Wednesday, February 23, 2005

வந்து கடைத் திறவுங்கள்

- மன்னை மாதேவன்

வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!
உண்மை மதமுரைக்கும் உயர்மாட்சி தெளிந்திலதால்
எல்லையின்றி ஏமாற, ஏகம்பேர் காத்திருப்போம்.
“பகல்நேர பக்தி”- இவ் வேடமிட்டு விடம் விதைக்க,
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

தூய பக்திசெய்து, துயர்நீங்கி இறையடைய - இயந்திர
வாழ்வெமக்கு! இயலவில்லை, பொழுதுமில்லை.
காவி உடையணிந்த கறைபடிந்த “இடைத்தரகர்”
ஆயிரமாய் தேவையிங்கே – அயராது
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

மற்றிங்கே பெருளீட்ட, மா முதல்கள் தேவையுற,
ஒற்றைச் சல்லியின்றி, உதட்டளவில் பக்திசெல்லி
ஊரை அடித்தும் உலை வாயில் இடுதற்கு - இம் மடத்
தொழிலன்றி மற்றெவைதான்? நீர் செய்ய?
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

எங்கள் தலைவரெலாம், உம்மிடத்தில் ஓடிவந்து,
மகிழ்ந்து, நெகிழ்ந்து, மண்டியிட்டுத் தெண்டனிட்டு – உமது
கடைச் சரக்கு, கடைய ரெமக் கிடைப்பதற்கு,
நல்ல விளம்பரத்தை நல்கிடுவர் இலவசமாய்!
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

“முறறும் துறப்பது” அக்காலம், “முத்தமளிப்பது” இக்காலம்.
கொஞ்சுமொழி வஞ்சியர்கள் மஞ்சமதில் கொட்டுமிழ் நீர்,
காட்டிக் கொடுக்காமல் உம் காவியுடை தான் மறைக்கும.
கட்டில் சுகமளிக்கும் உம் காட்டில் மழை பொழியும்!
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

கள்ள பணமதிலே கடவுளர்க்கும் ஓர் பங்கை,
அள்ளி வழங்கிடவே அழுக்கான ஓர் கூட்டம்.
கட்டளை இடு தலைவா! “அறக் கட்டளைகள்” அமைத்திங்கு,
வட்டியுடன் முதலடித்து, வகையாய் நாம் வாழ்ந்திடலாம்.
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

எனக்கு தெரிந்தொருவன், ஏழு கொலை செய்தனவன்.
நல்ல தொழிலாளி, நாணயஸ்தன் - வந்துமக்கு
துணையிருப்பன், வகையாய் எதிரழிப்பன் - உம்
வழியில் குறுக்கிடத்தான் இனி எவர் துணிவர்?
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

அய்யகோ!
“இன்னது செய்கின்றோம்” – என்றரிந்தே செய்கின்றார்.
இவரிட மிருந்துநல் லிறையமுதை காப்பதற்கு
வந்துதிப்போர் எவருளரோ? – என
நொந்தே எழுதிவிட்டேன்.

உண்மை பக்திமார் உளமாற மன்னிப்பீர்!

1 comment:

Mannai Madevan said...

இந்த உள்ளீடு, இவ் வலைப்பூவில் இன்று நான் நிறுவி சோதிக்க முயலும் ஒரு புதிய சேவையை,
(அதாகப்பட்டது.. பின்னூட்டலை மின்னஞ்சலுக்கு தானியங்கு முறையில் அனுப்புதல்) பரிசோதனைப் புரியும் நிமித்தமே!
அன்பர்கள் எவரும் பிறர் இதனை படித்து கருத்துரைத்தனரோ என மயங்கல் வேண்டா…

அன்புடன்
நானே..