Saturday, February 19, 2005

வெந்த புண்ணில் வேல் - கோபியார் இலங்கை வருகை !

-மன்னை மாதேவன்

“தட்ஸ்தமிழ்.காம்” இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது

உலகின் மிகப்பெரிய பொது அமைப்பான ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுசெயலாளர் திரு.கோபி அன்னன் அவர்களின் இலங்கை வருகை, தமிழர்களின் இதயத்தில் வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்கியதாக அமைந்துவிட்டது. துயருற்றவருக்கு அளிக்கின்ற ஆறுதல் வார்த்தைகளில் கூட
“ஓர் கண்ணில் வெண்ணை பிறிதொன்றில் சுண்ணாம்பு” என்னும் ஓரகம் காட்டிவிட முடியும் என்பதை நிருபித்திருக்கிறது. சமீப காலமாக ஐக்கிய நாட்டுச் சபையின் பயன்பாடு மட்டும்தான் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது என எண்ணியிருந்தோருக்கு, அதன் பண்பாட்டிலும் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நிருபித்திருக்கிறது. மேலும் தமிழர்களின் வாழ்வு நிலைக்கு இலங்கை அரசு தரும் மதிப்பீடுகளை, தாயக தமிழர்களாகிய நாம் மீண்டும் ஒருமுறை நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பளித்திருக்கிறது.

கோபி அன்னன் அவரது வருகை தொடர்புடைய நிலையினை நாம் மூன்று அங்கங்களாக உற்று நோக்கவேண்டும்.

1. ஐக்கிய நாட்டுச் சபை மற்றும் அதன் பொதுச் செயலர்.
2. சந்திரிகா அம்மையாரும் அவரது சிங்கள இனவாத அரசும்.
3. தமிழ் மக்கள் எண்ணமும் செயலும்.

ஐக்கிய நாட்டுச் சபை மற்றும் அதன் பொதுச் செயலர்:

கோபியாருக்கு எந்த இறை அசரீரி வந்து துயருறும் தமிழர்கள் அனைவரும் “தவிர்க்கப்பட வேண்டிய கனிகள்” என்று ஆணையிட்டது? “சாத்தான்கள் ஓதிய வேத”த்திற்கு “அவரும்” செவிசாய்த்து விட்டார் என்பது வெறுக்கத்தக்க, வேதனைத்தரும் செயல். இங்கு “அவரும்” என இச்சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பது பொருளற்றதல்ல. யார் இந்த கோபியார்? அவர் ஒரு தனிமனிதரல்ல-அவர் விரும்பிய வண்ணம் செயல்பட-ஓர் பேரமைப்பின் தலைமையின் குறியீடு. அவ்வமைப்பும் எத்தகையது. நாடு என்ற எல்லைகளை மட்டுமல்ல இன, மொழி மற்றும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்த ஒரு பொது அமைப்பு.

ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுமைத் தத்துத்வதை உணர்ந்துகொள்ள வேண்டுமாயின் அது தோற்றுவிக்கப்பட்ட காலச் சூழலை எண்ணிப்பார்க்க வேண்டும். இருபெரும் உலகமகா யுத்தங்கள் கற்பித்த பாடத்தின் வெளிப்பாடுதான் ஐக்கிய நாட்டுச் சபை. இன்றளவும் அம்வமைப்பு தன் நோக்காக (அதிகாரபூர்வகமாக) வறையறுத்துள்ளதில் முக்கிய அங்கமாய் விளங்குவது மனிதனின் தன்மானமும், சம உரிமையும், உலக சமாதானமும். அந்த தன்மானமும், சமத்துவமும் தமிழனுக்கு மட்டும் மறுக்கப்படுவதில் ஒட்டுமொத்த தமிழர்களும் மனம் குமுறாமல் வேறு என்ன செய்வது?


கோபியார் தமிழ் மக்களுக்கு என்ன சமாதானம் அளித்திருக்கிறார்? தான் தமிழர் பகுதிக்கு மனிதாபிமான அடிப்படையில் செல்வதையே விரும்பியதாகவும் ஆனால் ஒரு நாட்டின் விருந்தினர் என்ற வகையில் பயணத் திட்டங்கள் அரசே வகுக்க வேண்டியுள்ளதால் அது தன்னால் இயலவில்லை, எனினும் மற்றொருமுறை தமிழர் பகுதிக்கு வருவேன் என்பதும்தான்.

தமிழர் பகுதிக்குச் செல்லாத அவர் செயலை அவர் வார்த்தைகளிலேயே ஆய்வுசெய்தால்…
மனிதாபிமான அடிப்படையில் செல்ல விரும்பினேன் என்கிறார். ஆக செல்லாதது மனிதாபிமானமற்ற செயல்.
சரி..அவர் எதனால் தமிழர் பகுதிக்கு செல்ல விரும்பினார்? அதுதான் முறையானது. எனவேதான் விரும்பினார். அவ்வாறாயின் தான் விரும்பிய, ஒரு முறையான செயலை நிறைவேற்றிக்கொள்ள, நாடுகடந்த அதிகாரம் படைத்த ஓர் அமைப்பின் தலைமைக்கு இயலவில்லை என்றால் என்ன பொருள்?
அந்த அமைப்பில் நிலவும் நடைமுறைச் சட்டதிட்ட சடங்குகளின் அவலம்தான் இதன் பொருள்.

மறுமுறை வருவேன் என்பது இதனிலும் வேதனைக்குரியது. ஒரு தெருவில் உள்ள இரு வீட்டில் துயரச் சம்பவங்கள் நிகழ்வுறுகின்றது. ஒரு இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறிய ஒருவர், ஒன்றுமே கூறாமல் சென்றுவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் மற்ற இல்லத்திற்கு பிறிதொருமுறை வருகிறேன் என்பது எவ்வளவு உணர்வற்ற, அருவறுக்கத்தக்கது என்பதை நாம் அனைவரும் அறிவோம். வீட்டிற்கு பொருந்துகின்ற இதே நியதி எந்த நாட்டிற்கும் பொருந்தும்.

நடந்து முடிந்துவிட்ட ஒரு சாதாரண நிகழ்வுக்கு மிக வருத்தி பொருள் கொண்டு, இத்துனை அளவுக்கு விமர்சிக்க வேண்டுமா? என நம்மில் சிலர் எண்ணக்கூடும். அத்தகையவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் விமர்சிப்பது தனிப்பட்ட கோபி அன்னன் அவர்களை அல்ல. நாம் அவரது தனிமனித சிறப்புகளை அறியாதவர்களுமல்ல. தமிழர் பகுதிக்கு வரவில்லையே என்ற விவாதம், அவர் இலங்கைக்கு வந்து சென்றபின் தோன்றியிருக்குமானால், திரு கோபியாரின் சமாதானம் மிகச் சரியாக பொருந்தும், நாமும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நடந்தது என்ன? அவர் மாமன்றத்தை விட்டு புறப்படும் முன்பாகவே இக்கோரிக்கை வேண்டுகோளாக வைக்கப்பட்டு, ஆய்வில் உள்ளதாகவும், அவர் வருவதற்கு விரும்புவதாகவும் கூறப்பட்ட பின்பாக தமிழர்களுக்கு இத்தகைய அவமதிப்பு நடைபெறுகிறது என்றால் என்னவென்றுரைப்பது?

சந்திரிகா அம்மையாரும், அவரது சிங்கள இனவாத அரசும்!

கோபி அன்னன் அவர்களை தமிழர் பகுதிக்குள் அனுமதிக்காததன் வாயிலாக, சந்திரிகா அம்மையார் அவரது நரித்தன அரசியலை மட்டுமா உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்?
இன்னும் பல முக்கிய செய்திகளையும் உணர்த்தியுள்ளார்.

உலகமே கண்ணீர் வடித்த சுனாமி துயருக்கு பின்னால் அம்மையார் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. துயர்துடைப்பு பணிகளில், எந்தவித இன வேறுபாடுகளுக்கும் அல்லது திசை வேறுபாடுகளுக்கும் இடமளிக்காது, விடுதலைப் புலிகளோடு அரசு இணைந்து செயல்படும் என்றும், விடுதலைப் புலிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டது. விடுதலைப் புலிகளும் அரசு ஒத்துழைக்குமானால் இணைந்து செயல்பட இணக்கம் காட்டினர். இன்றளவும் அவ்வாறே செயல்பட்டும் வருகின்றனர். அம்மையார் ஏதோ புலிகளின் மீது பாசம்கொண்டு, நேசம்கொண்டு அல்லது தமிழ் மக்களின் மீதும் அவர்கள் படும் துயர்மீதும் கரிசனத்துடன் இந்த வேண்டுகோளை விட்டுவிடவில்லை. பிறகு என்ன காரணம்?.

விடுதலைப் புலிகள் அமைப்பானது, துயர் நிகழ்வுற்ற அடுத்த நொடிமுதல், உலகே வியக்கும்படி தங்கள் மீட்பு பணிகளையும், புனரமைப்பு பணிகளையும் தொடங்கிவிட்டது. இவர்களது பணிகளின் துரிதத்தையும், நுட்பத்தையும் வெகுவாக பாராட்டி “வாஷிங்டன் டைம்ஸ்” பத்திரிக்கையின் செய்தியாளர் திரு. ஆர்தர் மாக்ஸ் அவர்கள் ஒரு மிகப்பெரிய கட்டுரை எழுதுமளவுக்கு விடுதலைப் புலிகளின் செயல்பாடு அமைந்துவிட்ட பிறகு, அம்மையாரின் அரசுக்கு அவர்களின் உதவியின்றி வேறு வழியில்லை என்ற கையறு நிலையில்தான் வேண்டுகோள் விடப்பட்டதேயன்றி பிறிதொன்றுமில்லை.

விடுதலைப் புலிகளோடு புனரமைப்பு பணிகளில் இணைந்து செயல்படும் எனும் அறிக்கை ஓர்புறம், தமிழர்களை தீண்டத்தகாதவர்களாய் ஒதுக்குவது மறுபுறம் என நரித்தனத்தின் மொத்த வெளிப்பாட்டையும், நாகரீகமற்ற அரசியல் அழுக்குகளையும் ஒருசேர வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு சாதாரண அனுதாப செய்தியைகூட (இதுபோன்ற கொடிய நிகழ்வுகளின் தாக்கத்திலும்) சிங்களர்களையும், தமிழர்களையும் சமமாக பாவித்து பகிர்ந்தளிக்க இயலாத இந்த சிங்கள அரசுதான், நாளை ஒருவேளை சமாதான நிலை ஏற்பட்டு, இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்ட ஓர் இடைக்கால அரசு அமைந்தால் வடக்கையும், தெற்கையும் இரு கண்களாக பாவித்து நாட்டின் வளத்தையும் நலத்தையும் பகிர்ந்தளிக்கப் போகிறார்கள். என்னே இவர்தம் இழிநிலை?

அம்மையாரின் இவ்விருமுக வேடம், புலிகளை பொருத்தமட்டில் எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதைக் காட்டிலும், ஒருவகையில் அவர்களுக்கு உதவவே செய்திருக்கிறது. அவர்களின் ஒழுங்குமிக்க உள் கட்டமைப்பிலும், நிர்வாக திறனிலும், உலக நாடுகள் புதிய பார்வையை செலுத்த தொடங்கிவிட்டன. இதன் வெளிப்பாடுதான் சுனாமி துயர்துடைப்பு பணிகளில் உதவிகள் புரியும் பல நாடுகளும், அம்மையார் அரசிற்கு பல அழுத்தத்தை கொடுக்க முனைந்திருப்பது.

தமிழ் மக்கள் எண்ணமும் செயலும்!

இலங்கை மண்ணிலும் உலக அரங்கிலும் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் ஒட்டுமொத்த தமிழினமும் மிக ஊன்றி கருத்தில் கொண்டு செயல்படவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
அம்மையார் அரசு மட்டுமல்ல, இனி வரும் எந்த இலங்கை அரசும், தமிழர்களை முழுமையாக புறம்தள்ளிவிட முடியாது. இதுகாறும் இலங்கை மண்ணில் இன்னலுற்று வரும் தமிழர்தம் வாழ்வு மீண்டும் தன் பழம் பெருமையோடு புகழ்மிகு வாழ்வாய் மலரும் காலம் கனிந்துவரும் இவ்வேளையில், ஈழத் தமிழ் மக்கள் ஒன்றை மிக ஊன்றி சிந்தித்து தெளிவடைய வேண்டும்.

அன்றும், இன்றும் தமிழனிடம் எவையில்லை? ஒன்றே ஒன்றைத்தவிர? அன்பä அறம், மறம், பணிவு, துணிவு என அனைத்துமுண்டு. ஆனால் எல்லாக் காலங்களிலும் தமிழனின் ஒற்றுமை மட்டுமே ஊசலாடிக்கொண்டிருந்து வருகிறது. அனைத்தும் இருந்தும் தமிழர்களாகிய நாம் “நெல்லிக்காயென” சிதறுன்டு அல்லலுறக் காரணத்தை ஈராயிரமாண்டுக்கு முன்பாகவே, “பல் குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்” என நம் பொய்யா மொழியார் புகன்றார். எனவே இனியேனும் அனைத்து வகை உட்பகைகளையும் ஒழித்து ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழர்தம் நல்வாழ்வு உயர விழைவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

2 comments:

Thangamani said...

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்!

Mannai Madevan said...

அன்புமிக்க திரு தங்கமணி அவர்களே!

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.
நான் வலைதளத்திற்கு, ஏன் எழுத்துலகுக்கே புதியவன்.
ஆவல்கள் அதிகமுள்ளன. செலவிட நேரம் ஒதுக்க முயல்கிறேன்.
தங்களின் வலைதளமும், எழுத்துக்களும் மிக நன்றாக உள்ளன.

என் வலைதளத்தில் உங்கள் வலைதளத்தை இட்டுள்ளேன்.

நன்றி.

மன்னை மாதேவன்