Thursday, February 17, 2005

மானுடம் போற்றுவோம் !

- மன்னை மாதேவன்
இயற்கை நம் இதயத்தை எரியீட்டி கொண்டு தாக்கிவிட்டது. இதுநாள்வரை நம் எல்லோராலும் அன்புடன் “அம்மா” என்று அழைக்கப்பட்ட அலைகடல், நம்மீது நெறுப்பாற்றை வீசி விட்டது. நம் வாழ்நாளில் பாரத
பூமியிலும், இலங்கையிலும், அருகாமை நாடுகளிலும் இதுவரை கண்டிராத கோரத் தாண்டவத்தை நடத்திவிட்டு இப்பொழுது சற்று அமைதியும் அடைந்துவிட்டது. தம் வாழ்க்கையில் சேகரித்த அனைத்து செல்வங்களையும், நொடிப்பொழுதில் இழந்து கதறியதை காட்டிலும், தம் குலக்கொழுந்துகளை தம் கண்முன்பாகவே காலனுக்கு வாரிக் கொடுத்துவிட்டு துடித்தத் துடிப்பின் காட்சிகள், எவ்வளவுதான் முயன்றாலும் மறக்க இயலாமல் தவிக்கிறோம். நம் கண்கள் இனி இப்படி ஒரு காட்சியை காணாமல் அமைய இறைவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு வழிகள் என்ன உள்ளது என மனம் குமைந்துகொண்டிருக்கிறோம்.

இதனைத் தொடர்ந்து, உலக உருண்டையின் பல மூலைகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டுவருவது, இத்தனை சோகத்திலும் சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. பல தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும் இயன்ற வகையில் உதவ முனைப்புடன் செயல்படுவதும் புண்பட்ட நம் இதயங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் புனித பணிகளாக தெரிகிறது. இத்துயர் நிகழ்வு தொடர்பாக பல ஊடகங்கள் வாயிலாக நாம் பெற்ற செய்திகளின் சாரத்தை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இலண்டன் மாநகரில் ஒரு தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியை காட்டினார்கள். அங்கு கல்வி பயிலும் இலங்கையைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், வீதிகளில் தம் கரங்களில் உண்டியல் ஏந்தி பலரிடமும் துணிவுடன், எந்த தயக்கமும் காட்டாமல் உதவி கோருவதும், அவர்களும் எந்தவித அலட்சியமும் காட்டாமல், மிகவும் கனிவுடன் பணமிடுவதும் மிகவும் போற்றுதலுக்கு உரியதாய் இருந்தது. இவற்றுக்கு மேலாக, பகல் முழுதும் அலைந்து திரிந்து திரட்டிய ஆடைகளை ஒழுங்குபடுத்தி, அவைகளை ஊர்திகளில் ஏற்றிச் செல்ல ஏதுவாக, இரவுமுழுதும் கண்துஞ்சாது, அட்டை பெட்டிகளில் இடுவது, காண மிகவும் நெகிழ்சியாக இருந்தது. இவர்களை, இச் செயலில் சரியாக ஈடுபடுத்திய அந்த நிறுவனத்திற்கு நம் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்தே ஆக வேண்டும். செய்ய வேண்டிய உதவியை, சரியான நேரத்தில், சரியாக செய்தார்கள் என்பதற்காக மட்டுமல்ல, இதில் நாம் கவனத்தில் கௌள வேண்டியது, கல்வி பயிலும் போதே அந்த சிறார்களின் இதயத்தில் இந்த ஈரக்கசிவை உருவாக்கி, துயருறும் பிறர்க்கு உதவும் மாண்பை வளர்த்தார்கள் என்றால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகையில் சமுதாயத்திற்கு எவ்வளவு பயனுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதையும் எண்ணி பாராட்ட கடமைப்பட்டவர்களாவோம்.

வெக்டோன் தெலைக்காட்சி…அதில் ஒரு காட்சி. அந்த காட்சி வந்துசெல்வது அரை நொடிக்கும் குறைவான கால அளவினதே, ஆனால் அக்காட்சி உலகுக்கு பறைசாற்றும் செய்தியின் சாரம், ஆகா! எத்துனை துயர்வரினும், இடர்வரினும், இன்னும் மானுடம் மட்டும் முழுமையாக செத்தொழிந்துவிடவில்லை என்பதுதான். அக் காட்சியை, எவரேனும் ஓர் ஓவியர் கண்டிருப்பாரானால், அவரது தூரிகை இந்நேரம் “மோனலிசாவிற்கு” இணையான மற்றுமொரு ஓவியத்தை படைத்திருக்கும். அப்படி என்னதான் அந்த காட்சி? இலங்கைக்கே உரித்தான இயற்கை சூழ்ந்த ஓரிடம். அருகில் உள்ளது ஒரு சிற்றாறு. அந்த ஆற்றிலிருந்து தண்ணீர் மனித உயிர்களை விழுங்க அலைகடலென ஆர்ப்பரித்து வருகிறது. எல்லோரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அதி வேகத்துடன் சிதறி ஓடுகிறார்கள். அந்த அலைகளில் இருந்து ஒரு சிறிய மீன் கரையில் தூக்கி எறியப்படுகிறது. அம் மீனுக்கும் ஏற்படபோகும் அவலங்கள் தெரியுமோ என்னவோ..அதுவும் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள துடிக்கிறது. இக்காட்சி உயிருக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருக்கிற அந்த மனிதரின்..அல்ல அல்ல மாமனிதரின் கண்களில் படுகிறது. ஓடிக்கொண்டிருந்தவர், திரும்பிவந்து குனிந்து, அந்த மீனை கரங்களால் தண்ணீருக்குள் தள்ளிவிட்டு பின் முன்னிலும் வேகமாக ஓடுகிறார். இதிலென்ன அப்படி பெரிய சிறப்பு இருக்கிறது என எண்ண விழைபவர்கள், தயவுசெய்து உங்கள் இதயத்தை கழட்டி உடனடியாக சலவைக்கு அனுப்பிவிடுவது நல்லது. காரணம்.. தனது உயிருக்கே போராடிக்கொண்டிருக்கும் அந்த நேரத்திலும், ஒரு சிறிய மீனின் உயிர் துடிப்பை ஒருவரால் உணர முடிகிறதென்றால், அவர் சாதரண மனிதராக இருக்க இயலாது. “வாடிய பயிரை கண்டபோதெலாம் வாடினேன்” என்ற வள்ளல் பெருமான்தான் அவர் வடிவம் கொண்டார் என நான் உளமாற நம்புகிறேன். இதில் இதயத்தை இன்னும் நெருடிக் கொண்டிருக்கின்ற மன உலச்சல், அந்த மாமனிதரின் உயிரை சுமக்கின்ற பேற்றை, இன்னும் இந்த உலகு பெற்றிருக்கிறதா என்பதுதான். அவர் இன்னும் கோடி காலம் வாழ வேண்டும் என அவர் திசை நோக்கி தொழுகிறேன்.

இவையெல்லாம் இந்த மண்ணில் மனித நேயம் புல்லாய், பூண்டாய் மறையாமல் இன்னும் நின்று நிலவுவதில் உள்ள பொருளை உணர்த்தி நின்றாலும் காட்சிகளும் செய்திகளும் இத்துடன் நின்றுவிட வில்லை. நாணயத்தின் மறுபக்கத்தைப்போல், நாம் அனைவருமே நாணமுறச் செய்யும் பிற செய்திகளும் இருக்கத்தானே செய்கிறது.

சற்று நாட்களுக்;கு முன்பாக ஒரு செய்தியை படித்தேன். இலங்கையில் இருந்து அனைத்தையும் இழந்து, தமிழக மக்களாகிய நாம் ஒன்றும் அன்னியர் அல்லவே, ஏதோ ஒரு வகையில் உறவுகள்தானே என்ற அதிதமான நம்பிக்கையோடு, நிர்கதியாய் இங்கு வந்தவர்கள், இன்று அவர்கள் நாட்டில் ஏற்பட்டுவரும் மாற்றத்தைக் கண்டு, இனியேனும் நம் மண்ணில் சென்று அமைதியாக வாழ வழி ஏற்படாதா என்ற ஏக்கத்தோடும், ஆவலோடும் மீண்டும் இலங்கை செல்ல முயல்கிறார்கள். அவர்கள் அப்படிச் செல்வதானால், அரசாங்கத்திற்கு மனு செய்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதிபெற்று பின் முறையாக செல்ல வேண்டும். “அரசாங்கமும் மனுவும்” – நாம் அறியாததல்ல. “உங்கள் மனு பரிசீலனையில் உள்ளது” என்னும் அரசாங்க தாக்கீது சிலவேளைகளில் நம் தலைமுறைக்குள் வந்துவிடலாம். இந்த கால தாமத அச்சத்தாலோ அல்லது அறியாமையாலோää விரைவாக சென்றுவிடலாம் என குறுக்கு வழிகளை தேடுகிறார்கள். இது ஒன்று போதாதா சில புண்ணியவான்கள் இடைத்தரகர்களாக, ஏஜண்டுகள் என்ற பெயரில் முளைப்பதற்கு. இந்த ஏஜண்டுகள் அவர்களிடம் உள்ள கைப்பொருளையெல்லாம் கறந்தபின்னும், குறைந்தபட்சம் அவர்களை அவர்கள் நாட்டுக்காவது அனுப்புகிறார்களா என்றால் அதுதான் இல்லை. அவர்களிடையே உள்ள தெழில் போட்டியில், காவல்துறையிடம் ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுத்து விடுவதும் அல்லது முழமையாக ஏமாற்றிவிடுவதும், மீண்டும் அவர்கள் கூண்டில் அடைப்பட்ட கிளிகளாக அகதிகள் முகாமில் முடங்கிவிடுவதும், என்ன கொடுமையிது?. துயரக் கடலிலேயே வாழும் இந்த மக்களிடமும் எத்தி பிழைக்கும் அந்த புல்லுருவிகள் உண்மையில் மனிதர்களா? இதயமென்றால் என்னவென்றே தெரியாத விலங்கினங்களா என எண்ணத்தோன்றுகிறது அல்லவா? அவசரப்பட்டு விடாதீர்கள்..இவர்களையும் விஞ்சுகிறது அடுத்த செய்தி.

வேளாங்கண்ணி… காவல்துறை என்பதுக்கும் மேற்பட்டோரை கைது செய்கிறது. இவர்கள் செய்த காரியமென்ன? மனித இனமே வெட்க்கித் தலைகுனிய வேண்டிய செயல். தன்னை நாடி வந்தோர் குறைகளை எல்லாம் போக்கி அருள்பாலித்து வரும் அந்த “அன்னைக்கு” முன்பாகவே ஆயிரமாயிர உயிர்களை தன் கொடிய வாயில் போட்டுக்கொண்ட அந்த கடல் அரக்கியை காட்டிலும், இவர்கள் செயல் கொடிது, கொடிது கொடிதினும் கொடிது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தோரும், உயிர் நீத்தோரும் அணிந்திருந்த “அந்த சில தங்க நகைகளுக்காக” அவர்கள் அங்கங்களை அறுத்தார்களாம் இப்பாவிகள். அய்யகோ! இவர்களெல்லாம் ஒரு அன்னையின் வயிற்றினின்று உதித்தவர்கள்தானாää மனித இனத்திலாவது சேர்ந்தவர்களா அல்லது சாக்கடைப் புழுக்களா?

இராமகிருஷ்ண பரமஹம்சருடைய கதைகளில் ஒன்று. ஒரு இல்லத்திற்குள் திருடுவதற்கு இரவில் வந்த திருடன், பொழுது புலர்ந்தும் எந்த பொருளையும் எடுத்து செல்லாது, அந்த வீட்டிலேயே எதையோ தேடிக் கொண்டிருக்கிறான். எல்லோரும் அவனைப் பிடித்து, அப்படி என்னதான் தேடுகிறாய் என வினவுகிறார்கள். அதற்கு அவன் கூறிய மறுமொழி, நான் இந்த வீட்டினுள் நுழைந்த போது கால் இடறி என் பெருவிரல் நகம் பெயர்ந்து எங்கோ விழுந்து விட்டது. இரவில் நகத்தை வீட்டினுள் போட்டால் அந்த வீட்டின் செல்வங்கள் எல்லாம் அழிந்து வறுமை வந்து விடுமென என் தந்தை எனக்குச் சொல்லியிருக்கிறார். இந்த வீடு செல்வ செழிப்பால் இருந்ததால்தான் எனக்கு இங்கு திருட வேண்டுமென எண்ணமே வந்தது. எனவே இந்த வீட்டிற்கு வறுமை வந்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் நகத்தைத் தேடிக்கொண்டிருந்து விட்டேன் என்றானாம். திருடன் என்றாலும் அவன் நல்ல எண்ணத்தை மெச்சி அவனை எவரும் துன்புறுத்தாது அனுப்பியதாக கதை. இக்கதையிலிருந்து அன்றைய வாழ்வுமுறையில், குறைந்தபட்சமாகவேனும் சில நியதிகள் நின்று, சமுதாயத்தை காப்பாற்றின என்பதை நாம் காண முடியும். ஆனால் இன்று என்ன நிலை?

சமுதாயம் சில பல நேரங்களில், பெருளாதாரக் குற்றங்கள் புரிபவர்களுக்காக, பரிந்து பேசுவதுண்டு. வறுமை, வளர்ப்புமுறையில் உள்ள குறைபாடு இப்படி பலப்பல கூறுவதுண்டு. ஆனால் உயிருக்கு பேராடுவர்களை பெருட்படுத்தாது வெறும் பெருளுக்காக உறுப்பை அறுக்கும் இவர்களின் கீழ்தர செயலுக்கு சமாதானம் எதுவும் கூற முற்படுவதற்கு பதிலாக இப்படி சமுதாயம் சிதிலமடைவதற்கான காரணங்களை ஆராய முற்படுவது பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இவர்களைப் போன்றோர்களின் மனம் கல்லாய், இரும்பாய் மாறிவிட்டதன் காரணம் என்ன? முன்பெல்லாம் மிகக் கொடியவர்களின் காதுகளில் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக நீதிநெறிக் கருத்துக்கள் புகுந்து உரியத் தருணத்தில் பயன்பட்டன. ஆனால் இன்று இத்தகைய குற்றவாளிகளின் காதுகளில் நன்னெறிச் செய்திகள் புகுவதற்கு எந்தவித சந்தர்ப்பமும் இருக்கிறதா? இப்பணியைச் செய்து கொண்டிருந்த மத ஸ்தாபனங்களெல்லாம் அறக்கட்டளை அமைத்து அரசாட்சி புரிவதிலேயே தங்கள் கவனத்தைத் திருப்பி விட்டன. நீதிநெறிக் கூட்டங்கள் புராண, இதிகாச கதா காலட்சேபங்கள், தமிழ் சொற்பொழிவுகள் இவையெல்லாம் மிகவும் அருகிவிட்டதோடு, நடைபெறும் விவாத மேடைகள், பட்டிமன்றங்கள் போன்றவைகளில் இச்செய்திகள் இடம்பெறுகின்றனவா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அல்லது தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்ற மக்களை எளிதாகச் சென்றடைகின்ற ஊடகங்களிலாவது இத்தகைய மனித மேம்பாட்டுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறதாவென்றால், இல்லையென்றே கூறி விடலாம். இவற்றினுடைய வெளிப்பாடுதான் நாம் சந்திக்கின்ற இந்த அவலங்கள்.

இத்தகைய பொருளாதாரக் குற்றவாளிகள், அவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் சிறைக் கூடத்தைச் சென்று மீழ்கிறார்கள். எனவே குறைந்தபட்சமாக, அங்காவது நன்னெறியாளர்களைக் கொண்டு சிலபல நற்செய்திளைப் அவர்களுக்கு புகட்டுவதின் வாயிலாக இதுபோன்ற மிகத் துயர நேரங்களிலாவது அவர்கள் அணுகுமுறையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என முயற்சிக்கலாமோ என எண்ணுகிறேன்.
எனவே, இவை குறித்து நாம் ஒவ்வொறுவரும் இதய சுத்தியுடன் சிந்திக்க வேண்டுவதோடு, அச்சிந்தனை
நம் “மனிதநேயம்” மேன்மையுற துணைபுரிய வேண்டும் என்பதே என் அவாவாகும்.


**********************

No comments: