறித்தவர் எவர். உழைப்பில்லா ஊதியங்களா இவைகள்? எப்படி சாத்தியமானது இது?

வலைத்தளம், கருத்துகளுக்கு கட்டுகளை இடும் கயவர்கள் இல்லாத வானவெளி. சுத்தமான காற்றை சுவாசிக்க நமக்கு கிடைத்த ஓசோன் படராத பூமி. இந்த எல்லையில்லா பரந்த வெளியில், எவர் துணையுமின்றி, நாம் “எண்ணிய எண்ணியாங்கு” இயம்பிட இயலும். இங்கு மட்டுமே சுதந்திரம் நம் பிறப்புரிமை. ஆனால் போராடி பெறாத எந்த சுதந்திரத்தின் மதிப்பும் எளிதில் உணரப்படுவதில்லை என்பார்கள். நாமும் வலைத்தளம் நமக்கு அளிக்கின்ற இந்த சுதந்திரத்தின் முழு புரிதலுமின்றி நம் பயணத்தை தொடங்கி விடுவோமோ என ஐயம் எழுகிறது. ஏகாந்த நேரத்தில் ஏன் இந்தக் கவலை என்றுதானே கேட்கிறீர்கள்?

வலைத் தளத்திலும் சில வல்லூறுகள் வட்டமிட தொடங்குகின்றன. வலைத்தளத் தோட்டத்தில் மலர்களுக்கு நடுவில் களைகளும் காலூன்ற துடிக்கின்றன. அவைகள் எந்த உருவில் வர துடிக்கின்றன என்பதற்கு உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் கூறுகிறேன். அவைகள் இங்கும் எழுத்துக்களுக்கு சாதி நிறம் பூசத் துடிக்கின்றன. நல்ல வேளை இது ஒரு தொடக்கம்தான். இதுவே சரியான சமயம். இன்று நாமே சிந்தித்து நம்மில் நிலவும் சிலபல குறைகளை நீக்கிக்கொள்ள தலைப்படாவிடில், நாளை காலம் கடந்த ஞானம் வெறும் கண்துடைப்பாய் மாறிவிடும்.

வலைபதிவாளர் என ஓரினமாய் நிற்கும் நம்மில் இவர் இன்னார் என இனம் பிரிக்க தலைப்பட்டு விட்டால் இறுதியில் என்ன மிஞ்சும். வெறும் குப்பை கூலங்கள்தான் மிஞ்சும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. இவை குறித்து இந்த தருணத்தில் கருத்தொருமித்த முடிவுகள் எடுக்கப்படவில்லையானால் எதிர் வரும் காலத்தில், வலைத்தளம் என்பது ஒர் இயக்கம் என்ற உயரிய நிலை மாறி வெற்றோசை கூட்டம் என்ற நிலை தோன்றிவிடும். நாம் இயக்கமாக ஏன் மாற வேண்டும் கூட்டமாகவே இன்னும் சுதந்திரத்துடன் இருந்துவிட்டு போவோமே என எண்ணுவோர் சற்று சிந்திக்க வேண்டும்.
இயக்கம் என்பது பல மூலகங்கள் சேர்ந்தாலும், அவை இரசாயன மாற்றம் அடைந்து, ஒவ்வொன்றும் தன் தனித்தன்மை மறைந்து ஒரு கூட்டுப்பொருளாய்(COMPOUND) உருவாவதை பேன்றது, வலுவானது, எளிதில் பிரிக்க இயலாதது, பயன்மிக்கது. மாறாக கூட்டமென்பது பல பொருள்களின் கலவை(MIXTURE) மட்டுமே. என்னதான் சேர்ந்திருந்தாலும் ‘தாமரை இலை தண்ணீர்’ போல் ஒட்டுதலற்ற நெறி சார்ந்தது. இதில் எதை நாம் விரும்புவது? எதை தேர்வு செய்வது?

உலகில் தோன்றிய இயக்கங்கள்தான் சாதனை களங்கள். முற்போக்கு சிந்தனையும், அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் தரத்தக்க தொடர் முயற்சியும் கூடிய தளங்கள். அங்கு ஒருவித போராட்டம் என்றும் இருந்துகொண்டே இருக்கும். அதன் எல்லாப் பணிகளும் ஒரு நோக்கம் சார்ந்த நகர்வாய் இருக்கும். சரி இயக்கமாக மாற வேண்டும் என்றால் எல்லாவற்றிலும், எல்லாவற்றுக்கும் ஒத்து போதல் என்பதா பொருள்? அல்ல அது தெளிவற்ற போலி.

கருத்துக்களுடான மோதல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அது தடுக்க தேவையில்லாத ஒன்றும் கூட. மோதல் என்பதுதான் இயங்கிக் கொண்டிருப்பதற்கான உயிரோட்ட சான்று. எனவே சில தர்க்க வாதங்களில் பின்னூட்ட போர்கள் அனல் பறக்கும் போர்க்களமாக மாறி விடுவதில் தவறில்லை. அப்பொழுதுதான் வாசகர்களிடம் ஒரு எரிமலையை தோற்றுவிக்க முடியும். எழுத்தில் ஒரு தட்டை தன்மைகள் மாறி உயிரோட்டம் நிலவும்.

இந்த மோதல் எங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது? எங்கு கருத்து மோதல் தனி மனித மோதலாய் மாறுகிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. எங்கு அடிப்படைப் பண்பாடுகளும் நாகரீகங்களும் காற்றில் பறக்கவிடப் படுகிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. எங்கு பிறர் சுதந்திரத்திற்கு விலங்கிட முயல்கிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. என் சுதந்திரம் என்பது ‘என் கைவீச்சு பிறர் மூக்கை உரசாதவரை’ என்ற தெளிவு பிறந்துவிட்டால் எந்த மாச்சர்யங்களுக்கும் இடமில்லை.

நவீன இயற்பியலின் நாயகர்களாக திகைபவர்களில் ஒருவரான விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் அவர்கள், முப்பது வருடங்களுக்கு முன் அறிவியல் முரண்பாடு நிறைந்த கருப்புவளை (BLACK-HOLE) குறித்த ஆய்வறிக்கையை உலகுக்கு வழங்கினார். அவர் இன்று தன்னால் முன்மொழியப்பட்ட கருத்துகள் தவறானது என முப்பது வருடங்களுக்கு பின் ஏற்று புதிய கருத்துக்களை உலகுக்கு வழங்குகிறார். கருத்து மாற்றங்கள் விஞ்ஞானத்தில் சாத்தியமாவதுபோல் மெய்ஞானத்திலும் சாத்தியமானதே.

இந்த தெளிவைப் நாம் பெற்றால் நம்மிடையே நடைபெறும் கருத்து மோதல்கள் குறிபிட்ட அந்த கருத்தோட்டத்தில் ஒரு தெளிவு பிறப்பதற்கான வழி முறைகளாக மாறிவிடும். அப்பொழுது இது பிறரால் போற்றப்படுவதோடு மட்டுமல்லாமல் சமுதாய பயன்மிக்கதாயும் மாறிவிடும். இன்னும் சில விவாதங்கள் உண்டு. அவைகள் கோழியா முட்டையா போன்ற விவாதங்கள். அவைகள் என்றும் நிலைத்திருப்பன. ஏதோ இன்றே அவை அனைத்திற்கான தீர்வையும் நாம் கண்டுவிட இயலும் என்பதைப் போன்ற மாயையில் சிக்கி கால விரயம் நட்பு விரயத்திற்கு இடமளிக்காமல், இவற்றில் நாம் விரும்பும் கருத்துக்கு வலுவுட்டத்தக்க செய்தியை மட்டும் பதிவு செய்துவிட்டு நாசுக்காக விலகிவிடுவதே நலமானது. இது தப்பித்தலா? தெளிவா? நாம் இதில் சற்று விவாதித்து தெளிவோமே!.

இதன் தொடர் சிந்தனையை நாளை தொடர்வோமா?

Monday, March 21, 2005

வாருங்கள் மருமகனே!

வாருங்கள் மருமகனே! வாழ்த்தி வரவேற்கிறேன்!

ஈழத்தின் சுழற்பந்து எம் வீட்டு மதிமலரை மணந்தது. முரளியாரே! இனி நீர், ஆடு களத்தில் மட்டும் பந்தை வீசிக் கொண்டிருக்க மட்டீர்கள். கிடைத்திருப்பது மலர் அல்லவா? அதிலும் வெறும் மலரா? மதி நிறைந்த மலரல்லவா? வாழ்க்கை களத்தில் நறுமணமும் வீசிக் கொண்டிருப்பீர்கள்.

வாழிய நலனே!

தமது குடும்ப நண்பர்கள் என்பதால் இணைத்து வைத்த சகோதரர் சந்திரசேகர் (திரைப்பட நடிகர்) சிறந்த செயல் புரிந்துள்ளார். எம் பாராட்டுகளும் நன்றிகளும். பாராட்டு சரி நன்றி எதற்கு? அவர் இணைத்து வைத்துள்ளது இரண்டு குடும்பங்களாக மட்டும் நான் காண வில்லை. உறவால், உணர்வால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றிய எம் இரு நாட்டை இணைத்துள்ளார். ஈழநாடு, தமிழ்நாடு. எனவேதான் நன்றிகள்.

தமிழர்தம் உயர்வுக்கு பாரதியும், அவன் தாசன் பா தாசன் - பாரதிதாசனும் கண்ட கனவுகளின் மிச்சத்தையும் சொச்சத்தையும் இன்று நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம். என்ன கனவு அது? உலகெலாம் பரவி நிற்கும் தமிழர்தம் தொப்புள் கொடி உறவுகள் மீண்டும் மீண்டும் இரண்டறக் கலந்து நாட்டு கொடியோடு போட்டியிட்டுப் பறக்க வேண்டும்.

தமிழன் தனியாளாய் எந்த தளத்திலும் நிற்கா நிலை வேண்டும்.

இத்தருணத்தில் ஒரு சிறு கேள்வியும் ஏனோ என் சிந்தையை தொலைக்கிறதே ஏன்?

நம் நாட்டில் நடந்த இத்திருமணத்தில் நமது இந்திய வீரர்கள் கலந்துகொள்ள வில்லையே ஏன்? சீப்புகள் ஒழிந்துவிடுவதால் திருமணங்கள் நிற்பதில்லைதான். இருப்பினும் கலந்துகொள்ளா காரணம் என்ன?

எனக்கு விடை பிடி படவில்லை. தெரிந்த வகையில் சமாதானம் செய்து கொள்கிறேன். போட்டிகள் நடப்பதால் அவகாசம் கிடைக்கவில்லையோ?

காரணம் எதுவெனினும் முக்கிய சிலரேனும் கலந்து கொண்டிருப்பின் அது நம்மை போற்றியதாகவும் ஆகும். நம் வீரர்களும் சமுதாய குடிமக்களே என்பதை நிறுவியதாகவும் ஆகும். எனக்கு என்னவோ அவர்கள் வானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. எதிர் வரும் காலங்களிலாவது அவர்கள் பூமியிலும் வாழ பழகட்டும்.

நண்பர்களே! இது தனியான என்னுடைய வாழ்த்தல்ல, நம் அனைவரின் வாழ்த்துக்கள்தானே!


அன்புடன்
மன்னை மாதேவன்

Thursday, March 17, 2005

அள்ளித் தெளித்த கோலங்கள்..

யார் கூறியது ஒட்டகங்கள் சகாராவை தாண்டாதென? கவிஞர் நா.காமராசன் அவர்களின் ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பு “சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்”. நாங்கள் சகாராவை தாண்டிய ஒட்டகங்கள். வெளி நாட்டு வேலையால் பெரும் பொருள் என்ற கானல் நீருக்காக அலையும் எம் போன்றோரை காலம் தன் ஓடத்தில் கட்டாயமாக ஏற்றி (ஒட்டகங்களாக) கடல்களுக்கு அப்பால் கடத்தித் தானே விடுகிறது.

நாங்கள் எங்கள் உணவை அசை போடுவதைவிட உணர்வை அசை போட்டுத்தானே வாழ்ந்து கொண்டு வருகிறோம். சரி சரி பை நிறைகிறதல்லவா? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. கேட்டுவிட்டு போங்கள். அது உங்கள் உரிமை. நாங்களும் தற்காப்புக்காக “இக்கரைக்கு அக்கரைப் பச்சை” என கூறலாம்தான். ஆனாலும் முடிய வில்லையே. எங்களில் பலருக்கு அக்கரை என்பதாக ஒன்று இருப்பதாகவே தெரிய வில்லையே! என்ன செய்ய? இன்னும் ஓரிரு வருடம்தான் அப்புறம் ஓடி வந்து நம் மண்ணில் விழுந்துவிட மாட்டேனா? இந்த வினா-விடை விளையாட்டு எங்களின் சுயம்புகள். எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள நாங்களே விதைத்து, வளர்த்து, அறுவடைச் செய்துகொள்வது. ஆனால் கண்டுமுதல் மட்டும் காவிரி போல் என்றும் வறட்சிதான்.

நல்லவேளை ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என எம்மை வாழ்த்திய எம் தாத்தாக்கள் காலத்தில் செயற்கைக்கோள்களும் அவற்றின் வாயிலாக சென்றடைய முடிந்த இயற்கைக் கோள்களும் இல்லாமல் போய் விட்டது!...இருந்திருக்கும் பட்சத்தில் “திங்கள் பறந்து திரவியம் தேடு”, “செவ்வாய் செலவில் செல்வம் சேர்”, “புதனைத் தோண்டி புதையலை நாடு” என்று அடுக்குத் தொடரில் அவர்கள் பாட்டுக்கு (பாட்டுக்கும்!) சொல்லிவிட்டு சென்றிருப்பார்கள். இந்நேரம் அங்கிருந்தும் எங்கள் உயிர்க் காற்று புலம்பலாய், புயலாய், ஏன் பூகம்பமாய் கூட வந்து கொண்டிருக்கும்.

வீட்டில் வாழா விட்டில்களின் ஆதங்கங்கள் கூட ஆடம்பர மாகத்தான் இருக்கும். “என்று தணியும்” எங்கள் தாய் மண்ணின் தாகம்? இது வீட்டுப் பற்றால் விளையும் நாட்டுப் பற்று. போதும் போதும். விடை கிடைக்கா வினாக்களில் இருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்! விசயத்துக்கு வருகிறேன்.

இலவச பூமியின் இதமான காலைப் பொழுது. நண்பர் தில்லை முகத்தில் வடியும் வியர்வையோடு அலுவலகத்தில் நுழைகிறார். பரபரப்பு அவர் நடையிலேயே நடனமிடுகிறது. தில்லை என்பது அவர் இயற் பெயரல்ல. அவர் அவதரித்த அம்பதியே அவருக்காய் அவதானித்த பெயர். பொதுவாக வெளிநாட்டில் (கூட்டில்) வாழும் பறவைகளுக்கு, தவிர்க்க இயலா காரணங்களால்கூட அலுவலகம் சற்று தாமதமாய் வருவது மறுக்கப்பட்ட கனிகள்தான்.

உள்ளுர் சந்தையில் விலை போகாத எங்கள் கல்வி மாடுகள், இங்கு நல்ல விலை பெற்று, எங்கள் வயிற்றை மட்டுமல்ல கூடவே மதிப்பையும் மரியாதையையும் சேர்த்தே நிரப்பி வருகிறது. எங்கள் திறமை, அலுவலகத்தில் முக்கியத்துவம் என்ற தூண்டிலை எங்கள்மீது ஆரம்பத்தில் போடும். மாட்டியவர்களின் முதுகுகள் முறிவுகளாகி சில நேரம் அதுவே முடிவுகளாகவும் ஆகிவிடும். இந்த தொடர் ஓட்டத்தை நிறுத்த, வயிற்றை இழக்கவா? இல்லை வாழ்வையே இழக்கவா? இதில் எதை இழக்க?

அன்று அவர் ஆற்ற வேண்டிய மலையளவு பணிகள் குவிந்து கிடக்கிறது. எனவேதான் இந்தப் பரபரப்பு. நண்பரின் பரபரப்புக்கு காரணம் கேட்டேன். சென்னையில் வசிக்கும் தன் செல்வப் புதல்வன் பள்ளி இறுதி வகுப்புக்கான தேர்வுகள் எழுதி வரும் இந்த நாளில் அன்றாடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவனுக்கு ஊக்கமளித்து வருவதாகவும், இன்று அப்படி தொலைபேசியில் தொடர்பு கொள்கையில் அவரது துணைவியார் “ஆற்றாது விட்ட கண்ணீர்” அவரை அக்கினியில் இடுவதாயும் கூறினார்.

நேரடியாக அவர் துணைவியார் கண்ணீருக்கான காரணம் கேட்பது பண்பாகாது என்றக் காரணத்தால், காரணம் அறிய சுற்றி வளைத்தேன்.

‘ஏன் நீங்கள் உங்கள் மகனிடம் பேச வில்லையா?’ - இது நான்.

‘அவன் வீட்டில் இருந்தால் அல்லவா அவனிடம் பேச - இது அவர்

‘தேர்வு நேரத்தில் கூட வீட்டில் இல்லாமல் அப்படி எங்கே சென்றான் அவன்?...நான்.

அவர் கூறியவை இவைதான். பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறும் இந்த நாட்களிலேயே..அரசு மற்றும் சில தனியார்; கல்வி நிறுவனத்திற்கான நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கப்படுவதால் - (நிர்வாக ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் வழங்குவது அது ஒரு துணைக் கதை) - அவற்றை பெறுவதற்கும் அவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவே அவன் சென்றிருப்பதாகவும் கூறிய அவரது துணைவியார் தேர்வு நாட்களில் அவன் கவனம் இப்படி சிதறுவதற்காகவே கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.

“இதுக்குபோயி அலட்டிக்கலாமா” என்று நான் கூட பாடியிருப்பேன் தான், அவர் இந்தச் சிங்காரச் சிறைதனில் சிறகடிக்கும் காரணம் அறியாமல் இருந்திருந்தால். ஏதோ சென்னைக் கோட்டை சல்லிசாய் விற்பனைக்கு வருகையில், எப்படியாவது அதை வளைத்து போட்டுவிட அடங்காத ஆசைகொண்டு இந்த புண்ணிய பூமியின் புதையலுக்காய் வந்தவரல்ல அவர். (ஒருவேளை அப்படி விலைக்கு வந்தால் நம் அரசியல் வா(ந்)திகளுக்கு மிஞ்சியல்லவா தானமும் தர்மமும்.) எங்கோ தொலைத்த வாழ்க்கையின் எச்ச சொச்சங்களாவது மிச்ச நாட்களில் நிற்காதா என்ற ஏக்க பயணமே அவருடையது.

அவர்களது வானத்தில் மின்னும் ஒரே நட்சத்திரமும், கண்ணுக்கு தெரியாத கலங்கரை விளக்கும் - “யாதுமாகி நின்றாய் என் அப்பனே” என்று அவர்களுக்கு யாதுமாகி நிற்பதும் அந்த ஒன்றுதான். எல்லாமே அவர்களது ஒரே செல்வப் புதல்வன் தான். அவன் கல்விதான் அவர்களது வண்ணக் கனவு. எனவேதான் இம்மாத அவர் வரவின் பெரும் பகுதியைத் தொலைபேசித் துறைக்கு வரவு வைத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூறுங்கள்ää அவர்கள் கண்ணீர் கதை கூறுமா இல்லையா?

எனக்கு பொறி தட்டியது. தேர்வு நடைபெறும் இப்பொழுதே இவற்றையெல்லாம் வழங்க வேண்டிய அவ்வளவு அவசரமென்ன? மாணவர்களின் நலனில் அக்கரையின்மையா? அரசும் அதிகாரிகளும் திட்டமிடலில் உள்ள குழறுபடிகளா? அல்லது கால அவகாச மின்மையா? உண்மையில் கால அவகாச மின்மை என்றால் எந்த அளவு கால அவகாசமின்மை? தேர்வு முடிந்த மறுநாளேகூட வழங்க முடியாத அளவுக்கு இந்த இரண்டொரு நாட்கள் அவ்வளவு முக்கியமானவைகளா?

சென்ற ஆண்டு பொறியியல் கல்வி தொடங்க தனியார், அரசு என மாறி மாறி அறிக்கை யுத்தமும் நீதிமன்ற யுத்தமும் செய்து ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு மேல் மாணவர்களின் நாட்களை வாயில் போட்டு விழுங்கியவர்களுக்கு இந்த இரண்டொரு நாட்களா இயலாத ஒன்று? சரி இந்த ஆண்டு மட்டும் இந்த தனியார், அரசு கல்லூரி கண்ணாமூச்சு விளையாட்டு இருக்காதா என்ன? ஏற்கனவே தொடங்கி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அண்மையில் பொதிகை தொலைக்காட்சியில் மாணவர்க்கான தேர்வு குறித்த கலந்துரையாடலை சகோதரியர் பாரதி பாஸ்கர் அவர்கள் நிகழ்த்தினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக வருகை புரிந்திருந்த மனோதத்துவ மருத்துவர் மற்றும் மாணவர் தேர்வு முறை குறித்த நூல் ஒன்றை எழுதியுள்ள சிந்தனையாளர் ஆகியவர்கள் வழங்கியச் செய்திகள் நம் கல்வி முறையில் நிலவும் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தேர்வு காலங்களில் மாணவர்களின் மன அழுத்தத்தைப் பற்றி விரிவாக விளக்கினார் மருத்துவர். மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்கும் நம் தேர்வு முறைக்கே அதற்கான தகுதி யின்மையை விளக்கினார் சிந்தனைவாதி. அவர் பார்வையில் “தேர்வு” என்ற சொல்லும் அதன் வர்க்க வார்த்தையான “தோல்வி” என்ற சொல்லும் குறைப் பிரசவங்கள் என நிறுவினார்.

கல்வி கற்கும் மாணவர்களின் தகுதியை நிர்ணயிப்பதில் அவர்களின் ஆண்டு முழுமைக்கான அறிவுசால் ஆய்வு இல்லாமல், நம் தேர்வு முறைகள், ஆண்டின் இறுதி நாட்களைச் வெறுமனே சார்ந்து நிற்கின்றன. உதாரணமாக நல்ல திறனுள்ள ஒரு மாணவன் தேர்வு காலத்தில் உடல் நலக்குறைவில் தேர்வு எழுதும் வாய்ப்பை இழக்கிறான். அவனை எப்படி தோல்வி மாணவன் என கணக்கிடுவது? மாறாக, கல்வியில் மிக மிக பின் தங்கிய மாணவன் ஒருவன் குறுட்டான் போக்கான வாய்ப்புகளில் (அதிர்ஷ்ட வசமாக அவன் படித்திருந்த மிகக் குறுகிய பாடப் பகுதிகளிலிருந்து தேர்வு வினாக்கள் வந்தமையால்) பெரும் வெற்றி பெறுகிறான். அவனது உண்மைத் தகுதியை அவன் பெற்ற மதிப்பெண் வெற்றி உறுதி செய்யுமா?

திறனை நிறுவுகின்ற முறையான்மை சார்ந்த ஒன்றில் அதை எடைபோடும் எடைத்தட்டிலேயே உள்ள இவைபோன்ற ஊனங்கள் ஏற்புடையதுதானா? கல்வித் துறைசார் ஆன்றோர்கள் சிந்தனைக்கும் ஆக்கத்திற்கும் உரிய இதனை அவர்களின் ஆய்விற்கே விட்டு விடுகிறேன். தகுதியை உறுதி செய்கின்ற சிறந்த மாற்று வழிகள் உருவாக்கப் படுமானால் அவைகள், “வரப்புயர” என்பதற்கொப்ப நேரடியாக மாணவர் தொடங்கி நாடு வரை பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அதிகாரிகளுக்கு எனது இதமான வேண்டுகோள் இதுதான். தேர்வு நேரத்தில் மாணவர்களின் கவணம் திசை திரும்பவும், மாணவர்களின் மற்றும் அவர்கள் பெற்றோர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க கூடியதுமான இந்த கால குளறுபடிகளை நீங்கள் நினைத்தால் தவிர்க்கலாம் அல்லவா? அது ஒன்றே உங்கள் சமுதாயப் பார்வைக்கு சான்றாகும் அல்லவா? இனியேனும் இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?

Saturday, March 12, 2005

தாழ்மையானதோர் வேண்டுகோள்!

அன்புமிகு வலைப்பூ சோதர சோதரிகளே!

அண்மையில் வலைப்பூ வாயிலாக நாம் எவற்றையெல்லாம் அடையலாம் என்ற வினாவுடன் கூடிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதன் தொடர்ச்சியாக ஒரு நீண்ட கட்டுரையை எழுதி வலைப்பூவில் உள்ளிட வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் நான் சற்றும் எண்ணிப்பாராத வகையில் இப்படி ஒரு உள்ளீட்டை எழுத வேண்டி வரும் என எதிர்பார்க்கவில்லை. வலைப்பூக்களின் பயன் இதுவென நாம் எண்ணியிருந்தவைகளின் எண்ணிக்கையில் ஒன்றை உயர்த்திக்கொள்ளவும், அதனுடன் சேர்த்து நம் உள்ளத்தையும் சற்று உயர்த்திக்கொள்ளவும் இவ் உள்ளீட்டை இட விழைகிறேன்.

18-03-2005 குங்குமம் வார இதழில் மெகா ஜனங்களே என்ற விவேக் அவர்கள் எழுதியிருக்கும் தொடரைப் படித்தேன். அதைப் படித்தவுடன் என் இதயத்தில் வேதனைச் சுழி மையமிட்டு விட்டது. பார் போற்றும் புலவன் பாரதி தொடங்கி, புலமைப்பித்தன் இடைநின்று, சமீபத்தில் சாலை விபத்தில் திடீரென மரணமெய்திய சு.சமுத்திரம் ஈறாக இலக்கியவாதிகளின் வாழ்வில் ஏற்பட்ட துயர்மிகு நிலையை படிக்கின்ற போது விவேக் அவர்களின் வேதனையில் சாரமிருக்கிறது என உணர முடிந்தது. சம காலத்தில் வாழும் புலவர்களை, சிந்தனைவாதிகளை, இலக்கியவாதிகளை போற்றுவதிலும் அவர்கள் துயருறும் காலத்தில் உதவிக் கரம் நீட்டுவதிலும் நாம் சற்று குறைபாட்டோடுதான் நடந்து கொள்கிறோம். ஆனால் அப்படிப்பட்டவர்களின் மறைவுக்கு பின்னால் அவர்களை வானளாவ போற்றுவதில் மட்டும் எந்த குறையும் வைப்பதில்லை. தமிழர்களாகிய நம்மைப் பற்றிய இந்த உண்மை சற்று சுடத்தான் செய்கிறது. இந்த கறையை சற்றேனும் கழுவ முனைவதில் நாம் அனைவரும் சற்று மேம்பட்டு நிற்க விரும்பியே உங்களிடத்தில் என் பணிவான அன்புநிறை இவ் வேண்டுகோளை வைக்கிறேன். இது பிழை என எண்ணுவோர் உளமாற என்னை மன்னிக்கவும்.

“வார்த்தை சித்தர்” என்று எல்லோராலும் போற்றப்பட்ட வலம்புரிஜான் இன்று உடல் நோயால் மட்டுமின்றி பொருளாதார குறைபாடு எனும் பெரு நோயாலும் தாக்குண்டுத் தவிக்கிறார். கவிஞர் திரு வைரமுத்து அவர்களும் விவேக் அவர்களும் தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். இன்னும் சிலரும் உதவியிருக்கலாம், வெளி உலகுக்கு தெரிய வரவில்லை. வலம்புரியாரின் அரசியல் வாழ்விலும் மற்ற பிறவிலும் முரண்பாடு காண்போர்கூட அவரது அறிவுசார்ந்த ஆற்றலை, அவர் ஆற்றிய உரைகளின் இலக்கியச் செறிவை மறுக்க மாட்டார்கள். அவர் அரசியல் வாழ்வு பிழைப்பட்டது என முழுதாய் முடிவுக்கு வரவும் தயக்கமாக உள்ளது. அப்படி முழுதும் பிழையெனில் இன்று பொருளாதாரத் துயரில் ஏன் அவர் உழலவேண்டும்? ஒருவேளை இற்றை நாள் அரசியல் வாதிகளின் ஒரே திறமையான அரசியலின் வாயிலாக மிகுந்த பொருளை ஈட்டி தன்னை வளமாக்கிக் கொள்ளும் அந்த திறமையில் அவர் குறைப்பட்டுத்தான் இருந்தாரோ? அவ்வாறாயின் அதுவே அவரது நிறையாகி விடும். எதுவாயினும் விவாதத்திற்கு இது பொழுதல்ல


அவருக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவென அந்த குங்கும் இதழ் விவேக் தொடரில் ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று(12-03-2005) அதில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவரது மருமகன் அவர்கள் அவரது தற்போதைய நிலையை கூறினார்கள். அது இன்னும் துயரமாக இருந்தது. அவர்களிடமிருந்து கீழ்கண்ட முகவரியைப் பெற்றேன். எனவே அன்பர்களே! இயன்றோர் கீழ்கண்ட விபரங்களை பயன்படுத்தி, இயன்ற சிறிய அளவிலேனும் அவரது “இடுக்கண் கலைய” முயல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, அத்தகைய நல்லோர் அனைவர்க்கும் தமிழ் சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தொலைபேசி எண்: 0091-044-26494234
முகவரி:
வலம்புரிஜான்
12 விஜிஎன் அவன்யூ
குமணன் சாவடி
சென்னை – 600 056