Thursday, March 17, 2005

அள்ளித் தெளித்த கோலங்கள்..

யார் கூறியது ஒட்டகங்கள் சகாராவை தாண்டாதென? கவிஞர் நா.காமராசன் அவர்களின் ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பு “சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்”. நாங்கள் சகாராவை தாண்டிய ஒட்டகங்கள். வெளி நாட்டு வேலையால் பெரும் பொருள் என்ற கானல் நீருக்காக அலையும் எம் போன்றோரை காலம் தன் ஓடத்தில் கட்டாயமாக ஏற்றி (ஒட்டகங்களாக) கடல்களுக்கு அப்பால் கடத்தித் தானே விடுகிறது.

நாங்கள் எங்கள் உணவை அசை போடுவதைவிட உணர்வை அசை போட்டுத்தானே வாழ்ந்து கொண்டு வருகிறோம். சரி சரி பை நிறைகிறதல்லவா? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. கேட்டுவிட்டு போங்கள். அது உங்கள் உரிமை. நாங்களும் தற்காப்புக்காக “இக்கரைக்கு அக்கரைப் பச்சை” என கூறலாம்தான். ஆனாலும் முடிய வில்லையே. எங்களில் பலருக்கு அக்கரை என்பதாக ஒன்று இருப்பதாகவே தெரிய வில்லையே! என்ன செய்ய? இன்னும் ஓரிரு வருடம்தான் அப்புறம் ஓடி வந்து நம் மண்ணில் விழுந்துவிட மாட்டேனா? இந்த வினா-விடை விளையாட்டு எங்களின் சுயம்புகள். எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள நாங்களே விதைத்து, வளர்த்து, அறுவடைச் செய்துகொள்வது. ஆனால் கண்டுமுதல் மட்டும் காவிரி போல் என்றும் வறட்சிதான்.

நல்லவேளை ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என எம்மை வாழ்த்திய எம் தாத்தாக்கள் காலத்தில் செயற்கைக்கோள்களும் அவற்றின் வாயிலாக சென்றடைய முடிந்த இயற்கைக் கோள்களும் இல்லாமல் போய் விட்டது!...இருந்திருக்கும் பட்சத்தில் “திங்கள் பறந்து திரவியம் தேடு”, “செவ்வாய் செலவில் செல்வம் சேர்”, “புதனைத் தோண்டி புதையலை நாடு” என்று அடுக்குத் தொடரில் அவர்கள் பாட்டுக்கு (பாட்டுக்கும்!) சொல்லிவிட்டு சென்றிருப்பார்கள். இந்நேரம் அங்கிருந்தும் எங்கள் உயிர்க் காற்று புலம்பலாய், புயலாய், ஏன் பூகம்பமாய் கூட வந்து கொண்டிருக்கும்.

வீட்டில் வாழா விட்டில்களின் ஆதங்கங்கள் கூட ஆடம்பர மாகத்தான் இருக்கும். “என்று தணியும்” எங்கள் தாய் மண்ணின் தாகம்? இது வீட்டுப் பற்றால் விளையும் நாட்டுப் பற்று. போதும் போதும். விடை கிடைக்கா வினாக்களில் இருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்! விசயத்துக்கு வருகிறேன்.

இலவச பூமியின் இதமான காலைப் பொழுது. நண்பர் தில்லை முகத்தில் வடியும் வியர்வையோடு அலுவலகத்தில் நுழைகிறார். பரபரப்பு அவர் நடையிலேயே நடனமிடுகிறது. தில்லை என்பது அவர் இயற் பெயரல்ல. அவர் அவதரித்த அம்பதியே அவருக்காய் அவதானித்த பெயர். பொதுவாக வெளிநாட்டில் (கூட்டில்) வாழும் பறவைகளுக்கு, தவிர்க்க இயலா காரணங்களால்கூட அலுவலகம் சற்று தாமதமாய் வருவது மறுக்கப்பட்ட கனிகள்தான்.

உள்ளுர் சந்தையில் விலை போகாத எங்கள் கல்வி மாடுகள், இங்கு நல்ல விலை பெற்று, எங்கள் வயிற்றை மட்டுமல்ல கூடவே மதிப்பையும் மரியாதையையும் சேர்த்தே நிரப்பி வருகிறது. எங்கள் திறமை, அலுவலகத்தில் முக்கியத்துவம் என்ற தூண்டிலை எங்கள்மீது ஆரம்பத்தில் போடும். மாட்டியவர்களின் முதுகுகள் முறிவுகளாகி சில நேரம் அதுவே முடிவுகளாகவும் ஆகிவிடும். இந்த தொடர் ஓட்டத்தை நிறுத்த, வயிற்றை இழக்கவா? இல்லை வாழ்வையே இழக்கவா? இதில் எதை இழக்க?

அன்று அவர் ஆற்ற வேண்டிய மலையளவு பணிகள் குவிந்து கிடக்கிறது. எனவேதான் இந்தப் பரபரப்பு. நண்பரின் பரபரப்புக்கு காரணம் கேட்டேன். சென்னையில் வசிக்கும் தன் செல்வப் புதல்வன் பள்ளி இறுதி வகுப்புக்கான தேர்வுகள் எழுதி வரும் இந்த நாளில் அன்றாடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவனுக்கு ஊக்கமளித்து வருவதாகவும், இன்று அப்படி தொலைபேசியில் தொடர்பு கொள்கையில் அவரது துணைவியார் “ஆற்றாது விட்ட கண்ணீர்” அவரை அக்கினியில் இடுவதாயும் கூறினார்.

நேரடியாக அவர் துணைவியார் கண்ணீருக்கான காரணம் கேட்பது பண்பாகாது என்றக் காரணத்தால், காரணம் அறிய சுற்றி வளைத்தேன்.

‘ஏன் நீங்கள் உங்கள் மகனிடம் பேச வில்லையா?’ - இது நான்.

‘அவன் வீட்டில் இருந்தால் அல்லவா அவனிடம் பேச - இது அவர்

‘தேர்வு நேரத்தில் கூட வீட்டில் இல்லாமல் அப்படி எங்கே சென்றான் அவன்?...நான்.

அவர் கூறியவை இவைதான். பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறும் இந்த நாட்களிலேயே..அரசு மற்றும் சில தனியார்; கல்வி நிறுவனத்திற்கான நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கப்படுவதால் - (நிர்வாக ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் வழங்குவது அது ஒரு துணைக் கதை) - அவற்றை பெறுவதற்கும் அவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவே அவன் சென்றிருப்பதாகவும் கூறிய அவரது துணைவியார் தேர்வு நாட்களில் அவன் கவனம் இப்படி சிதறுவதற்காகவே கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.

“இதுக்குபோயி அலட்டிக்கலாமா” என்று நான் கூட பாடியிருப்பேன் தான், அவர் இந்தச் சிங்காரச் சிறைதனில் சிறகடிக்கும் காரணம் அறியாமல் இருந்திருந்தால். ஏதோ சென்னைக் கோட்டை சல்லிசாய் விற்பனைக்கு வருகையில், எப்படியாவது அதை வளைத்து போட்டுவிட அடங்காத ஆசைகொண்டு இந்த புண்ணிய பூமியின் புதையலுக்காய் வந்தவரல்ல அவர். (ஒருவேளை அப்படி விலைக்கு வந்தால் நம் அரசியல் வா(ந்)திகளுக்கு மிஞ்சியல்லவா தானமும் தர்மமும்.) எங்கோ தொலைத்த வாழ்க்கையின் எச்ச சொச்சங்களாவது மிச்ச நாட்களில் நிற்காதா என்ற ஏக்க பயணமே அவருடையது.

அவர்களது வானத்தில் மின்னும் ஒரே நட்சத்திரமும், கண்ணுக்கு தெரியாத கலங்கரை விளக்கும் - “யாதுமாகி நின்றாய் என் அப்பனே” என்று அவர்களுக்கு யாதுமாகி நிற்பதும் அந்த ஒன்றுதான். எல்லாமே அவர்களது ஒரே செல்வப் புதல்வன் தான். அவன் கல்விதான் அவர்களது வண்ணக் கனவு. எனவேதான் இம்மாத அவர் வரவின் பெரும் பகுதியைத் தொலைபேசித் துறைக்கு வரவு வைத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூறுங்கள்ää அவர்கள் கண்ணீர் கதை கூறுமா இல்லையா?

எனக்கு பொறி தட்டியது. தேர்வு நடைபெறும் இப்பொழுதே இவற்றையெல்லாம் வழங்க வேண்டிய அவ்வளவு அவசரமென்ன? மாணவர்களின் நலனில் அக்கரையின்மையா? அரசும் அதிகாரிகளும் திட்டமிடலில் உள்ள குழறுபடிகளா? அல்லது கால அவகாச மின்மையா? உண்மையில் கால அவகாச மின்மை என்றால் எந்த அளவு கால அவகாசமின்மை? தேர்வு முடிந்த மறுநாளேகூட வழங்க முடியாத அளவுக்கு இந்த இரண்டொரு நாட்கள் அவ்வளவு முக்கியமானவைகளா?

சென்ற ஆண்டு பொறியியல் கல்வி தொடங்க தனியார், அரசு என மாறி மாறி அறிக்கை யுத்தமும் நீதிமன்ற யுத்தமும் செய்து ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு மேல் மாணவர்களின் நாட்களை வாயில் போட்டு விழுங்கியவர்களுக்கு இந்த இரண்டொரு நாட்களா இயலாத ஒன்று? சரி இந்த ஆண்டு மட்டும் இந்த தனியார், அரசு கல்லூரி கண்ணாமூச்சு விளையாட்டு இருக்காதா என்ன? ஏற்கனவே தொடங்கி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அண்மையில் பொதிகை தொலைக்காட்சியில் மாணவர்க்கான தேர்வு குறித்த கலந்துரையாடலை சகோதரியர் பாரதி பாஸ்கர் அவர்கள் நிகழ்த்தினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக வருகை புரிந்திருந்த மனோதத்துவ மருத்துவர் மற்றும் மாணவர் தேர்வு முறை குறித்த நூல் ஒன்றை எழுதியுள்ள சிந்தனையாளர் ஆகியவர்கள் வழங்கியச் செய்திகள் நம் கல்வி முறையில் நிலவும் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தேர்வு காலங்களில் மாணவர்களின் மன அழுத்தத்தைப் பற்றி விரிவாக விளக்கினார் மருத்துவர். மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்கும் நம் தேர்வு முறைக்கே அதற்கான தகுதி யின்மையை விளக்கினார் சிந்தனைவாதி. அவர் பார்வையில் “தேர்வு” என்ற சொல்லும் அதன் வர்க்க வார்த்தையான “தோல்வி” என்ற சொல்லும் குறைப் பிரசவங்கள் என நிறுவினார்.

கல்வி கற்கும் மாணவர்களின் தகுதியை நிர்ணயிப்பதில் அவர்களின் ஆண்டு முழுமைக்கான அறிவுசால் ஆய்வு இல்லாமல், நம் தேர்வு முறைகள், ஆண்டின் இறுதி நாட்களைச் வெறுமனே சார்ந்து நிற்கின்றன. உதாரணமாக நல்ல திறனுள்ள ஒரு மாணவன் தேர்வு காலத்தில் உடல் நலக்குறைவில் தேர்வு எழுதும் வாய்ப்பை இழக்கிறான். அவனை எப்படி தோல்வி மாணவன் என கணக்கிடுவது? மாறாக, கல்வியில் மிக மிக பின் தங்கிய மாணவன் ஒருவன் குறுட்டான் போக்கான வாய்ப்புகளில் (அதிர்ஷ்ட வசமாக அவன் படித்திருந்த மிகக் குறுகிய பாடப் பகுதிகளிலிருந்து தேர்வு வினாக்கள் வந்தமையால்) பெரும் வெற்றி பெறுகிறான். அவனது உண்மைத் தகுதியை அவன் பெற்ற மதிப்பெண் வெற்றி உறுதி செய்யுமா?

திறனை நிறுவுகின்ற முறையான்மை சார்ந்த ஒன்றில் அதை எடைபோடும் எடைத்தட்டிலேயே உள்ள இவைபோன்ற ஊனங்கள் ஏற்புடையதுதானா? கல்வித் துறைசார் ஆன்றோர்கள் சிந்தனைக்கும் ஆக்கத்திற்கும் உரிய இதனை அவர்களின் ஆய்விற்கே விட்டு விடுகிறேன். தகுதியை உறுதி செய்கின்ற சிறந்த மாற்று வழிகள் உருவாக்கப் படுமானால் அவைகள், “வரப்புயர” என்பதற்கொப்ப நேரடியாக மாணவர் தொடங்கி நாடு வரை பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அதிகாரிகளுக்கு எனது இதமான வேண்டுகோள் இதுதான். தேர்வு நேரத்தில் மாணவர்களின் கவணம் திசை திரும்பவும், மாணவர்களின் மற்றும் அவர்கள் பெற்றோர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க கூடியதுமான இந்த கால குளறுபடிகளை நீங்கள் நினைத்தால் தவிர்க்கலாம் அல்லவா? அது ஒன்றே உங்கள் சமுதாயப் பார்வைக்கு சான்றாகும் அல்லவா? இனியேனும் இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?

3 comments:

Anonymous said...

simply superb. this is not a story but true? I am highly impressed with your writing madev pls keep it up

simaa.vijayarajah

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

பெண்மையை பற்றி இவ்வளவு விரிவாக தெளிவாக விளக்கி உள்ளீர்கள். நன்றி.

jeevagv said...

நல்ல பதிவு. பல்வேறு விஷயங்களை தொட்டுச்சொன்றுள்ளீர்கள் (கூடவே படிப்பவர் மனதையும்!)
நன்றி.